Sunday, 4 March, 2007

க்ருஹபிரவேசம்


க்ருஹபிரவேசம்

மங்கையர் மலர் - மார்ச் 2007

ராஜாராமன் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம்தான் இருக்கிறது, க்ருஹபிரவேசத்திற்கு. இன்னும் பாதிக்கு மேல் வேலை பாக்கி இருப்பது மாதிரி தோன்றியது. ஆனால் எதிர் ஃப்ளாட்டோ 'இந்தா சாவியை பிடி' என்கிற மாதிரி பக்காவாக இருந்தது.

கதவுகள் வைக்கப்படாத ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததில் கான்ட்ராக்டர் செல்வம் மேலே வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

"என்னப்பா இருந்து இருந்து சக்திக்கும் மீறி ஒரு ஃப்ளாட்டை வாங்கறேன். ஐநூறு பத்திரிக்கைக்கும் மேல வச்சிருக்கேன். எனக்கு பிபி எகிறுது"

"ஸார் எல்லாம் ரெடியா இருக்கு. மூணே நாள்ல பக்காவா ரெடியாயிடும். உங்க கிட்ட ஒரு விசயம் பேசணும்."

"என்ன சீக்கிரம் சொல்லு. அது ஏறிடுச்சி இது ஏறிடுச்சுன்னு எக்ஸ்ட்ரா பணம் கேட்டே, தெரியும் சேதி. என்னால முடியாது. ஆமா, இப்பவே சொல்லிட்டேன்."

"கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததை மொதல்ல கேளுங்க. அம்மா நீங்களும் கேட்டுக்குங்க. அக்ரிமெண்டுபடி மொசைக் தரையும், ரெண்டு பாத்ரூம்களுக்கும் சிமெண்ட் டைல்ஸ¤தான் போட்டிருக்கு. மத்த ஃப்ளாட்காரங்கள்லாம் வழவழா பளபளான்னு ஸ்பார்டெக் டைல்ஸ் போட்டுகிட்டாங்க. ரொம்ப அதிகமில்லே, வித்தியாச பணத்தை மட்டும் நீங்க கொடுத்தா போதும். என்ன சொல்றீங்க?"

ராஜாராமன் கேள்வியாக இந்திராவை பார்த்தார். அதில் வேண்டாம் என்று சொல்லிவிடு என்ற மாதிரியே இருந்தது.

"நீங்க இப்ப ஒடனே சொல்லணும்னு அவசியமில்லே. நாளைக்கு காலைல பத்து மணிக்கு சொன்னா போதும். நான் வியாழக்கிழமை சாவி கொடுத்திடுவேன்."

"வேணாம்பா. நீ அக்ரிமெண்ட் படியே முடிச்சுக் கொடு. எந்த மாற்றமும் வேணாம். இப்பவே வேலைய ஆரம்பி. எனக்கு புதன் கிழமை ரெடியாகிடணும். என்ன சரியா?"

"சரி. உங்க இஷ்டம். மொசைக் போட்ட பிறகு கிரானைட்டுக்கும் மார்பிளுக்கும் ஆசை பட்டீங்கன்னா டபுள் செலவு. ஆமா, சொல்லிட்டேன். கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்லுங்க."

ராஜாராமனோ மறு யோசனைக்கே இடம் கொடுக்காமல் தீர்மானமாக சொல்லிவிட்டு கீழே இறங்கலானார். திரும்பிப் பார்த்ததில் இந்திரா பதிலேதும் பேசாமல் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த முடிவில் இஷ்டமில்லை என்று வெளிப்படையாக தெரிந்தது.

மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது மெதுவாக ஆரம்பித்தாள். "ஏங்க. இவ்வளவு செலவு செஞ்சு வீடு வாங்கறோம். தளம் போடறதுல எதுக்குங்க கொறை வைக்கணும். சரி, வேண்டாம்ன்னே வச்சிக்கிட்டாலும் எவ்வளவு வித்தியாசம்ன்னு கேட்டிருக்கலாம் இல்லையா?"

ராஜாராமன் சிரித்துக் கொண்டார்." இந்திரா. நான் ஏதோ காசை மிச்சம் செய்யணும்னு சொன்னேன்னு நெனைக்கிறையா? இல்லம்மா. என்னோட அப்பா அம்மாவும் உன்னோட அப்பா அம்மாவும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. தங்குவாங்க. அவங்களுக்கு வழவழா தரையெல்லாம் ஒத்து வராதும்மா. நான் வேலை பார்க்கற நர்சிங் ஹோம்ல வர்ற வயசானவங்கள்ல நெறைய பேரு பாத்ரூம்ல வழுக்கி விழுந்து காலை ஒடைச்சிக்கிட்டவங்கதாம்மா. அதனாலதான் சொல்றேன்."

இந்திரா பைக்கில் உட்கார்ந்து கொண்டு வயதையும் மீறி ஒரு கையால் கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

1 comment:

SurveySan said...

நடராஜன், என்னங்க இப்படி போட்டு தாக்கறீங்க.
இன்னும் எவ்ளோ கதைகள் இருக்கு பாங்க்ல? :)