Monday, 27 August, 2007

கல்வெட்டு


கல்வெட்டு

'டும்,' 'டமால்', 'டுப்', 'டம்', 'டம்', 'டும்,' 'டமால்'. பாறைகள் வெடித்து சிதறின. திடீரென ஒரு தொழிலாளி கத்தினான்.

குரல் வந்த திசையை நோக்கி சுந்தர் ஓடினான். முதலாளி செல்லமுத்துவும் பதட்டத்துடன் பின் தொடர்ந்தார்.

"ஐயா. இங்க பாருங்க. பாறையில என்னென்னவோ எளுதியிருக்குது."

சுந்தருக்கு பார்த்ததுமே புரிந்துவிட்டது! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள்! சிதறியிருந்த மற்ற பாறைகளிலும் கல்வெட்டுக்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினான்.

"அப்பாடி. நம்ம ஆள்படைகளுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே? இவன் சவுண்டு வுட்டதும் பயந்திட்டேன். போடா, போய் மத்த வேலையப் பாரு. என்ன சுந்தரு? ஏதாவது புதையல் மாதிரியா? "

"கிட்டத்தட்ட புதையல் மாதிரித்தான் சார். இவைகளெல்லாம் நம்ம ராஜா காலத்து கல்வெட்டுக்கள். தொல்பொருள் இலாக்காகிட்ட சொன்னோம்னா அவங்க நம்மள பாராட்டுவாங்க. டி.வி.காரங்க பத்திரிக்கைகாரங்க வந்து போட்டோ புடிப்பாங்க. ஒங்கள பேட்டி எடுப்பாங்க."

சுந்தர் மகிழ்ச்சியில் அடுக்கிக் கொண்டே போனான். அவனுக்கு கால்கள் பரபரத்தன.

நீண்ட யோசனைகளுக்கு பிறகு செல்லமுத்து கேட்டார். "சுந்தரு. பாராட்டு, பேட்டியல்லாம் இருக்கட்டும்யா. பணம் எவ்வளவு தருவாங்க?"

அதிர்ந்து போனான் சுந்தர். "நஷ்ட ஈடு நிச்சயம் தருவாங்க சார். தவிர, இவைகள்..."

"யப்பா. இப்பத்தான் கஷ்டப்பட்டு அவனை இவனை புடிச்சி கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன். நஷ்ட ஈட வாங்கிக்கிட்டு நாக்கு வளிக்கறதா? இத மாதிரி நூத்துக் கணக்கில நாட்ல இருக்குதுப்பா. என் கொளுந்தியா கிராமத்து வீட்டாண்ட கொல்ல கக்கூசுக்கு பக்கத்தில ஒரு இருட்டு மண்டபம் இருக்குது. அங்க இத மாதிரி ஏகத்துக்கும் எளுதியிருக்குது. வௌவ்வா புளுக்க வீச்சம் அடிக்கும். அத வுடு. நீ சொன்ன மாரியே நான் போய் சொன்னா என்ன ஆகும் தெரியுமா? வேலை நின்னிடும். போட்டோ புடிப்பானுவ. ஆளாளுக்கு வருவானுவ. இன்னொரு கான்ட்ராக்ட் கெலிக்கற வரைக்கும் மிசினு வாடகை, ஆள் கூலி, உன் சம்பளம், என்னோட வருமானத்துக்கு என்ன வளி?"

செல்லமுத்து கிடுகிடுவென அடுத்த பெரு வெடிக்கு கட்டளையிட்டார்.

"சுந்தரு. நல்லா கேட்டுக்க. நாலு மணிக்குள்ளார எளுத்து இருக்கிற எல்லா கல்லும் தூளாகி லாரில ஏறிடணும். புரிஞ்சிச்சா. துடிப்பான பையனா இருக்காங்காட்டி ஒன்னிய வேலைக்கு வைச்சிருக்கேன். அதிகமா ரோசனை செய்யாம வேலையப் பாரு."

எந்த சிக்கலும் இல்லாமல் மாலைக்குள் வேலை முடிந்த திருப்தியில் வீட்டுக்கு போனார் செல்லமுத்து.

அவர் பேரன் சந்தீப் எதிர் கொண்டு வரவேற்றான்.

"தாத்தா. இந்த ஹிஸ்ட்டரி ரொம்ப போரு தாத்தா. அக்பர் குளம் வெட்டினாராம். சாலைகள் ஓரத்தில மரம் நட்டாராம். இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் வேர்ல்டுல இதுக்கு என்ன தாத்தா அவசியம்?"

தாத்தாவுக்கு ஏற்ற பேரன்!

2 comments:

senthilalagu said...

எனக்கும் வரலாறு சுத்தமா பிடிக்காது. Past is Pastனு ஒரு ஆங்கில பழமொழி உண்டு. அது மிகவும் சரி இல்லையா?? வரலாறு மிகவும் interesting ஆகத் தான் இருக்கும் ஆனால் அது waste of time. சினிமா படம் மாதிரி.

பாலராஜன்கீதா said...

செப்டம்பர் 5, 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடன் வார இதழில் தங்களின் சிறுகதை "ஒரு பொண்ணு... ஒரு பையன்" வந்துள்ளது.
வாழ்த்துகள்