Wednesday 1 August, 2007

வந்தார் வென்றார் சென்றார்

அமுதசுரபி - ஆகஸ்ட் 2007

"கல்யானமா? நோ சான்ஸ்! என்றுதான் நான் இருந்தேன் என் இளம் வயதில், திரு விஸ்வேஸ்வரனை சந்திக்கும் வரை. 1972ல் அவர் கரம் பிடித்தேன். ஆண்டுகள் பல போயின. இனி விஸ்வேஸ்வரன் இல்லாமல் என் நாட்டிய நாடகங்கள் இல்லை, நானும் இல்லை என்ற நிலைக்கு வந்தேன். இப்படி ஒரு தென்றலாக போய் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை எனக்கு அளித்தாயே ஆண்டவா உனக்கு நன்றி என்று திருப்தி பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் புயலாக வந்தான் காலன். அவரை தட்டிப் பறித்து சென்றுவிட்டான்" என்று கண் கலங்கினார் திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன். சென்ற மாதம் காலமான தன் கனவர் திரு விஸ்வேஸ்வரனின் நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் அவர்.

என்னைப் பற்றியே அதிகமாக ஊடகங்களில் செய்திகள் அதிகம் வந்ததாலோ என்னவோ என் கனவரின் பல சாதனைகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டதும் இல்லை. க்ளாசிகல் கிடாரிலும் ஆப்ரிக்க ஜிப்ஸிகள் வாசிக்கும் ப்ளமிங்கோ கிடாரிலும் அவர் நிபுணர். லஷ்மிகாந்-பியாரேலால், ஆர்.டி,பர்மன் ஆகியோர் இசையமைத்த பல ஹிந்திப் பாடல்களில் அவரது இசை பங்களிப்பு இருந்திருக்கிறது. நான் நாட்டிய நாடகங்களுக்கு அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்த போது, அவர் சென்னைக்கும் மும்பைக்கும் போய் வந்து கொண்டிருந்தார். இங்கு தமிழில் எம்,எஸ்.விஸ்வநாதனில் தொடங்கி இளையராஜா ரஹமான் வரைக்கும் இசையமைத்த பின்னனி பாடல்களுக்கு இசைகருவிகள் வாசித்திருக்கிறார். என்னுடைய பல நாட்டிய நாடகங்கள் வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரனம் இவர் வடிவமைத்த இசைதான்.

பண்டிட் சிவகுமார் சர்மாவிடம் குறுகிய காலத்தில் சந்தூர் இசை கற்றார். அவரே மெச்சும் அளவுக்கு சந்தூரில் கர்நாடக சங்கீதம் வாசிக்கும் திறமை பெற்றார். திடீரென்று வீனை கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார். ஜாஸ் இசையை பற்றியும், சிம்போனி பற்றிய தகவல்களை திரட்டி வைத்துக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருப்பார்.

அவர் மனசு போன வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. 84ல் அவருக்கு ஒரு அட்டாக் வந்தது. இனி அவர் மும்பையில் ஒரு காலும் சென்னையில் ஒரு காலுமாக இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அபோதுதான் எனக்கு தோன்றியது! ஏன் இவரை எனது நாட்டிய நாடகங்களுக்கு பாட வைத்துக் கொள்ளக் கூடாது என்று.

அப்போது தொடங்கி அவரது அந்திம காலம் வரை எனக்கு அவர் ஒரு உமையொரு பாகனாகதான் இருந்தார். நாட்டியம் சம்பந்தமாக எந்த ஊர் போனாலும் அந்த ஊரின் சங்கீதம், இசை கருவிகள் பற்றி தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விடுவார்.

புதுமைகள் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு பசி தூக்கம் இருக்காது. தென்னகத்து ஆண்டாளயும், வடநாட்டு மீராவையும் இனைத்து அருமையான கர்நாடக இந்துஸ்தானி ·ப்யூஷன் வழங்கியிருக்கிறார். சீதாவையும், சாவித்ரியையும், பாஞ்சாலியையும், ஜான்ஸி ராணியையும் இணைத்து ஒரு நாட்டிய நாடகம் உருவாக்கினார். யாருமே அதிகம் கேட்டிராத குலசேகராழ்வார் எழுதிய தேவகியின் புலம்பலை நாடகமாக்கினார்.

கர்நாடக சங்கீதத்திற்கு கமகம்தான் பிரதானம். ஆனால் சந்தூரில் கமகமே கிடையாது. ஆனாலும் அவர் விட்டாரில்லை. சமீபத்தில் திறுவையாற்றில் சந்தூரில் கர்நாடக இசை கச்சேரி செய்தார். ஆனால் எந்த ஒரு பத்திரிகையும் அதை பதிவு செய்யவே இல்லை. தான் வாசித்தோம் என்பதை விட இந்த புது முயற்சி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்தது. என் மரணத்திற்கு பிறகுதான் அதை பற்றி எழுத நேரம் வரும் போலிருக்கிறது என்று சொன்ன போது அதிர்ச்சியடைந்தேன். அப்படிதான் ஆகிவிட்டது" என்று கண்கலங்க சொல்லி முடித்தார் சித்ரா விஸ்வேஸ்வரன்.

No comments: