என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Thursday, 1 February 2007
இன்னும் இருபத்துநான்கு மணி
இன்னும் இருபத்துநான்கு மணி
1982 பூண்டி புஷ்பம் கல்லூரி ஆண்டு மலர்
"ஆல் இந்தியா ரேடியோ... மாநிலச் செய்திகள்... வாசிப்பது........"
சரேலென எழுந்தேன். 60 வாட்ஸ் பல்ப் என்னைப் பார்த்து சிரிக்க. மேசை மேல் புத்தகம் விரிந்தபடி கிடக்க..... அதிகாலை நாலு மணிக்குப் படிக்க உட்காந்தவன் மீண்டும் தூங்கிவிட்டேன் போலும்.
"டேய் ரமணா. எவ்வளவு நேரமாகக் கூப்பிடறேன். படிச்சது போதும். இங்கே வாயேன். இன்னிக்கு லீவுதானே. நாளைக்குத்தானே பரீட்சை."
கீழே இறங்கிப்போனேன். பால் பாத்திரத்தைக் கையில் கொடுத்தாள் மன்னி. "பால்காரன் இரண்டு லிட்டர்தான் தந்தான். குழந்தைகள் கொஞ்ச நேரத்துல எழுந்துடும். நீ போய் கடையிலே இன்னும் அரை லிட்டர் பால் வாங்கி வந்துடு. வந்து படி. நாளைக்குத்தானே பரீட்சை? இன்னும் 24 மணி நேரம் இருக்கே!"
நல்ல வேளை நிமிஷத்திலோ அல்லது நொடியிலோ சொல்லாது விட்டாளே!
பால் வாங்கிக்கொண்டு திரும்பினேன். 'இதுவரை கேட்டுக்கொண்டிருந்த' ஆகாஸ்வாணி செய்திகள் இத்துடன் முடிவடைந்தன. ஓ ! ஏழு இருபத்தைந்தா ?
அண்ணா எழுந்துவிட்டிருந்தான். அண்ணாவிற்குப் 'பேஸ்ட்' முதல் 'டவல்' வரை எடுத்து வைத்து விட்டு, அப்பாவுக்கு வெந்நீர் போட்டு விட்டு, அத்தனை பேருடைய துணிகளுக்கும் சோப்பு போட்டுவிட்டுக் குளித்தேன். "ஏ ஆகாஸ்வாணி ஹை" என்றது வானொலி.
"ரமணா, அண்ணா மார்கெட் போகலை. நீதான் சித்த போய்ட்டு வந்துடேன்."
நான் தலையைச் சொறிந்தேன். "மன்னி. நாளைக்குப் எக்ஸாம்."
"நாளைக்குத்தானே? இன்னும் இருபத்து ......." அதற்குமேல் நான் காதில் வாங்கவில்லை.
திரும்பி வந்தபோது அண்ணாவும் மன்னியும் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
"ரமணா, டேபிள் மேலே ரேஷன் கார்டும் பணமும் வைச்சிருக்கேன். போய் ஜீனியும் மண்ணெண்ணெயும் வாங்கி வந்துடு."
அண்ணாவின் கட்டளைக்கு தலையாட்டிவிட்டு மாடிக்குச் சென்றேன். 'மாடர்ன் பாங்க்கிங்' என்னைப் பார்த்து சிரித்தது.
கீழேயிருந்து வந்த கிரிகெட் காமென்டரி சத்தம் என் படிப்பைக் கலைத்தது. என் தம்பி காமென்டரி கேட்டுக் கொண்டிருந்தான். நேர்முக வர்ணனையாளர் எண்ணிக்கைகளைக் கூட சுத்தமான ஹிந்தியில் சொல்லிக்கொண்டிருந்தார். புரியாவிட்டால் என்ன? கையில் டிரான்ஸிஸ்டரை வைத்துக் கொண்டு கிரிகெட் காமென்டரி கேட்கும் இன்றைய 'பேஷனுக்கு' என் தம்பி மட்டும் விதிவிலக்கா?
"டேய்! ரேடியோவை நிறுத்துடா. எனக்கு நாளைக்கு எக்ஸாம்." எனக்குப் பதிலளிப்பது போல டிரான்சிஸ்டர் இப்போது உச்ச ஸ்தாயியை எட்டியது.
நான் ஜீனி வாங்க புறப்பட்டேன்.
ரேஷன் கடையில் ஒரே கூட்டம். சினிமாக் கொட்டகை தோற்றது. எப்படியோ முண்டியடித்து வெற்றிவாகை சூடித் திரும்பினேன். பக்கத்திலிருந்த பெண்கள் பள்ளி விட்டிருந்தது. பச்சை வெள்ளையாய், பெண்கள். பெண்கள். பெண்கள். பீலிபெய் சாகாடாய் புத்தகச் சுமையில் இடை ஒடிய ...
ஓ! மணி ஒன்றாகிவிட்டதா?
இரண்டு மணி ஆனதும், சோப்பு போட்ட துணிகளைத் துவைத்து உலர்த்தினேன். கடிகாரம் நான்கடித்து, காப்பியை நினைவூட்டியது. அண்ணாவின் குழந்தைகளைக் கொண்டு வந்துவிட்ட ஆயா அவள் பங்குக்குச் சுமார் 360 நொடிகளுக்கு 'உதிரிப் பூக்கள்' பற்றி லெக்சர் அடித்தாள்.
படிக்கலாம் என மாடிக்கு போனேன். காலடிச் சத்தம் கேட்டது. நட்டு வருகிறான். நானும் அவனும் சேர்ந்து படிப்பதாகத் திட்டம். ஆனால் ஒரு விஷயம். 'சுஜாதா'வைப் பற்றி ஆரம்பித்தோமோ தொலைந்தோம். அறுத்துத் தள்ளி விடுவான். சரியான நாவல் பைத்தியம்.
"படிக்கலாமா? இன்னும் பதினெட்டு மணிகூட இல்லை" என்றேன் தற்காப்பாக.
"உம்... உம்..." என்று சுரத்தில்லாமல் பதிலளித்தான் நட்டு. 'கனவுத் தொழிற்சாலை'யில் இந்த வாரத்துப் புதிய திருப்பத்தைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் அவனுக்கு.
கீழேயிருந்து அப்பாவின் குரல் கேட்டது. "தங்கம் விலை இறங்கி விட்டது பார்த்தேளா?" "வெங்காயம்கூட இப்ப கிலோ ஒரு ரூபாய்க்குத் தரான்."
'சாய்வு நாற்காலிகளின்' அரசியல் அலசல்கள். நட்டு எழுந்து போய்விட்டான்.
அரசியல் எட்டு மணிக்கெல்லாம் அடங்கியது. வயிறு பசித்தது. கீழே இறங்கினேன்.
"நாளைக்கு எக்ஸாமா?" அண்ணா வரவேற்றான்.
"உம்"
"ஒழுங்காய்ப் படி. காலைல படிச்சையோ? நட்டுவோட ஊர் சுத்தியிருப்பே."
" .... .... .... "
"சரி. சரி. ராத்திரி முழுக்க டயம் இருக்கே. சாப்பிட்ட பிறகாவது போய் படி."
"இதபாருங்கோன்னா. ராத்திரிக்கு சமைக்கலை. ரமணனைப் போய் டிபன் வாங்கிண்டு வரச் சொல்லுங்கோ" எனச் சொல்லிவிட்டு "அமுல் யிடுத்து" என்ற போனஸையும் அறிவித்தாள்.
"போய் வாங்கிண்டு வாடா ... ... ஒவ்வொருத்தன் எவ்வளவோ ஒழைச்சுப்பிட்டுப் படிக்கிறான். பர்ஸ்ட் கிளாஸ் வாங்கறான். நாளைக்குத்தானே எக்ஸாம்? இன்னும் இருபத்து..."
எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். படிக்க உட்காருகிறேன். உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகமும் ரேஷன் கடைக் கூட்டத்தை நினைவு படுத்தி ஆளை அமுக்கியது.
காலண்டரில் தாள் காற்றில் படபடத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment