என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Sunday, 4 February 2007
கல்யாணத்தில் கலாட்டா
கல்யாணத்தில் கலாட்டா
1997 ஜனவரி 10 குங்குமம்
பசுபதி! இத்தனை கல்யாண கும்பலிலும் சிவஞானம் அவனை கவனித்து விட்டார். திக்கென்றது அவருக்கு! இந்த அழையா விருந்தாளி எதற்கு வந்திருக்கிறான்? இவனை உள்ளே விடக்கூடாதே! யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் மாடியேறி விட்டான்.
சிவஞானத்துக்கு மூச்சிரைத்தது. இதோடு மாடியேறி.... வேண்டாம். கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டும். ரொம்பவும் குழம்பிப் போனார்.
அது சரி. இவனால் என்ன செய்ய முடியும்? அப்படியென்ன குழப்பம் செய்ய... 'அந்த' நினைவு வந்ததும் பகீரென்றது! ஐயையோ! 'அந்த' விஷயத்தை எல்லோர் மத்தியிலும் போட்டு உடைத்தால்... நினைக்க நினைக்க வியர்த்துக் கொட்டியது.
"என்ன மாமா. இங்கு நின்னுகிட்டு இருக்கீங்க? அம்மா கூப்பிட்டுச்சு." அத்தை பையன் சிவசு எண்ணத்தைக் கலைத்தான்.
"சிவசு நீ ஒரு வேலை செய்யேன். மேல வெத்தல பொட்டிய கக்கத்தில வச்சுக்கிட்டு வழுக்கைத் தலையா ஜிப்பா போட்ட ஒருத்தன் இருப்பான். அவன் என்ன பண்றான்னு பார்த்துட்டு வாயேன்."
சிவஞானத்தின் கைகள் நடுங்கின. "என்ன மாமா? ஏதாவது பிரச்னையா?" சிவசு குழப்பமாகப் பார்த்தான். சிவஞானம் மிடறு விழுங்கினார்.
"நீ போயிட்டு வாயேன். பொறவு சொல்லுதேன்." சிவசு சென்ற ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றியது. ஈஸ்வரா! நல்லதையே செஞ்சுக்கிட்டு இருக்கிற எனக்கா இப்படி ஒரு சத்ரு? பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்கதானே? 'அந்த விஷயத்தை' அப்போதே சொல்லியிருந்தால் பசுபதிக்கு வேலையிருக்காதே! இப்போ தெரிஞ்சா ஏதோ வேண்டுமென்றே மறைச்சது மாதிரியல்லவா பேசுவார்கள்? கடவுளே! சியாமளா கல்யாணம் இப்படி சந்தியிலே நிற்கப் போகிறதே.
ஸ்டாப். இந்த கல்யாண சத்திரத்தில் குழப்பங்கள் ஏற்பட இன்னும் சில நிமிடங்கள் பிடிக்கலாம். அதற்குள் பசுபதியைப் பற்றி சில வரிகள். பசுபதிக்கு சிவஞானத்தின் வியாபார வளர்ச்சியில் பொறாமை. ஒரு காலத்தில் அவரோடு பார்ட்னராய் இருந்தவன். நிழலான வியாபார தகிடுதத்தங்கள் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லாததால் கழற்றி விடப்பட்டவன். நிறைய முரட்டு குணம். ஆனால் மூடன். பலவிதங்களில் அவருக்குத் தொந்திரவுகள் கொடுத்து கடைசியில் அவமானப்பட்டுப் போயிருக்கிறான். சில வருடங்களாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்தான். கடைசி பெண் சியாமளாவின் திருமண சேதி கேள்விப்பட்டு அதற்கு அவனால் செய்யக்கூடிய 'உதவிகளை'ச் செய்ய தற்போது வந்திருக்கிறான்.
போதும்! கல்யாணம் நின்று போகும் அளவுக்கு குழப்பங்கள் வந்துவிட்டன. ஓ.கே. ஸ்டார்ட்!
"கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்க. பெண்ணைப் பெத்த அப்பனையே கேட்டுட்டா போச்சு. அவரை வரச் சொல்லுய்யா." ஒரு தாட்டியான அம்மாள் உரக்க சத்தம் போடவும் கல்யாண சத்திரமே ஸ்தம்பித்துப் போனது.
"என்ன பெரியவரே! நான் கேள்விப்பட்டது உண்மையா?"
"நீங்க என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே." சிவஞானத்தின் முகம் வெளிறிப் போயிருந்தது.
"என்னவா? சியாமளா நீங்க பெத்த பொண்ணா? இல்லையா?" அடப்பாவி! பசுபதி! நானே மறந்து போன விஷயத்தை, இதுவரை சியாமளாகூட அறிந்திராத விஷயத்தை இப்படிப் போட்டு உடைத்து விட்டானே!
தலை கிர்ரென சுற்றியது. கொஞ்சம் சமாளித்தவாறே. "அது வந்துங்க... சியாமளா என் பெண்தாங்க. பானு, சரஸ்வதி மாதிரி இதுவும் என் பெண்தாங்க."
தாட்டியான அம்மாள் விடுவதாய் இல்லை. "யோவ். ஏன்யா பொய் சொல்ற. எவளோ கேடு கெட்டவ, அப்பன் பேர் தெரியாத புள்ளைய பெத்து ஒரு அனாதை ஆஸ்ரமத்திலே போடுவா. அதை நீங்க எடுத்து வளர்ப்பீங்க. பொறவு ஜாதி குலம் பார்க்கிற, அதை உயர்வாய் மதிக்கிற, கட்டுக்கோப்பான இந்த ரத்தினசாமி குடும்பத்திலே பெண் கொடுப்பீங்க! என்ன தகிரியமய்யா?"
"அதான் சரி... பெண் சம்பந்தம் பேசும்போது இந்த மாரிய்யா. சம்மதமான்னு ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை சொல்லி இருக்கிலாமில்லையா? இப்ப மட்டும் தெரியாட்டா என்னவாயிருக்கும். எங்க உறவுல காறித் துப்புவாங்க."
சிவஞானத்தால் ஒன்றும் பேச முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டாற்போல் ஆகிவிட்டது. செய்வதறியாமல் கண்ணீர் உகுத்தவாறு மரம் மாதிரி நின்று கொண்டிருந்தார்.
"என்ன கும்பல் இங்கே. வழி விடுங்க." பிள்ளையின் அப்பா ரத்தினசாமி கூட்டத்தை விலக்கி முன்னால் வந்தார்.
"என்னக்கா இங்க பிரச்சனை?"
"கேளுடா. நல்லா கேளு. நம்ம சமூகம் எப்படிப்பட்ட சமூகம். இதில் யாரோ பெத்த பொண்ணை உன் மருமகளா ஏத்துப்பியா? நீ சம்பந்தம் பண்ணப் போற இந்த சியாமளா இவரோட சொந்த மகளில்லே தெரியுமா? மூட்டைய கட்டுடா. குமாருக்கு வேற சம்பந்தம் பார்க்கலாம். பெண் குடுக்க ஆலாப் பறக்கிறாங்க."
ரத்தினசாமி பதிலேதும் சொல்லாமல் நிதானமாய் சிவஞானம் பக்கம் திரும்பினார். அவரது பார்வையில் ஒரு கேள்வி இருந்தது.
"ஐயா. நீங்க பெரிய மனசுக்காரங்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும். ரிஷிக்கும் நதிக்கும் மூலம் பார்க்காதவங்க இந்த பத்தரை மாத்து தங்கத்துக்கு மூலகாரணம் பார்க்கலாமா? அவங்க செஞ்ச தப்புகளுக்கு இவங்க எப்படி பொறுப்பு? சியாமளா பொறந்த குழந்தையா இருந்தப்ப, எப்ப நான் என் தோள்ல எடுத்துப் போட்டுக்கிட்டேனோ அப்பலேர்ந்து அவ என் பெண்தான். அப்பாவோட சொந்த பெண் இல்லேன்னு இன்னி வரைக்கும் சியாமளாவுக்கும் தெரியாது. பானு, சரஸ்வதிக்கும் தெரியாது. அது ஏன்? எனக்கே மறந்துடுச்சுங்க. நான் செஞ்சது தப்புங்களா? அப்படி தப்புன்னா இந்த மாதிரி குழந்தைகளுக்கெல்லாம் விடிவு காலமே இல்லையா?" சிவஞானம் ரத்தினசாமியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கதறிவிட்டார்.
சில நிமிடங்கள் மெளனம் நீடித்தது. ரத்தினசாமி மெளனத்தைக் கலைத்தார். "சிவஞானம். உங்க பெண்தான் என் மருமக. போங்க. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. குறை பெண்கிட்ட இல்லாதபோது நாங்க எதுக்கு பின்வாங்கணும்."
"அக்கா..... கண்டவன் சொன்னதையெல்லாம் கேட்டு மனசைக் குழப்பிக்காதே. குறை எங்கேன்னு பாரு. போ... நேரம் கிக்கிட்டு இருக்குது."
அக்காள் அசைவதாய் இல்லை. "ஏண்டா. நம்ப குல பாரம்பர்யம் என்னாச்சு? நம்ம சாதியிலே ஒரு பயகூட நம்மை மதிக்க மாட்டான்டா. கட்டுக்கோப்பான பரம்பரைடா நம்ப குலம்."
மிக அமைதியான ரத்தினசாமிக்கு சுள்ளென கோபம் வந்தது. "என்ன சொன்ன அக்கா? குலமா... ஆமாம்.... நம்ப குலத்திலே பார்த்து சல்லடையா சலிச்சு எனக்கு கட்டி வச்சியே ஞாபகம் இருக்கா?"
"எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க. அதைச் சொல்ல நான் வெக்கப்படலே. குமாருக்கு அம்மா இல்லேன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். இல்லேங்கிறது உயிரோட இல்லேன்னு அர்த்தமில்லே. அவ இல்லே... அவ்வளவுதான்...அதான்...அவ ஓடிப்போயிட்டா."
ரத்தினசாமி சொல்ல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ரத்தினசாமி தொடர்ந்தார். "அப்போ எனக்கு வசதியில்லே. வந்தவளுக்கு என் வசதி ரொம்ப அசெளகர்யமா பட்டது. குத்திக் குத்திக் காமிச்சா. ஒருநாள் சொல்லிக்காம வீட்டைவிட்டுப் போயிட்டா. யாருகூட போனா? இப்ப அவ இருக்காளா? செத்தாளா? எனக்குத் தெரியாது. ஆனா அவ செஞ்ச ஒரே நல்ல காரியம், குமாரை குழந்தையா எங்கிட்ட விட்டுட்டுப் போனதுதான்?"
அக்காள் எதுவும் பேசவில்லை. "அவளும் எங்க குலத்துப் பெண்தான். ஆனா அவளுக்குத் தங்கமான பையன். பெத்தவங்க செய்யற தப்புகளுக்கு புள்ளைங்க எப்படி பொறுப்பாக முடியும்?"
"அக்கா. அதுக்கு இது சரியாப் போச்சுன்னு சொல்ல வரலே. புள்ளைங்களைப் பாரு. இவரோட விசாலமான தியாக உள்ளத்தைப் பாரு. குலத்தைத் தூக்கிக் குப்பையிலே போடு. வா அக்கா..."
ரத்தினசாமி சிவஞானம் பக்கம் திரும்பி, "என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? தாலி தட்டும் நேரம் நெருங்கிட்டு இருக்கில்லே? வாங்க...வாங்க..."
சிவஞானம் அப்படியே ரத்தினசாமியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். தேற்றிக் கொண்டிருந்த ரத்தினசாமி திடீரென சிவஞானத்தை விலக்கினார்.
"என்ன சம்பந்தி. என்ன ஆச்சு?"
"எங்கேய்யா அந்த ஆளு?" எல்லோரும் பசுபதியைத் தேடினர். எதிர்பாத்தபடியே பசுபதியைக் காணவில்லை. சிவஞானம் புன்னகையுடன் ரத்தினசாமியை ஏறிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
என்னங்க முன்னாடி படிச்ச கதையே திரும்பத் திரும்ப வந்துக்கிட்டு இருக்கு?
Post a Comment