Friday, 3 October 2008

அமுதசுரபியில் எனது ஆன்மீகக் கட்டுரை



சக்தி பீடம் - காமாக்யா

சர்வ வல்லமை படைத்த லோக மாதா சக்திக்கு மொத்தம் ஐம்பத்தியோரு பீடங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரசித்தமாக கருதப்படுவது அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுஹாத்தியில் (தற்போது குவஹாட்டி) உள்ள காமாக்யா எனப்படும் யோனி பீடமாகும்.

அதென்ன ஐம்பத்தியோரு சக்தி பீடங்கள்? (பார்க்க - பெட்டி செய்தி)

ஒரு சமயம் தக்ஷன் என்ற ராஜா ஒரு மஹா யாகம் நடத்தினான். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், அந்த யாகத்திற்கு தன் மாப்பிள்ளையை வேண்டுமென்றே அழைக்கவில்லை. ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். அங்கே சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே உயிரை விட்டாள். சக்தி மரித்த செய்தி கேட்டு சிவன் அங்கே போய், சக்தியின் இறந்த உடலை தன் தோள்களில் தாங்கிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினான். உலகமே கிடுகிடுத்து அழியும் நிலைக்கு போனது. உடனே காக்கும் கடவுளான விஷ்ணு தனது சுதர்ஷன சக்கரத்தினால் சக்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி விடுகிறார். அது ஐம்பத்தியோரு துண்டுகளாக பூமியின் பல பாகங்களில் விழுகிறது. அதில் யோனி என்று அழைக்கப்படும் பெண் உறுப்பு ஒரு மலை மீது விழுகிறது. விழுந்த மாத்திரத்தில் அந்த மலை நீல நிறம் பெறுகிறது. அப்போதிலிருந்து அந்த மலைக்கு நீலாசல் என்றும், யோனி விழுந்த இடம் காமாக்யா என்றும் பெயர் பெற்றன. அந்த பகுதிக்கே காமரூபம் என்ற பெயர் வந்தது. தற்போது அசாம் என்று அழைக்கப்படுகிறது.

குவஹாட்டி பஸ் நிலையத்திலிருந்து காமாக்யா போவதற்கு நிறைய பஸ்கள் இருக்கின்றன. அரை மணி நேர பயணம். நீலாசல மலையில் பஸ் வளைந்து, வளைந்து மேலே போகிறது. பெயர்தான் நீலாசலமே தவிர, மலை பச்சை பசேல் என்று இருக்கிறது.

தற்போது உள்ள கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நரநாராயண் என்ற வங்க மன்னனால் கட்டப்பட்டது. அதற்கு முன்னால் இருந்த கோயில் கட்டிடங்கள் முஸ்ஸீம் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டதாம். இன்றைக்கும் அதே பழம் பெருமையுடன் காமாக்யா கோயில் பக்தர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. துர்கா பூஜா நாட்கள் என்று சொல்லப்படும் நவராத்திரி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது. உலகின் பல மூலைகளிலிருந்து தாந்த்ரீகளும், சன்யாசிகளும் வந்து குவிகிறார்கள். ஒற்றை காலில் நிற்பவர், தலை கீழாக சிரசானம் செய்தவாறே இருப்பவர், பாம்புகள் மாதிரி நீண்ட நீண்ட ஜாடா முடியை கொண்டவர், என்ன கேட்டாலும் வாயே திறக்காதவர் என்று விதவிதமான தாந்த்ரீகளை அந்த சமயத்தில் பார்க்கலாம்.



காமாக்யா கோயிலின் கருவறையில் சக்தி அரூபமாக காட்சியளிக்கிறாள். யோனி பீடமான அந்த பாறையின் மீது ஒரு சிவப்பு துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். அருகிலேயே ஒரு சுனையிலிருந்து நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. கோயில் வாசலிலேயே நமக்கு வழி காட்ட நூற்றுக் கணக்கான பாண்டாக்கள் (நம்ம ஊர் குருக்கள் மாதிரி) காத்திருக்கிறார்கள். நாம் கேட்கிறோமோ இல்லையோ, கைடு மாதிரி முழு கதையையும் சொல்கிறார்கள். பீடத்துக்கு பக்கத்திலேயே பிரதான பாண்டா அமர்ந்திருக்கிறார். நம்மை அழைத்து வந்த பாண்டா ஒரு சில மந்திரங்களை சொல்லச் சொல்கிறார், நாம் கொண்டு போகும் மலர்களையும், பிரசாதங்களையும் தட்சினையோடு சேர்த்து மெயின் பாண்டாவிடம் கொடுத்தால் அவர் நம் தலையை தெட்டு ஆசிர்வதிக்கிறார். பிறகு நாமே குனிந்து ஓடிக் கொண்டிருக்கும் சுனையிலிருந்து நீரை கைகளால் அள்ளி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். அங்கே எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்குகளைத்தவிர எந்த வெளிச்சமும் கிடையாது. மிகவும் குறுகலான படிகள். அதிக நேரம் அங்கே நின்றால் மூச்சு முட்டும். கருவறையின் கூரைப் பகுதியை தவிர மற்றவை யாவும் கற்பாறைகள். கண் மூடி தியானித்து அரூபமான அந்த சக்தியை வழிபடும் போது உள்ளுக்குள்ளே ஒரு பரவசம் கிளைத்தெழுகிறது. காமாக்யாவில் பிரசாதம் என்பது தேங்காய் பத்தை, இனிப்புகள், ஊற வைத்த கொண்டை கடலை போன்றவைகள்தான். சமைக்கப்பட்ட எந்த உணவும் காமாக்யாவில் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

துர்கா பூஜா நாட்களை விட மிக முக்கியமாக கருதப்படுவது ஆஷாட மாதத்தில் வரும் 'அந்த மூன்று நாட்கள்' தான். காமாக்யாவை பூமித்தாயாகவும் வழிபடுகிறார்கள். மானுட பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிலக்கு என்றால் காமாக்யா வருடத்தில் ஒரு முறை மூன்று நாட்கள் 'கோயிலுக்கு வெளியே' அமர்கிறாள். அதற்கு அம்புவாசி என்று பெயர். அந்த மூன்று நாட்களிலும் கோயிலின் பிரதான கதவு இழுத்து பூட்டப்படுகிறது. காமாக்யாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள், அந்த மூன்று நாட்களில் எந்தவித சமைத்த உணவையும் உண்ணாமல், பழங்களையும், நீரில் ஊற வைத்த கொண்டைகடலையும் உண்டு விரதமிருக்கிறார்கள். காமாக்யா கோயிலைத் தவிர சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அந்த மூன்று நாட்களில் பூட்டப்படுகின்றன. நிலத்தில் உழுவதும் அல்லது விதைகளை ஊன்றுவதும் தவிர்க்கப்படுகிறது. கருவரையிலிருந்து நாள் முழுவதும் நிறமற்ற நிலையில் ஓடி வரும் சுனை நீர், அந்த மூன்று நாட்களில் மட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்த நீரை புனிதமாக கருதி, சிவப்பு நிற துணிகளை துண்டு துண்டாக வெட்டி அதில் ஊற வைக்கிறார்கள். பிறகு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். அதை பெறுவதற்கு பலத்த போட்டா போட்டி ஏற்படுகிறது. அதிர்ஷ்டக்கார பக்தர்கள் அதை தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறார்கள்.

நாலாம் நாள், காமாக்யா கோயில் மிகுந்த கோலாகலத்துடன் திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் அவர்களது வீட்டை கழுவி விடுகிறார்கள். அன்று காமாக்யா தனது தீட்டை கழித்து, சுத்தமாகி விடுகிறாள். அன்றைய தினம் மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

காமாக்யா தாந்த்ரீக கடவுள் என்பதால், மிருக பலி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பெரும்பாலும் ஆடுகளே பலியாக கொடுக்கப்படுகின்றன. ஒரு சில பக்தர்களிடம் அரிதான ஐந்து பலி என்ற வழக்கமும் இருக்கிறது. அதாவது ஒரு எருமை, ஒரு ஆடு, ஒரு வெள்ளாடு, ஒரு கோழி, ஒரு மைனா என்று ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து பலி கொடுக்கிறார்கள். ஒரு சிலர் ஐந்து ஆடுகளை, ஐந்து பலியாக கொடுக்கின்றனர். அந்தப் பகுதி முழுவதுமே ரத்தக் களறியாக இருக்கிறது. குட்டி ஆடுகள் சொத் சொத்தென்று அடுத்தடுத்து வெட்டப்படும் போது மனசு கனக்கிறது. காமாக்யாவில் நெருடலான விஷயம் இது ஒன்றுதான்.

சென்னை எக்மோரிலிருந்து குவஹாட்டிக்கு போவதற்கு நேரடி டிரெயின் வசதி இருக்கிறது. இல்லையேல் சென்னை சென்ட்ரலிலிருந்து கொல்கத்தா போய் அங்கிருந்து கிளம்பும் குவஹாட்டி டிரெயினிலும் போகலாம். விமான சேவை கொல்கத்தா வழியாக குவஹாட்டி வரை இருக்கிறது.

பெட்டி செய்தி

51 சக்தி பீடங்கள்

வ. எண் சக்தியின் பகுதி விழுந்த இடம்
1 முதுகு கன்யாகுமரி, தமிழ்நாடு
2 பற்கள் (மேல் பகுதி) சுசீந்திரம், தமிழ் நாடு
3 வலது கை நகை ஸ்ரீசைலம், ஆந்திரபிரதேசம்
4 முகவாய் கோதாவரிதீர், ஆந்திரபிரதேசம்
5 கன்னம் ஜன்ஸ்தான், மஹாராஷ்ட்ரா
6 இதயம் அம்பாஜி, குஜராத்
7 வயிறு பிரபாஸ், குஜராத்
8 கை விரல்கள் ப்ரயாக், உத்திரபிரதேசம்
9 காது தோடு வாரனாசி, உத்திரபிரதேசம்
10 ஸ்தனம் ராம் கிரி, உத்திரபிரதேசம்
11 தலை நகை பிருந்தாவன், உத்திரபிரதேசம்
12 காதுகள் கான்பூர், உத்திரபிரதேசம்
13 பற்கள் (கீழ் பகுதி) பஞ்ச்சாகர், உத்ராஞ்சல்
14 இடது குதம் கால்மதேவ், மத்திய பிரதேசம்
15 வலது குதம் ஷோன் தேஷ், மத்திய பிரதேசம்
16 மேல் உதடு பைரவ பர்வத், மத்திய பிரதேசம்
17 பல் தாந்தேவாட, சத்தீஸ்கார்
18 இடது பாத விரல்கள் பிராட், ராஜஸ்தான்
19 வளையல்கள் மணிபந்த், ராஜஸ்தான்
20 கால் எலும்பு குருஷேத்திரம், ஹரியானா
21 நாக்கு ஜ்வாலமுகி, பஞ்சாப்
22 தொண்டை அமர்நாத், காஷ்மீர்
23 தொப்புள் பிரஜா, ஒரிஸா
24 இடது கை மேல் பகுதி பஹுலா, மேற்கு வங்காளம்
25 வலது கை மணிக்கட்டு உஜானி, மேற்கு வங்காளம்
26 இடது கால் சால்பாரி, மேற்கு வங்காளம்
27 இடது கால் கட்டை விரல் ஜுகாட்யா, மேற்கு வங்காளம்
28 வலது கால் கட்டை விரல் காளிகாட், மேற்கு வங்காளம்
29 கிரீடம் கிரீத், மேற்கு வங்காளம்
30 ஒரு சில எலும்புகள் கன்கலிதா, மேற்கு வங்காளம்
31 கால் மணிக்கட்டு எலும்பு விபாஷ், மேற்கு வங்காளம்
32 வலது தோள் ரத்னாவளி, மேற்கு வங்காளம்
33 கால் எலும்பு நல்ஹாட்டி, மேற்கு வங்காளம்
34 இரு புருவங்களுக்கு இடை பட்ட பகுதி பக்ரேஷ்வர், மேற்கு வங்காளம்
35 உதடு அட்டஹாஸ், மேற்கு வங்காளம்
36 கழுத்து அணிகலன் சைந்தியா, மேற்கு வங்காளம்
37 யோனி காமாக்யா, அசாம்
38 வலது கால் ராதா கிஷோர்பூர், திரிபுரா
39 வலது கை மேல் பகுதி சந்திரநாத், திரிபுரா
40 புருவம் நைனத் தீவு, இலங்கை
41 கண் நைனா, பாகிஸ்தான்
42 தலையின் ஒரு பகுதி ஹிங்குலா, பாகிஸ்தான்
43 மூக்கு சுகந்தா, பங்களாதேஷ்
44 இடது தொடை ஜயந்தி, பங்களாதேஷ்
45 கழுத்து ஸ்ரீஷாயில், பங்களாதேஷ்
46 உள்ளங்கை ஜஸ்ஸூர்வாரி, பங்களாதேஷ்
47 இடது கை நகை பவானிபூர், பங்களாதேஷ்
48 இடது தோள் மிதிலா, நேபாளம்
49 கால் மணிக்கட்டு குஜ்ஜேஷ்வரி, நேபாளம்
50 நெற்றி கண்டகி, நேபாளம்
51 வலது கை மானஸ், திபெத்

அமுதசுரபி - அக்டோபர் 2008

No comments: