Friday 23 March, 2007

சூடு பிடிக்குது உ.பி. சட்ட மன்ற தேர்தல்

கல்கி 25 மார்ச் 2007

இந்த மாதம் 7ம் தேதி பட்ட பகல் வேளையில் லக்னோ நகரின் மைய்ய பகுதியான ஹஸ்ரத் கஞ்சில் வடகிழக்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தின் நேரெதிரில் சமாஜ்வாடி கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினரான அஃப்சல் பைசல் என்பவர் அவரது எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிகள் எந்தவித தடங்கலும் இன்றி தப்பித்து போயிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கணக்கான மக்கள் புழங்கிக் கொண்டிருக்கும் அந்த நெரிசலான பகுதியில் இந்த படுகொலை துணிகரமாக நடந்திருக்கிறது. இத்தனைக்கும் பத்தே தப்படியில் ஹஸ்ரத் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. லக்னோவில் இது போன்ற கொலை சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்றாலும், இது நடக்கவிருக்கும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல் விக்கெட். இன்னும் இது போல பல விக்கெட்டுகள் விழலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தல் என்றாலே அடிதடி, குத்து, கொலை என்றிருக்கும் இன்னாளில் உ.பி. தேர்தல்தான் இன்னமும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கிரிமினல் பின்னனி கொண்ட அரசியல்வாதிகள். கிட்டதட்ட எல்லா கட்சிகளிலுமே அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இந்த பட்டியலை கொஞ்சம் பாருங்கள். தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதும் உ.பி. மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் 1,176. அதனை உற்பத்தி செய்வதாக ரெயிட் செய்யப்பட்ட தொழிற்சாலைகள் 947. கிரிமினல் பின்னனி உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் 1.64 லட்சம் பேர். பெயிலில் விடமுடியாத அளவுக்கு அரெஸ்ட் செய்ய வேண்டியவர்கள் 3,240 பேர். தேர்தல் காரணமாக சரண்டர் செய்யப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளின் எண்ணிக்கை 1.20 லட்சம். கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் 1,824. போதுமா !

ஏன் இந்த நிலமை ? இதற்கு யர் காரணம்? மக்கள் அரசியல் கட்சிகளை காட்டுகிறார்கள். அரசியல் கட்சிகள் மக்களை காட்டுகின்றன. உ.பி. அரசியலில் ஜனநாயகம் என்பது பெயரளவுக்குதான். தேசிய கட்சிகள் கூட உத்திர பிரதேசம் என்றால் தங்கள் அரசியல் அனுகுமுறைகளை தளர்த்திக் கொண்டு விடுகிறார்கள். என்ன செய்வது? காலத்தின் கட்டாயம் என்ற புளித்துப் போன பல்லவியையே பாடுகிறார்கள். ஒரு காலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த காங்கிரஸ் இன்றைக்கு பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. முலாயம் என்றால் முஸ்லிம். மாயாவதி என்றால் தலித். கல்யாண் சிங் என்றால் ஓ.பி.சி என்ற அளவிற்க்கு உ.பி. அரசியல் சாதி சீழ் பிடித்து புரையோடி போயிருக்கிறது. இந்த அதிகார போட்டியில் ஆட்சி மன்றத்தை கைப்பற்ற எந்த அளவுக்கும் கீழெ இறங்கி வர தயாராக இருக்கிறார்கள் அரசியல்வாதிகள். பலன் ? குத்து, கொலை, ரத்த களறி.

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் உ.பி.அரசியலில் உயர் சாதி வகுப்பினரும், அரச பின்னனி கொண்டவர்களூம்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.அதில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ்காரர்கள். இவர்கள் செய்த பெரும் தவறு, வேறு யாரையும் இவர்கள் வளர விடவில்லை. இவர்களை எதிர்த்து விழ்த்த ஒரு பலமான சக்தி தேவைப்பட்டது. அதுதான் சாதி அரசியல். அதற்கு பலம் சேர்க்க கிரிமினல் பின்னனி கொண்ட குண்டர்கள் தேவைப்பட்டார்கள். இருகரம் நீட்டி அந்த கட்சிகள் அவர்களை வரவேற்றார்கள். அந்த மாதிரி முன்னுக்கு வந்துவிட்ட ஒரு கிரிமினல் அரசியல்வாதியை வீழ்த்த அதன் எதிர் கட்சிக்கு இன்னொரு கிரிமினல் தேவைப்பட்டது. இதற்காகவே அந்த கிரிமினல் பேர்வழியிடம் பயிற்சி பெற்ற இரண்டாம் நிலை கிரிமினல்கள் கொம்பு வீசி விடப்பட்டு அவர்களுக்கு எதிராக களம் நிறுத்தப்பட்டர்கள். இப்படி ஒரு சங்கிலித் தொடராக நடந்த நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறிப் போய், அந்தந்த கட்சித் தலைவர்களே கிரிமினல் பேர்வழிகளுக்கு பயம்படும் அளவுக்கு போய்விட்டது. அளவுக்கு மீறிப் போனால் என்ன ஆகும் என்று பாடம் கற்றுக் கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சரியான பள்ளிக் கூடம் உ.பி. மாநிலம்தான்.

பொது தேர்தலில் கூட இல்லாத அளவுக்கு ஏழு கட்ட தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. அட்டவனை ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 8ம் தேதி வரை நீளுகிறது. மே 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. ஒரு வாரத்துக்கு முன்னால் தலைமை தேர்தல் கமிஷ்னர் வந்த போது காங்கிரஸ் தடலாடியாக தலைமை செயலாளரையும் மாநில டி.ஜி.பியையும் மாற்றுவதற்க்கு தேர்தல் கமிஷன் உத்தவிட வேண்டும் என்று கோரியிருக்கிறது. பி.ஜே.பி. தன் பங்குக்கு கடந்த நான்கு மாதங்களில் மாநில அரசு செய்த அனைத்து பனி மாற்றங்களும் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டிருக்கிறது. தனது சௌக்கர்யத்துக்காக முலாயம் அரசு செய்த பதவி மாற்றங்கள் எவ்வளவு தெரியுமா? நெஞ்சை பிடித்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட பதினோராயிரம்! அனைத்தையும் மறுபரிசிலனை செய்யப்போவதாக சொல்லியிருக்கிறது தேர்தல் கமிஷன்.

பிஹார் மற்றும் மேற்க்கு வங்காளத்திலேயே சிறந்த முறையில் தேர்தலை நடத்தி முடித்திட்ட தேர்தல் கமிஷனுக்கு உத்திர பிரதேச தேர்தல் சரியான சவால்தான். அதற்காக தேர்தல் கமிஷன் எடுத்துள்ள நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன. சாம்பிளுக்கு சிலவற்றை பார்ப்போம். தேர்தல் கமிஷன் 403 சட்டமன்ற தொகுதிகளையுமே சென்ஸிடிவான தொகுதிகளாக அறிவித்திருக்கிறது. அது தவிர கடந்தகால தேர்தல்களை வைத்து தொகுதிவாரியாக விவிரமான ரிப்போர்ட் தயார் செய்து ஒரு மதிப்பீட்டு எண் வழங்கச்சொல்லியிருக்கிறது. அதை வைத்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது அவர்களையும் சேர்த்து ஐந்து பேர்களுக்கு மேல் இருக்க கூடாது. அந் நாளில் நடத்தும் ஊர்வலங்கள் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திலிருந்து 100 அடிக்கு முன்னாலேயே நின்று விடவேண்டும். அந்த இடத்திலிருந்து அலுவலகம் வரை மூன்று கார்களையே பயன் படுத்தலாம். அனைத்து தேர்தல் பணியாளர்களும் கட்டாயமாக புகைப்படத்துடன் கூடிய அதிகாரபூர்வ அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். மாநில போலீஸ் வாக்கு சாவடிக்கு வெளியில்தான் ட்யூட்டி. எக்காரணம் கொண்டும் அவர்கள் வாக்கு சாவடிக்குள் வரக் கூடாது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உள்ள எந்த அரசியல்வாதியும் தேர்தல் ஏஜண்டாகவோ, தேர்தல் பணியை பார்வையிடுகிறேன் என்ற பேர்வழியில் வாக்குக் சாவடிக்கு வருவதோ குற்றம்.

முலாயமை எப்படியாவது டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர காங்கிரஸ் தலைகீழாக நின்ற போது, யாருமே எதிர்பார்காத சமயத்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸ் அடித்த மாதிரி தேர்தல் கமிஷன் உள்ளே நுழைந்து தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட எல்லா அரசியல் கணக்குகளும் தாறுமாறாய் போனது. தனது 42 மாத ஆட்சிகாலத்தில் 22வது முறையாக நம்பிக் கை வாக்கெடுப்பில் 'வெற்றி பெற்று' முலாயம் சிங் 'ஜம்மென்று' அரியாசனத்தில் இன்னமும் அமர்ந்து தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

கிரிமினல்கள் சூழ்ந்த அரசியலுக்கு மத்தியில் ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்கள் சில தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த முறை கூட்டணி இல்லாமல் அரசியல் கட்சிகள் தனித்தனியாக நின்றால் தேர்தல் முடிவுகள் சிக்கலாகவே போகும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை ஒரு பக்கம். உ.பி. தேர்தல் ஒரு பக்கம். பரபரப்புக்கு பஞ்சமில்லை.

No comments: