நேற்று பாரதி பிறந்த நாள். நேற்றைய கனவில் பாரதியும், கண்ணதாசனும் வந்தார்கள். உடனே இந்த பதிவு. தமிழ்நாடுடாக் என்ற இனைய குழுமத்தில் நான் சில நாட்களுக்கு முன்னால் எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
பாரதி ஒரு பாடலில் (சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா...) ஒரு ஒற்றை வரியாக சொன்னதுதான் - 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி'. இந்த வரி கண்ணதாசனை கவர்ந்துவிட்டது. எடுத்தார் பேனாவை. மேற் சொன்ன வரியையே முதல் வரியாக வைத்து அருமையான பாடல எழுதினார். பாடல் ஜிவ்வென்று உயரே பறக்கிறது.
எல்லோரும் ஆலமரத்தை அதன் விழுதுகளை சம்பந்தப்படுத்தி உயர்வாகச் சொல்வார்கள். அதாவது, மரம் இற்று போன பிறகும், விழுதுகள் தாங்கும் என்று சொல்லி விழுகளின் மேன்மையை சொல்வார்கள். இங்குதான் கண்ணதாசனின் மாற்று கோண பார்வை விழுகிறது.
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.
வேர்தான் முக்கியம். வாழ்வியலில் இருத்தல் முக்கியமில்லை. வாழ்தல்தான் முக்கியம். விழுதுகள் தாங்குவது வெற்று இருத்தல்.
கண்ணதாசனுக்கு உடனே மஹாபாரத போர் காட்சி ஞாபகம் வந்து விடுகிறது. பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடக்கிறார். அதுவும் ஒரு இருத்தலே. அவர் உத்ராயணம் வருவதற்காக காத்திருக்கிறார். அந்த அம்பு படுக்கையை போட்ட அர்ஜுனனை உலகம் பாராட்டியது. கண்ணதாசன் கொஞ்சம் மாற்று சிந்தனையை ஓட்டினார்.
முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ பேதமை செய்ததடி
பாரதியின் இன்னொரு பாடல்...
காட்டினில் ஒரு அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
அதை மரப் பொந்தினுள் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
என்கிறார். இதில் காடு என்பது அறியாமையின் உருவகம். அக்னி குஞ்சு என்பது அறிவு. மரப் பொந்து என்பது உள்ளம். உள்ளத்தில் ஏற்றிய விளக்கு, காடு முழுவதையும் வெளிச்சமாக்கியது.
பாரதி ஒரு சாகரம். அதில் ஒரு சில முத்துக்களை பார்த்து நாம் அதிசயிக்கிறோம். நீங்கள் ரசித்த வரிகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்...
1 comment:
Hi நடராஜன், குறிப்பிட்டுச்சொல்ல எத்தனையோ வரிகள் இருந்தாலும், இச்சமயம் என் நினைவுக்கு உடனே வந்த வரிகள்,
"காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்.. என் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்.."
தான்.. என்னவொரு கர்வம். அந்த முண்டாசுக் கவிஞனுக்கு என்றும் இல்லை மரணம்.. !
Post a Comment