என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Saturday, 24 February 2007
இரண்டும் ஒன்று
இரண்டும் ஒன்று
2007 ஜனவரி 14 கல்கி
ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் தெரிந்தவர்கள். நெஞ்சு வரை நினைவிருக்கிறது. ஆனால் யார் என்று உடனே சொல்லத் தெரியவில்லை.
"உங்களை அறிந்திருக்கிறேன். ஆனால் யார் என்று தெரியவில்லை."
"நீயாகவே கண்டுபிடியேன் பார்க்கலாம்." அதற்கும் சிரிப்பு.
ஆஸ்பிடலின் தூக்கலான டெட்டால் வாசனை ராகவனை சங்கடப்படுத்தியது. வலது கையை பார்க்க முடிந்ததே தவிர அசைக்க முடியவில்லை. தலையின் மேல் ஒரு கல்லை வைத்திருப்பது மாதிரி அவஸ்தை. கொஞ்சம் இடுப்புப் பகுதியை அசைக்கலாம் என்று முயற்சித்ததில் 'சுரீர்' என்று மின்னல் மாதிரி ஒரு வலி தண்டுவட நுனியில் புறப்பட்டு கழுத்து வரை வந்தது.
"உங்களை யார் உள்ளே விட்டார்கள். இங்கு யாருக்கும் அனுமதியில்லை."
"சிறப்பு அனுமதி உண்டு"
"சரி, அப்படித்தான் உள் மனது சொல்கிறது. எதற்கு வந்திருக்கிறீர்கள், நீங்கள் இருவரும்."
"இருவரும்?" ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். "நாங்கள் ஒருவர்" என்றார்கள் கோரஸாக. அது ராகவனுக்கு எரிச்சலை தந்தது. கோபமாக வெற்றுப் பார்வை பார்த்தான்.
"சரி. சரி. நாங்கள் இருவர். அப்படியே வைத்துக் கொள்வோம், ஒரு பேச்சுக்கு?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள்.
"என்ன சிரிக்கிறீர்கள். என் கண் முன்னால் இருவரும் தெளிவாக தெரிகிறீர்கள். என் கண்கள் பழுதில்லை. இன்னொரு முறை கெக்க பிக்கே என்று சிரித்தீர்களானால் சத்தம் போட்டு உங்களை வெளியேற்றி விடுவேன்."
சிரிப்பது நின்று கொஞ்சம் சீரீயஸ்னஸ் வந்தது. "ஒரே மூச்சில் இரண்டு கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். இருப்பதும் பார்ப்பதும் வெவ்வேறு நிலைகள்."
"புரியவில்லை."
"மணியும் நூலும் இரண்டாக இருந்தாலும் மாலை ஒன்றுதான் அல்லவா. கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்றல்லவா. சாதாரண மனிதனுக்கு கல் கல்லாகத்தான் தெரியும். ஒரு சிற்பிக்கு அதனுள் இருக்கும் சிலை புரியும். கல் ஒன்று. பார்வை இரண்டு. ஆனால் இரண்டும் ஒன்று."
"சபாஷ். நீங்கள் இருவரும் ஒருவரா? நான் நம்ப வேண்டும். அப்படியானால் நான் இருவரா?"
"ஆமாம். உடல் தெரிகிறது. உயிர் உன்னிலும் உன்னைச் சுற்றியும் இருக்கிறது. அது தெரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே."
ராகவனுக்கு தலை சுற்றியது. "இல்லை. நாத்திகனான நான் உங்கள் ஆத்திக கருத்துக்களை ஏற்க மாட்டேன்."
"அதில் தவறில்லை. இரண்டும் ஒன்றே."
"இதென்ன புது குழப்பம்."
"ஆமாம். ஒன்று இருப்பதாக நம்புபவர்கள் ஆத்திகர்கள். அதை பூஜ்ஜியம் என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். அவ்வளவே. இரண்டும் ஒன்றே."
"நீங்கள் சொல்வது லாஜிக்கலாக இருந்தாலும் என் புத்தி ஏற்க மறுக்கிறது. இருக்கிறது. இல்லை. இவைகள் இரண்டு மட்டும்தான் இருக்கின்றனவா?"
"ஆமாம். கம்ப்யூட்டரில் பைனரி கோட் என்று சொல்லுகிறீகளே. அது என்ன? இரண்டு என்பது பெயரளவுக்குத்தான். அதாவது, ஒன்றுமில்லை என்பதாக பூஜ்ஜியம். இருப்பதாக ஒன்று. இரண்டு இருக்கின்றன. ஆனால் இரண்டு என்ற எண் இல்லவே இல்லை."
"சரி. இதை மெனக்கெட்டு என்னிடம் வந்து சொல்லக் காரணம்? நான் உங்களையும் உங்கள் பேச்சையும் நம்பிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை."
"அது உன் இஷ்டம். உன் கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக ஒரு உண்மையை இல்லை என்று சொல்வது முட்டாள்தனம். சூரியனில் இரண்டு ஹைட்ரோஜன் துகள்கள் ஒன்று சேர்ந்து ஒளியாகிறது. அதுவே பல வண்ணங்களாகிறது. இரண்டு உயிரனுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு உயிரை உண்டாக்குகின்றன. இல்லையென்பது உருவாகும். உருவானது இல்லையென்பது ஆகும். ஆக இரண்டும் ஒன்று."
அப்போதுதான் ராகவன் கவனித்தான். அவர்கள் இருக்கிறார்கள் என்பது புத்திக்கு எட்டியதே தவிர, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர முடியவில்லை. அவர்கள் இருவருமே ஒரே மாதிரி இருந்தார்கள். முகம் வட்டமாக இருந்தது. சில கணங்களில் அவர்களே ஒரு வட்டத்துக்குள் இருந்த மாதிரி இருந்தது. பின் அதுவே நீள் வாக்கில் இருப்பதாகப் பட்டது. மனதுக்கு பிடித்த பிரகாசமான ஜோதி ரூபமாக தெரிந்தார்கள். அவர்களை உருவத்தில் சேர்ப்பதா இல்லை அருவத்தில் சேர்ப்பதா என்ற குழப்பம் இருந்தது.
"எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நீங்கள் பேய்களா? அல்லது நான் செத்துப் போன பின் என்னை அழைத்து போக வந்திருக்கும் எம கிங்கிரர்களா? பேய்களும் எம கிங்கிரர்களும் கோரமாக இருப்பார்கள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அப்படி இல்லையே? யார் நீங்கள்?"
"மரண பயத்தின் கற்பனை வெளிப்பாடுதான் பேய்களும் எம கிங்கிரர்களும். பிறப்பு எப்படி ஒரு நிகழ்வோ அப்படித்தான் மரணமும்."
"அப்படியானால் எனக்கு மரணமா? என் வாழ்க்கை முடியப் போகிறதா? இதோ நான் கத்தப் போகிறேன். நீங்கள் யார். சொல்லுங்கள். என் மன பிரமைதானே?
"கொஞ்சம் நெருங்கி வந்திருக்கிறாய்."
"யார் நீங்கள். எனக்கு பொறுமை இல்லை. சொல்லுங்கள். சொல்லுங்கள். சொல்லுங்கள்."
"சரி. சொல்லும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கிறோம். நாங்கள் யாரா? ஒன்று இல்லை. மற்றொன்று இருக்கிறது. ஆக இரண்டுமாக ஒன்று. அதாவது நீதான் நாங்கள்."
"மை காட். நானா? என்ன விளையாடுகிறீர்களா?"
"இதோ உன் இந்த விளையாட்டு முடிந்து கொண்டிருக்கிறது. ரிலே ரேஸ் மாதிரி அடுத்த ஓட்டத்துக்கான குச்சி உன்னிடமிருந்து எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. நீ நினைப்பது போல் இது முடிவல்ல. சுழற்சியின் ஒரு அங்கம். இப்போது வரை நீ ஒன்று. இனிமேல் நீயான நாங்கள் இரண்டானோம். பிறகு மீண்டும் ஒன்றாவோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். வருகிறோம்."
ராகவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்த இரண்டாவது நொடியில் செத்து போனான்.
மறுநாள் ராகவனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. "ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது" என்றார் ஒருவர். "ராகவனின் உடல் மறைந்தாலும் அவர் அவரது நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்" என்றார் இன்னொருவர். இரண்டும் ஒன்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment