என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Tuesday, 27 February 2007
புது வரவு
புது வரவு
2008 16 மார்ச் தினமலர்-வாரமலர்
வீடே விழாக்கோலம் பூண்டது.
இருக்காதா பின்னே? வந்திருப்பது புத்தம் புதிய ஸ்கூட்டியல்லவா!
செல்லப் பெண் ரம்யா முதன்முதலாய் கொழுத்த சம்பளத்தில் நாளைக்கு வேலையில் சேரப்போகிறாள். இன்றே ஆத்மா வண்டியை டெலிவரி எடுத்துவிட்டான். ஓட்டவந்த ரம்ஸை செல்லமாய் கடிந்து கொண்டான்.
"முதலில் பூஜை. அப்பறம்தான் எல்லாம்."
பாட்டி சந்தன குங்குமம் இட்டு பூமாலை போட, தாத்தா பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பூனைக்குட்டி மாதிரி வண்டியை சுற்றி வந்து அரை மணி நேரம் வெறுப்பேற்றினார்.
பூஜை முடிந்ததோ, ரம்யா ஸ்கூட்டியில் சிட்டாய் பறந்தாள். ஐந்தே நிமிடங்களில் புயலாய் வந்தாள். முகம் முழுவதும் பெருமிதம்.
"அம்மா. என்ன பிரமாதமான பிக்கப். நீ ஓட்டி பாரு. எப்படிப்பா இருக்கு?"
"ஆமா. நான் வரும்போதே கோயிலுக்கு போய்ட்டு வந்தேன். சும்மா சல்லுன்னு வெண்ணெய் மாதிரி வழுக்கிண்டு போறது. முள்ள பார்த்ததும்தான் தெரிஞ்சுது நான் ரொம்ப வேகமா போறேன்னு."
ஆத்மா சந்தோஷ உச்சத்தில் சொல்லிக் கொண்டிருக்க, முகமெல்லாம் பல்லாக ஸ்கூட்டியை பிடித்தாள் மஞ்சுளா.
போனவள் வேதா கிளாஸ் முடித்துக் கொண்டு வந்து, ஸ்கூட்டி அருமை பெருமைகளை மூச்சுவிடாமல் அரைமணிக்கு சொன்னாள்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என்னவோ தாங்களே போய்விட்டு வந்த மாதிரி ஃபீலிங் காட்டினார்கள்.
ஆனால் இவ்வளவு அமர்க்களங்களையும் அமைதியாக புன்சிரிப்போடு ஏ.வி.எம்.சரவணன் ஸ்டைலில் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.
"ஏண்டா ராகவ். இன்னிக்கு உன் ஆபீசுக்கு ஸ்கூட்டிய எடுத்துண்டு போய்ட்டு வாயேன்."
"வேண்டாம்மா. அப்பறமா பார்த்துக்கலாம். நான் டி.வி.எஸ்.50லேயே போய்க்கறேன்."
"ஏண்டா. உனக்கு அதே பழைய மொபெட்தாங்கறதால பொறாமையா?"
"இல்லை தாத்தா. கிட்டதட்ட அஞ்சு வருஷமா நமக்கு மாடா உழைச்ச பழைய வண்டிய புதுசு வந்த உடனே சுத்தமா மறந்துட்டீங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நாம வசதிகள் கொறைச்சலா இருந்த போது முழு குடும்பத்தையும் சுமந்துண்டு அது சுத்தாத இடமே இல்லை. இன்னமும் நல்லாத்தான் ஓடுது. என்ன, கொஞ்சம் பழசாயிடுத்து. அவ்வளவுதான். உயிரற்ற பொருள் ஆனாலும் அதுல நம் உணர்வுகள் கலந்திருக்கு தாத்தா. நான் வரேன்."
ராகவ் சொல்ல சொல்ல எல்லோரும் வாயடைத்து போனார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
என்ன மெலட்டூராரே.. இப்ப வெல்லாம் வாரம் ஒரு கதை பிரசுரமாகிவிடறமாதிரி இருக்கே..
ரொம்ப சந்தோஷம்.. வாழ்த்துக்கள்..
இந்த கதையில் சொல்லிய உணர்வுகள் நிஜம். என்னுடைய 1995 நிசான் சென் ட்ராவை இன்னும் விக்காமல் இருப்பதற்கு இந்த மாதிரி எண்ணங்களும் ஒரு காரணம்...
"இன்னொரு புது கார் வாங்கலாமே" என்ற வார்த்தையை என் கார் அருகில் நின்றுகூட சொல்லமாட்டேன்..
அன்புடன்,
சீமாச்சு
Post a Comment