Friday, 18 January 2008

குறும்படத்திற்கான திரைக்கதை - செல்வி

ஒரு அமைதியான அதிகாலை வேளை. விடிவதற்கு சற்று முன்னால் என்று கொள்ளலாம். லேசான பனி மூட்டம் இருக்கிறது. ஒரு நான்கு அடுக்கு மாடி கட்டிடத்தின் வெளித் தோற்றம் தெரிகிறது. முதல் மாடியின் பால்கனி விளக்கு போடப்படுகிறது. இரண்டு தோள்களிலும் ஈரத்துணிகளை சுமந்து கொண்டு பதிமூன்று வயது ஒல்லியான சிறுமி (செல்வி) பால்கனி கதவை திறந்து கொண்டு வருகிறாள். லேட்டாகி விட்டது என்ற பதட்டம் அவள் செயல்களில் தெரிகிறது. மூச்சி வாங்குவதிலும், வழிந்திருக்கும் வேர்வையிலும் அதிகம் வேலை செய்திருக்கிறாள் என்று தெரிகிறது. துணிகளை கொடியில் போட்டுக் கொண்டிருந்தவள், திடீரென சந்தேகம் கொண்டு, குழந்தைகள் எழுந்துவிட்டனவா என்று போய் பார்க்க விரைகிறாள். ஹாலில் ஒரு பாட்டி (70 வயது) கையில் ரிமோட்டுடன் டி.வி.யில் ஆன்மிக நிகழ்சி பார்த்துக் கொண்டு, ஒரு விரோதப் பார்வையுடன் செல்வியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறாள். பெட் ரூம் கதவை லேசாக தள்ளி செல்வி எட்டிப் பார்க்கிறாள். ஏ.சி. சுகத்தில் ஒரு குழந்தை அம்மாவின் மீது கால் போட்டுக் கொண்டும், இன்னொன்று அப்பாவின் மேல் படுத்துக் கொண்டும் இருக்கின்றன. இரண்டு வயதுக்கு உட்பட்ட இரட்டை குழந்தைகள். அம்மாவுக்கு (சுமதி) சுமார் 28 வயதிருக்கும். அவள் கணவனுக்கு 32 என கொள்ளலாம். ஒரு திருப்தியுடன் செல்வி மீண்டும் பால்கனிக்கு வருகிறாள். மிச்ச இருக்கும் சின்ன சின்ன துணிகளை அவசரம் அவசரமாக கொடியில் போட்டு கிளிப்புகள் போடுகிறாள். கடைசியாக ஒரு பெரிய போர்வையை உதறி பால்கனி கட்டையில் போடுகிறாள். எதேச்சையாக இடது பக்கம் பார்க்கிறாள். அவள் கண்கள் அகலமாக விரிகின்றன.

செல்வி : "அப்பா"

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வேகமாக திரும்ப, கீழே இருக்கும் ரோஜா பூந்தொட்டியை கவனிக்கவில்லை. அவள் கால்பட்டு, அது உருண்டு, எதிர் பக்க சுவற்றில் மோதி பெருத்த ஓசையுடன் உடைகிறது.

செல்வி : "ஐய்யோ. அம்மா. ஸ்....ஸ்.... ஆ..."

வலது கால் கட்டைவிரலில் ரத்தம் எட்டிப்பார்க்கிறது. வலிதாங்கமுடியாமல் செல்வி உட்கார்ந்துவிடுகிறாள். கிழவி கத்த ஆரம்பிக்கிறாள்.

கிழவி : "உடைச்சிட்டியா? போச்சு. நாசமா போச்சு. அடியே சுமதி. இங்க வந்து பாரு. நீ ஆசையா ஆசையா வளர்த்த ரோஜாச் செடி மண்ணோடு மண்ணா போச்சு. இந்த மண்ணாங்கட்டி வந்த வேளையிலே எது உருப்படும்"

தூக்க கலக்கத்தோடு புயல் மாதிரி வந்த சுமதி மண் குவியலுக்கு மத்தியில் சோகமாய் சரிந்து கிடந்த ரோஜா செடியை பார்க்கிறாள். ஆத்திரம் கொப்பளிக்கிறது. பளாரென செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். காலிங் பெல் ஒலிக்கிறது.

ஆறுமுகம் (செல்வியின் அப்பா) நிற்கிறார்.

சுமதி : "வாங்க. வந்து பாருங்க. உங்க பொண்ணு செஞ்சிருக்கும் அக்கிரமத்தை. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நேத்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய கொட்டி கிச்சன் முழுக்க அமர்களம். இன்னிக்கி ஒரு பூந்தொட்டி போச்சு. பால்கனி முழுக்க மண்ணு. போச்சு. எல்லாம் போச்சு."

ஆறுமுகம் செயவதறியாது திகைக்கிறார். குனிந்த தலையுடன் செல்வி அழுது கொண்டிருக்கிறாள். சுமதி கத்துவதும் அதற்கு ஆறுமுகம் சமாதானம் சொல்வதும் சத்தமில்லா காட்சிகளாக வருகின்றன. தூங்கி எழுந்து சிரித்த முகத்தோடு செல்வியை நோக்கி ஓடி வரும் இரட்டை குழந்தைகள் வந்து நடக்கும் வாக்குவாதத்தை கண்டு முகம் மாறி செல்வியின் கால்களை கட்டிக் கொள்கின்றன. காட்சி out of focus ஆகி flash back துவங்குகிறது.

ஆறுமுகத்தின் மனைவி படுத்த படுக்கையாக கிடக்கிறாள். கவலையுடன் வாட்ச் மேன் யூனிபார்மில் ஆறுமுகம் அவளுக்கு மருந்தும் மாத்திரையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். செல்வியும் அவள் தம்பியும் அம்மாவை மிகுந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீட்டை வீடு என்றே சொல்லமுடியாது. டின் ஷீட்டால் உருவாக்கப்பட்ட ஒரு ஷெட். ஏழ்மைக்கான எல்லா லட்சனங்களும் அங்கே தெரிகின்றன.

அம்மா : "என்னங்க. சம்பளப் பணம் வந்திச்சா? சேகருக்கு ஏதோ நோட்டு புஸ்தகம் வாங்கனுமாங்க. தெனமும் சொல்லிக்கிட்டு இருக்கான்."

ஆறுமுகம்: "வந்த சம்பளப்பணம் எல்லாம் செலவழிஞ்சு போச்சு, தனம். டாக்டர் பீஸ், எக்ஸ்ரே, மருந்து மாத்திரைன்னு எல்லாம் கரைஞ்சு போயிடிச்சு. இப்ப கைல சல்லி காசு இல்லே."

தனம் : "என்னங்க? தேதி பத்துதானே ஆவுது. அடுத்த சம்பளத்துக்கு இன்னும் இருபது நாளைக்கும் மேல இருங்குங்களே. என்ன பண்ணப் போறீங்க?"

ஆறுமுகம்: "தெரியலே தனம். முதலாளியும் கொடுத்த அட்வான்ஸ் பணமே எக்கசக்கமா இருக்குது. இனிமேலும் அட்வான்ஸெல்லாம் கெடையாதுன்னு சொல்லிட்டாரு. சரி, செல்விக்காவது ·பாக்டரில எதாச்சும் ஒரு வேலை போட்டு கொடுங்கன்னு சொன்னேன். அதுக்கு, செல்விக்கு முதல்ல பதினாலு வயசு ஆகட்டும் அதுக்கப்பறம் பார்கலாம்கிறாரு. அதுவரைக்கும் என்ன செய்யறதுன்னு தெரியல... (கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு) நம்ப செல்வம் ஒரு யோசனை சொன்னான். ஒரு வங்கி அதிகாரி வீட்ல குழந்தைகளை பார்த்துக்கிட்டு வீட்டு வேலை செய்ய ஒரு பொண்ணு ஒன்னு வேணும்ன்னு சொன்னான். அதான்.... செல்வியை அனுப்பி வைக்கலாமான்னு பார்க்கறேன். நல்ல சம்பளம் தருவாங்களாம்.

தனம் : "செல்விதானுங்களே நம்ப வீட்டு வேலையெல்லாம் பார்ர்துக்குது. அதுவும் போய்ட்டா..."

ஆறுமுகம்: "நான் பார்த்துக்கறேன் தனம். இப்ப நம்மக்கு பணம் வேணும். எப்படியாவது. உன்னை பொழைக்க வைக்கறதுக்கு. (கண் கலங்குகிறார்)..... (செல்வி பக்கம் திரும்பி)... செல்வி நீ வேலைக்கு போறியா?

செல்வி : (கொஞ்சம் தயக்கத்துடன்)"அப்பா. காலைல போய்ட்டு ராவுக்கு திரும்பி வர்ற மாதிரின்னா பரவாயில்லேப்பா. அங்கேயே தங்கனும்னா எப்படிப்பா. அம்மா, தம்பி, உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்படிப்பா தனியா இருக்கறது?

ஆறுமுகம்: "இருந்துதாம்மா ஆகனும். நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லே. வீட்டு நெலமை புரியும்னு நெனைக்கிறேன். எல்லோருமே பட்டினி கெடந்து சாவறதை விட கொஞ்சம் மனசை சமாதானமாக்கிக்கிட்டு கஷ்டப்பட்டு காசு சம்பாரிச்சா நல்லதும்மா ஒரு அப்பனா இருந்துக்கிட்டு நான் இப்படி கேக்கறது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்குது.
செல்வி : (அப்பாவின் கைகளை பற்றிக் கொண்டு)"வேணாம்பா. நான் வேலைக்கு போறேன்.
(ஆனால் அவள் கண்களில் அரை சமாதானமே தெரிகிறது.)

Flash back முடிகிறது.

சுமதி: "இங்க பாருங்க ஆறுமுகம். போறும். பேசாம உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போயிடுங்க. ரொம்ப தாங்க்ஸ். நான் வேற ஆள் பார்த்துக்கறேன். இவ கொடுக்கற டார்ச்சர்ல என்னால ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியலை. நேத்திக்கி டயர்டா ஆபீஸ் விட்டு வீடு வந்தா.... கிச்சன்ல எண்ணெயை கொட்டினதில நாலு மணி நேரம் ஆச்சு, எல்லாத்தையும் சரி செய்ய. இவளால ஏற்படற நஷ்டம் இவளுக்கு கொடுக்கபோற சம்பளத்தை விட அதிகம். எத்தனை தடவை சொல்லியாச்சு? ஒழுங்கா வேலைய பாருன்னு. ஏதாவது அவசர வேலையா ஆள் தேடினா எங்கையாவது ஒரு மூலையில நின்னுகிட்டு அழுதுகிட்டு இருப்பா. வேணாம்.... போதும்.... கூட்டிக்கிட்டு போங்க."

ஆறுமுகம்: "அம்மா. கொஞ்சம் பொறுங்க. செல்வி சின்ன பொண்ணு. அவ்வளவு விவரம் பத்தாது. நான் இன்னிக்கு தெளிவா எடுத்து சொல்லிடறேங்க. அரை மணி செல்விய வெளில கூட்டிக்கிட்டு போறேங்க. எல்லாம் சரியாயிடும். அம்மா. நீங்க செய்யற தயவாலத்தான் அங்க என் குடும்பத்துல அரை வயிராவது சாப்பிட முடியுதுங்க. கொஞ்சம் தயவு செஞ்சி...."

சுமதி கொஞ்சம் யோசனை செய்து.... சரி போங்கள் என்று கை காட்ட.... ஆறுமுகம் செல்வியை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார்.

செல்வியால் நடக்கக்கூட முடியவில்லை. விந்தி விந்தி நடக்கும் செல்வியை, மூன்றே மாதத்தில் உதிர்ந்து விழுந்த கருவேலங் குச்சி மாதிரி ஆகிவிட்ட செல்வியை பார்க்க ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலிக்கிறது.

பார்க்கில் காலை வாக்கிங் போகிறவர்கள் பிசியாக போய் கொண்டிருக்கிறார்கள். ஒரளவுக்கு தனிமை கிடைக்கக் கூடிய இடத்தை தேர்ந்தெடுத்து, அந்த பெஞ்சில் தானும் உட்கார்ந்து கொண்டு, செல்வியை உட்காரச் சொல்கிறார். கொஞ்ச நேரம் அமைதி. பிறகு நிதானமாக ஆரம்பிக்கிறார்.

ஆறுமுகம்: "என்னம்மா. உன்னால அங்க இருந்து வேல செய்ய முடியலயா?"

செல்வி நேரடியாக அப்பாவை பார்க்காமல் தலையை குனிந்தபடி...

செல்வி:"இல்லப்பா. அம்மாவையும் தம்பிப்பயலையும் விட்டுட்டு இங்க என்னால இருக்க முடியல. அவங்க வீட்டு ஐயா குழந்தைகளோடு விளையாடுவாரு. உப்பு மூட்டை தூக்குவாரு. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தம்பி ஞாபகம் வருதுப்பா. (லேசாக விசும்பி விட்டு)... அந்த கெளவி வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கு."

ஆறுமுகம்: (தன் இயலாமையை நினைத்து, மனசுக்குள் வெந்து, கொஞ்சம் நேரம் மேலே பார்த்து, பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு) "செல்வி. இங்க பாரு. பொறுமையா இரு. உனக்கு பதிமூனு வயசு ஆயிட்டு. இன்னமும் நீ சின்ன புள்ள இல்லே. அம்மா சீக்காளியா படுத்திருக்கு. என் சம்பளமும் பத்தல. சின்னப் பயலுக்கு போன வாரம் ஒரேயடியா பேதியாகி கிளிச்சு போட்ட நாரு மாதிரி கெடக்கு. நீயும் அங்க வந்திட்டா என்னால எப்படிப்பா சமாளிக்க முடியும்."

செல்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மெல்லியதாக கண்ணீர் முட்டியது. கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு...

செல்வி: "போப்பா. அந்தம்மா என்ன வாளில தண்ணீ எடுத்தார சொல்லறாங்க. மூனு மாடி என்னால தூக்கியாற முடியல. கையெல்லாம் காச்சு போவுது. மீந்து போனதெல்லாம் சாப்பிட கொடுக்கிறாங்கப்பா. அந்த கொளந்தங்க தப்பி தவறி ஏதாவது திங்க கொடுத்திட்டா அந்த கெளவி கத்தி கூப்பாடு போடுது. அடிக்குது."

ஆறுமுகம்: "அப்படியா. நான் தெளிவா சொல்லிட்டு போறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. அடிக்காதீங்கன்னு. நீ புத்திசாலி பொண்ணு இல்லையா. நெலமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா. உன்னால முடியலைன்னா தைரியமா எடுத்து சொல்லிடு. பயப்படாதே. சரியா."

செல்வி விசும்புவதை ஆறுமுகத்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

ஆறுமுகம்: "இன்ணும் மூனே மாசம்மா. மொதலாளி சம்பளத்தை கூட்டி தரேன்னு சொல்லியிருக்காரு. உனக்கும் ஏதாவது வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பொறும்மா." (சொல்லிக்கொண்டே வந்தவர், சட்டென மீண்டும் கண் கலங்கி...) "என்ன கஷ்டம்மா. நம்ம பொழப்பு நாய் பொழப்பு. வேண்டாம்மா. அடுத்த ஜன்மத்துலயாவது நீ கொஞ்சம் வசதியானவங்க குடும்பதுல பொறந்து தொலை. என்ன பாவம் செஞ்சேனோ, உன்னை இப்படி வாட்டுது. நீ சம்பாரிச்சு நாங்க சோறு திங்கனும்கிற அளவுக்கு இப்படி கேவலமா போய்ட்டேனே என்னை மன்னிச்சுடும்மா." (நடுங்கும் கைகளால் செல்வியின் சவலை கைகளை பிடிக்க,)

செல்வி : "என்னப்பா. இந்த பேச்சை இத்தோட நிறுத்துப்பா. வசதி இல்லாட்டாலும் உன்ன மாதிரி அப்பா எனக்கு இனிமே கெடைக்கமாட்டாங்க. அது நிச்சயம். எனக்கு வசதியெல்லாம் வேண்டாம்பா. நீங்க, அம்மா, சேகரு போதும்.... சரிப்பா. இன்னும் மூனு மாசம்தானே. நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போங்க. போறதுக்கு முன்னாடி அந்த கெளவிய பத்தி அந்தம்மாகிட்டே தெளிவா சொல்லிடுங்க... அப்பறம்.... சரி... நான் சமாளிச்சுக்கறேன்..."

பேச்சு அழுகையோடு கலந்து வருகிறது. திமிறி வந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை இனிமேல் அழப்போவதில்லை என்ற மாதிரி பிஞ்சு விரல்களால் வழித்துப் போடுகிறாள் செல்வி. தன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த செல்வியை அப்படியே சில நிமிடங்கள் மௌனத்துடன் அணைத்துக் கொள்கிறார் ஆறுமுகம். மனசு கசங்கிய காகிதம் மாதிரி ஆகிவிடுகிறது.. கால்கள் துவண்டு உடம்பு முழுவதும் ஒரு ஆயாசம் தெரிகிறது.

வீட்டுக்கு திரும்பி வந்ததும் குழந்தைகள் செல்வியை கண்டதும் மகிழ்ச்சியில் ஓலமிடுகின்றன. கிழவி பேச்சற்று ஒரு விரோத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆறுமுகம் கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கார அம்மாவை சம்மதிக்க வைக்கிறார். இவை யாவும் பேச்சற்று மௌன நிகழ்வுகளாக வருக்கின்றன.

செல்வி ஓடியாடி சகஜமாக வேலை செய்வதை திருப்தியோடு பார்க்கிறார் ஆறுமுகம். பிறகு கனத்த மனசுடன் வெளியேறுகிறார். செல்வி பால்கனியிலிருந்து கையசைப்பதில் நம்பிக்கை தெரிகிறது.

சுமதி ஆபீஸ் போய்விடுகிறாள். கிழவி தூங்க போய்விடுகிறாள். குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கின்றன. செல்விக்கு சேகரோடு கிராமத்து பம்ப் செட்டில் குளித்தது ஞாபகத்துக்கு வருகிறது. அது காட்சிகளாக விரிகின்றன. செல்வி சேகரின் முகத்தில் தண்ணீரை வாரி இறைக்கிறாள். அவனும் பதிலுக்கு இறைக்கிறான்.

இங்கே இரட்டை குழந்தையில் கொஞ்சம் பெரிய குழந்தை தண்ணீரை வாரி சின்னதின் மேல் அடிக்கிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அது செல்வியின் பின்னால் ஒளிந்து கொள்கிறது.

அங்கே சேகர் வலது காலை இழுத்து இழுத்துக் கொண்டு ஓடுகிறான். சேகருக்கு மிதமான இளம்பிள்ளை வாதம். ஆனாலும் துரத்தினால் ஓட்டமாய் ஓடுவான். செல்வி அவனை துரத்திக் கொண்டு வருகிறாள்.

இங்கே செல்விக்குள் இருந்த குழந்தை குணம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க, செல்வி அழத்தொடங்குகிறாள். பாத்ரூமை விட்டு விலகி போகிறாள்.யாருக்கும் தெரியாமல் குலுங்கி குலுங்கி அழுகிறாள். சின்ன குழந்தை மெதுவாக வந்து செல்வியை ஏறெடுத்து கவலையுடன் பார்க்கிறது.

குழந்தை : அக்கா. அழறீங்களா?

செல்வி : (கண்ணீரை துடைத்துக் கொண்டே) இல்லையே.... அது வந்து.... வந்துசும்மா.... வா... குளிக்கப் போகலாம்.

அதற்குள் பெரிய குழந்தையும் வந்து செல்வியின் கையை பிடித்துக் கொள்கிறது. இரண்டு குழந்தைகளையும் பெரிய மனுஷித்தனமாய் நம்பிக்கையுடன் செல்வி பாத்ரூமை நோக்கி நடக்க.... காட்சி ஒளியிழந்து முடிகிறது.

------------------------------------------------------------------------------

செல்வி என்ற தலைப்பில் 25 ஜூன் கல்கி 2006 இதழில் வெளிவந்த எனது சிறுகதையின் திரை வடிவம் இது. யாராவது இதை குறும்படமாக எடுக்க முயற்சித்தால் நான் அதற்கான உரிமையை தருவேன்.

No comments: