Friday 7 September, 2007

மெலட்டூர்-ஒரு அறிமுகம்

அமுதசுரபி - செப்டம்பர் 2007

திருப்பதியில் போய் மொட்டைத் தலையனைத் தேடு என்றால் எந்த அளவுக்கு சிரமமோ அந்த அளவுக்கு கடினமானது தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் அச்சுதபுரம் என்ற புராண பெயர் கொண்ட கிராமங்களை கணக்கிடுவது. கிருஷ்ண தேவராயர் வழி வந்த தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் பெயரில் அங்கு உருவான கிராமங்கள் எண்ணிலடங்கா. அவைகளில் தஞ்சையிலிருந்து 20 கி.மி. தூரத்தில் உள்ள மெலட்டூர் என்ற கிராமம் மிக முக்கியமானது. தெலுங்கு பிராமணர்களுக்காக அச்சுதப்ப மன்னரால் தானமாக கொடுக்கப் பட்டதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பெரு மெலட்டூர் என்ற ஒரு பெயரும் முன்பு இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

நவீன காலத்திற்கு ஏற்ப எப்படி சண்டிகர் நகர் உருவாக்கப் பட்டதோ அந்த மாதிரி அந்த காலத்தில் ஒரு முழுமையான கிராமமாக மெலட்டூர் உருவாகியிருக்கிறது. ராமபிரான் அனிலின் முதுகில் முன்று கோடுகள் போட்ட மாதிரி மூன்று அழகான அக்கிரஹாரத் தெருக்கள். ஊரின் கிழக்கே சிவன் கோயில், மேற்கே பெருமாள் கோயில், தெற்கே பிள்ளையார் கோயில். ஊர் எல்லை தாண்டி அய்யனார் மற்றும் திரௌபதியம்மன் கோயில்கள். ஊருக்கு வெளியே அரை கிலோ மிட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாறு. ஊரை சுற்றி திசைக்கு ஒன்றாக குளங்கள். நான்கு திசைகளிலும் வயல் வெளிகள். அவைகளுக்கு நீர்பாசனம் அளிக்க வெற்றிலை நரம்புகளாய் பரந்து விரியும் வாய்கால்கள். கேட்கும் போதே ஜில்லென்ற பசுமையான கிராமம் உங்கள் மனதில் வந்து போகும்.

ஊரின் மிக புராதன கோயிலாக உன்னதபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. காவிரியின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுக்கி மண்ணில் பாதி புதையுண்டு கிடந்த லிங்கம்தான் மூலவர். ஆற்றில் மிதந்து வந்ததால் முதந்தீஸ்வரர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. ஆலயம் எழுப்பும் போது லிங்க்கத்துக்கு ஆவுடையார் சேர்த்திருக்கிறார்கள். ஆனலும் லிங்கம் நேராக இல்லாமல் சற்று கோனலாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அம்பாளின் பெயர் சிவப்ரியை. சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. கோயில் நிர்வாகம் பிராமணர்களால் நடத்தப்பட்டாலும் மற்ற வர்கத்தினர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. ஒற்றுமையாக ஊர் கூடி தேர் இழுக்கிறார்கள்.

மேற்கே வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார். லஷ்மி நரசிம்மரின் சன்னதியும் இருக்கிறது. சன்னதிக்கு சற்று மேலே ஒரு கண்ணரடி பெட்டியில் நரசிம்மரின் திருஉருவம் கொண்ட முகமூடி ஒண்று இருக்கிறது. இந்த முகமூடியைதான் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தியன்று நடைபெறும் பாகவத மேளா ப்ரஹல்லாத நாடகத்தின் கிளைமாக்ஸில் உபயோகப்படுத்துகிறார்கள். பாகவத மேளா என்பது தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்த வெங்கட்ராம சாஸ்திரிகள் என்பவரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட நாட்டிய நாடக விழாவாகும். அதில் முக்கியமானது ப்ரஹல்லாத சரித்திரம். பாகவத மேளாவில் மேடையேற பெண்களுக்கு தடா. பெண் வேடங்களை ஆண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்தால் விடிகாலை பிரம்ம மூஹ¥ர்த்தத்தில் முடிகிறது. கிளைமாக்ஸில் ஆக்ரோஷமாக நரசிம்மர் தூன் பிளந்து வந்தாலும் அவர் ஹிரண்யனை கொல்வதில்லை. என்னதான் நாடகம் என்றாலும் தன்நிலை அறியாத 'சாமி' வந்திருக்கும் நரசிம்மர் ஹிரண்யன் வேடம் தரித்தவரை நிஜமாகவே காயப்படுத்திவிடக் கூடாது என்பதால் பஜனைகள் பாடி நரசிம்மரை சமாதானப் படுத்தி நாடகத்தை முடித்து விடுகிறார்கள். நாடக விழா ஒரு வாரம் நடக்கிறது. ஹரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, உஷா பரிணியம், ருக்மணி கல்யாணம் போன்ற நாடகள் நடக்கின்றன. பாகவத மேளாவில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கடைசி நாளன்று வள்ளித் திருமணம் என்ற நாடகம் நடக்கிறது. பாகவத மேளா நடைபெறும் நாட்களில் நிறைய வெளிநாட்டினர் வருக்கின்றனர். புரியாத தெலுங்கு நாடகம் என்பதாலும் வருடாவருடம் நடப்பதாலும் உள்ளுர் மக்களின் ஆதரவு மிகக் குறைவு.

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து என்பார்கள். அதனால்தான் என்னவோ கலை என்றாலே கட்சிகள் உண்டு. மெலட்டூரில் இரண்டு பாகவத மேளா கோஷ்டிகள் இருக்கின்றன. ஒரு நரசிம்மரின் முகமூடி இரண்டு பேருக்குமே வேண்டுமென்பதால் நரசிம்ம ஜெயந்தியன்று ஒரு கோஷ்டியும் அதே மாதத்தில் நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரத்திரமான ஸ்வாதியன்று இன்னொரு கோஷ்டியும் நாடக விழா நடத்துகிறார்கள். மெலட்டுரை போலவே சாலியமங்கலம், தேப்பெருமாநல்லூர் கிராமங்களில் பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் நடக்கின்றன.

பாகவத மேளா எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு சற்றும் குறையாதது அரவான் களபலி என்ற தெருக் கூத்து நாடகம். இந்த நாடகம் தஞ்சை மாவட்ட கிராமங்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில்களில் தீமிதிக்கு முதல் நாள் விடிய விடியவும் தீமிதி தினத்தற்று தீமிதிக்கு தொடங்குவதற்கு சற்று முன்னால் வரை நடக்கிறது. திருவண்ணாமலை பகுதி கிராமங்களில் நடைபெறும் படுகளம் மாதிரியே இந்த தெருக் கூத்தும் நடக்கிறது. மஹாபாரத் போர் துவங்குவதற்கு முன்னால் நரபலி கொடுக்க பாண்டவர்கள் அரவாணை தீர்மாணிக்கின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாத திரௌபதி பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும் மன்றாடுகிறாள். திரௌபதியை தேவி என்று அழைக்கிறார்கள். இதிலும் கிளாமாக்ஸில் தேவியின் சாமியாட்டம் இருக்கிறது.

கர்பஸ்திரிகளுக்கு அபயம் அளிக்கும் கர்பஹரக்ஷ¡ம்பிகை கோயில் உள்ள திருக்கருக்காவுர் மெலட்டூரிலிருந்து ஐந்து கி.மி. தொலைவில் இருக்கிறது. அதே மாதிரி தஞ்சைக்கு போகும் வழியில் குருஸ்தலமான தென்குடி திட்டை கோயில் இருக்கிறது. கலையும் ஆன்மிகமும் கலந்த ஒரு உன்னதபுரியாய் இன்றும் திகழ்கிறது மெலட்டூர். விடுமுறை நாட்களில் வேன் எடுத்துக் கொண்டு ஊர் ஊராய் கோயில்களுக்கு விஜயம் செய்பவர்கள் இனிமேல் மெலட்டூரை சேர்த்துக் கொள்ளலாம்.

No comments: