Thursday 28 February, 2008

தலைச்சன்


இந்த கதை தொடங்கும் காலத்தை எப்படி சொல்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் என்ற கால அளவீடுகள் எல்லாம் ஒழிந்து போய், உயிர் வாழ்தலே ஒரு சவாலாக இருக்கும் ஒரு சூன்யமான காலகட்டம் என்று சொல்ல முடிகிறது. இந்த நூற்றாண்டிலிருந்து குறைந்த பட்சமாக ஆறு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன எனக் கொள்ளலாம். அரசாங்கம், பொருளாதாரம், சமூகம் என்ற வரையறைகள் அற்றுப் போய்விட்ட காலம் என்று சொல்லி உங்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது.

ஏன் இப்படி ஆயிற்று ? அதற்கு பல காரணங்கள்.

சுற்று சூழல் ஆர்வலர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்த உலக நாடுகளுக்கு 2192ல் முதல் அடி கிடைத்தது. நியூஸிலாந்தின் தென் கோடி நகரமான டுநோடினை கடல் கொண்டது. அதற்கு அன்டார்டிக் பனிப்பாறைகள் உருகி வருவதே காரணம் என்றார்கள். அதன் தொடர்ச்சியாக கனடாவின் க்யூபெக் தீவுக் கூட்டங்களில் பல தீடீர் திடீரென கானாமல் போயின. ஒரே மாதத்தில் மாலத்தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கின. பசிபிக் தீவுகள் பலவும் இதே நிலைமைக்கு ஆளாயின. இயற்கை ஒரு பக்கம் வஞ்சித்துக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து மற்ற நாடுகளை பொருளாதார சிக்கலில் லோல்பட வைத்து தங்களின் சுகமான வாழ்க்கையை தொடர்ந்தார்கள். அதன் விளைவாக அரசியல் பகை மேலும் மேலும் வலு பெற்றது. இரான், இராக், வட கொரியா, லெபனான், சிரியா, லிபியா, பிரேசில், பெரு போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து மேலை நாடுகளை நேரடியாக எதிர்க்க ஆரம்பித்தன. உகலளாவிய தீவிரவாதம் ஒரு மாபெரும் தீய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்தாலும், பேரழிவின் ஆரம்பம் 2356ம் ஆண்டு என்று சொல்லலாம். அந்த ஆண்டு, ஒரு உயிரியல் போர் தாக்குதலில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஒரு கோடி பேர் மாண்டார்கள். அதற்கு உடனடி பதிலடியாக இரானின் பாதி பகுதியை அமெரிக்க படைகள் குண்டு வீசி அழித்தன. அதன் பிறகு எல்லாமே கோளாறு. டன் டன்னாக யுரேனியமும் தோரியமும் விண்ணிலும் மண்ணிலும் தன் சாகசங்களை நிகழ்த்தின. சரித்திரத்தில் குறிப்பெழுத அவசியமில்லாவிட்டாலும் நாம் அதனை கடைசி உலகப்போர் என கொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம் விஷமாக போய்விட, உலக சீதோஷ்ண நிலையே நிலை தடுமாறி போனது.

அதன் பிறகு இரண்டே நூற்றாண்டுகளில் கிட்டதட்ட 95% உயிரினங்கள் அழிந்து போய்.... போதும். கதைக்கு வருவோமா ?

மெல்லிய இருட்டின் சில்லவுட்டில் அவர்கள் இருவரும் பெண்கள் என்று தெரிகிறது. இருவரும் வேகவேகமாக எங்கிருந்தோ தப்பித்து வருகிறார்கள் என்பது அவர்களின் பதட்டத்திலிருந்து புரிகிறது. இருவருக்குமே இலைகளும் தழைகளும் உடைகளாக இருக்கின்றன. இருவரில் ஒருத்தி நிறைமாத கர்பிணி. மூச்சு வாங்க சற்று பின்னால் ஓடி வந்தவள் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் கால்பரப்பி உட்கார்ந்து விட்டாள். வலியில் ஓலமிட முன்னால் சென்றவள் ஓடி வந்து அவள் வாயை பொத்தினாள்.

"டேரா, வா. இன்னும் கொஞ்ச தூரம் போய்விடுவோம். உன் அலறல் அவர்களுக்கு கேட்டுவிட்டால் காரியம் கெட்டுவிடும்."

"என்னால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. சிகா, விட்டுவிடு. நடப்பது நடக்கட்டும்."

சிகா ஒரு தீர்மானத்தோடு டேராவை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினாள். சகதியான ஒரு ஓடையை தாண்டி மேட்டில் ஏறத் தொடங்கும் போது டேராவின் அலறல் வேகமெடுத்தது. ஒருவித திருப்தியோடு அவளை அந்த பாறையில் படுக்க வைத்தாள். பரபரவென இயங்கினாள். டேராவின் உச்சபட்ச கத்தலின் தொடர்ச்சியாக, கொஞ்ச நேரத்திலேயே ரத்தமும் சதையும் அப்பியவாறு ஒரு குழந்தை வெளிப்பட்டது.

"என்ன குழந்தை சிகா?"

"தலைச்சன்"

"அப்படியென்றால் ?"

"முதல் குழந்தை பிள்ளையென்றால் அந்த காலத்தில் தலைச்சன் என்று சொல்வார்கள்."

"போச்சு. அப்படியானால் இவர்களின் சட்டப்படி இதை கொன்று விடுவார்களே. என்ன செய்ய ?"

"கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களின் கூட்டத்திலிருந்து தப்பித்து போக முயற்சி செய்வோம். நான் உன் குழந்தையை காப்பாற்றித் தருகிறேன். குழந்தை சோனியாகத்தான் இருக்கிறது. பிழைத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்."

கொஞ்ச தூரம் போய் ஓடையின் அழுக்குத் தண்ணிரில் குழந்தையை கழுவி எடுத்து வந்தாள். பாறையின் இடுக்கில் ஒளித்து வைத்திருந்த இலைப் பசையை எடுத்து டேராவிடம் தின்ன கொடுத்தாள்.

"போதும், இந்த இலைப் பசை வயிற்றை குமட்டுகிறது. கிழங்குமாதிரி எதுவும் கிடைக்கவில்லையா ?"

"பிறகு தருகிறேன். அவர்களின் சேமிப்பிலிருந்து திருடி வைத்திருக்கிறேன். இப்போதைக்கு பிழைக்கும் வழியைப் பார். அவர்கள் தேடி வருவதற்குள் நாம் வெகு தூரம் போய்விட வேண்டும்."

சிகா குறிப்பிட்ட 'அவர்கள்' கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். ஆற்றங்கரையை ஒட்டி ஆண்களும் பெண்களுமாக சுமார் இருபது பேர் நிறுத்த வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகளும் வாயும் கொடிகளாலும் தழைகளாலும் கட்டப்பட்டிருந்தன. கூட்டத் தலைவன் ஜோடோ அமைதியாக வந்து அவர்கள் எதிரே வணங்கினான்.

"நம் நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நம் குறிக்கோள் இந்த மனித சமுதாயத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே தவிர நாம் வாழ வேண்டும் என்பது அல்ல. நீங்கள் பசியில் வாடி செத்துப் போவதைவிட இப்போது ஆற்றில் மூழ்கி செத்துப் போய்விடுவதே நல்லது. உணவு கையிருப்பு ரொம்பவும் குறைந்து விட்டது. அனைவரும் ஒட்டு மொத்தமாக செத்துப் போவது தவிர்கப்பட வேண்டும். வயதான ஆண்களான உங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதே மாதிரி அளவுக்கு அதிகமாகவே பிள்ளை பேற்றை பெற்று நலிந்து போய்விட்ட பெண்களான உங்களாலும் எந்த பயனும் இல்லை. எனவே உங்கள் சம்மதத்தோடு உங்களை ஆற்றில் தள்ளிவிட உத்திரவிடுகிறேன். சரியா ?"

ஜோடோ அவர்களை உற்று பார்த்தான். கொஞ்சம் மிரட்சியோடு அவர்கள் தலையாட்டினார்கள். ஆற்றை நோக்கி திரும்பி நின்று கொண்டார்கள். வேறு வழியில்லை. அவர்களுக்கு நேற்று முழுவதும் உணவு தரப்படாததால் மிகவும் களைத்திருந்தார்கள். ஜோடோ ஒருவனுக்கு சைகை காட்டினான். அவன் மரக்குச்சியால் ஒவ்வொருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டான். நதியில் அவர்கள் அடித்து போவதை எந்த சலனமும் இல்லாமல் கூட்டம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

"போச்சு. எல்லாம் போச்சு. நாம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகப் போகிறோம். நம் மக்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். சுகா அவர்களே, ஏன் ஒன்றும் பேசமாட்டீர்களா ?" ஜோடோ இயலாமையில் கத்தினான்.

கண்ணெதிரே உயிர்கள் கொல்லப்படுவதின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் சுகா தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் அதிகம் விஷயம் தெரிந்தவர் அவர்தான். பதிலுக்காக ஜோடோ இன்னும் காத்திருப்பதைப் பார்த்ததும் அவர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தொண்டையை செருமினார்.

"பேச என்ன இருக்கிறது? இனிமேலும் நம் உயிர் வாழ்தல் ரொம்பவும் சிரமம் என்றே தெரிகிறது. முன்பெல்லாம் நம் உணவு சேமிப்பையும், சந்ததிகளை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இளம் பெண்களையும் கொள்ளையடிக்கும் கூட்டம் அடிக்கடி வரும். அவர்கள் எங்கே போனார்கள் ? உயிரோடு இருக்கிறார்களா தெரியவில்லை. இலைப் பசை அதிகம் கிடைக்கிறது. ஆனால் மீன்களும் கிழங்குகளும் குறைந்துவிட்டன. அந்தப் பகுதியில் ஒரு பாறையை விலக்கிப் பார்த்தேன். நீளநீளமாக புழுக்களைப் பார்த்தேன். இனிமேல் அதை சாப்பிட வேண்டியதுதான். நாம் அழிந்து போனாலும் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனவே உலகம் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது என்றே நினைக்கிறேன்."

"முன்பெல்லாம் ஆகாயத்தில் சிவப்பாக ஒன்று வருமாமே. கண்கள் கூசுமாமே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை. எனக்கு முன்னால் இருந்தவர்கள் சொல்ல நான் உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு சூரியன் என்று பெயர். பெரும் தூசு மண்டலம் அதை மறைத்திருக்கிறது. அது எப்போது விலகுமோ அப்போதுதான் நமக்கு வாழ்வு. நேரடியான சூரிய வெளிச்சம் நமக்கு வேண்டும். முதலில் இந்த அழுக்கு மழை நிற்க வேண்டும். அது வரைக்கும் நாம் இழுத்து பிடித்து வாழவேண்டும். இல்லையேல் அது எந்த பகுதியில் தெரிகிறதோ அங்கே போக வேண்டும். அந்த காலத்தில் படு வேகமாக இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கு விண்ணிலும் மண்ணிலும் செல்வார்களாம். இது போல பல விஷயங்கள் வெறும் செய்திகளாக நம்மிடம் இருக்கின்றன. அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை."

"சுகா. கொஞ்சம் பொறுங்கள். ஒரு வேளை அந்த பகுதி நமக்கு கிடைத்துவிட்டால் கூட அங்கு உயிர்வாழ்தல் கடினம் என்று ஒரு முறை சொன்னீர்களே?"

"ஆமாம். அந்த அச்சுறுத்தலும் இருக்கிறது. வேண்டாம். நாம் இங்கேயே இருப்போம்."

ஜோடோ தன் கூட்டத்திலிருப்பவர்களை கணக்கெடுக்கச் சொன்னான். 320 பேர். அதில் நாற்பது பேர்களே பெண்கள். அதிலும் 15 பெண்களே பிள்ளைபேறு பெறக் கூடியவர்கள்.

"மக்களே! கேட்டுக் கொள்ளுங்கள். நமக்கு உடனடியாக இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒண்று உணவு. சாப்பிட நிறைய உணவு வேண்டும். இரண்டாவது, நமது எண்ணிக்கையை அதிகரிக்க பெண் குழந்தைகள் அதிகம் வேண்டும். மீன்கள் அதிகமாக கிடைக்கும் வரை உணவாக இலை பசையே தரப்படும். இனி ஒரு வேளை மட்டுமே கிழங்கு தரப்படும். அரைகுறை வெளிச்சம் இருக்கும் போது எவ்வளவு உணவு கிடைக்குமோ அவ்வளவையும் கொண்டு வாருங்கள். புதிதாக ஏதாவது தென்பட்டால் அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். அது விஷப் பொருளாகவும் இருக்கலாம். சுகாவை கேட்டுச் செய்யுங்கள்."

அப்போது ஒருவன் கொஞ்சம் தயக்கத்தோடு முன்னே வந்து நின்றான். "ஜோடோ! டேராவையும் சிகாவையும் காணவில்லை."

"என்ன ! டேராவை காணவில்லையா? அவளுக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கும்படியாகத்தானே இருந்தது."

"ஆமாம் ஜோடோ. ஆனால் அவள் கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. நம் கொள்கைபடி நான்காவதாக பிறக்கும் ஆண்மகவை மட்டுமே வைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு உரிமையுண்டு என்பதை அவள் ஏற்றுக் கொள்ளமாட்டாளாம். அதற்கு சிகாவும் உடந்தை. சிகாவுக்கு இனிமேல் பிள்ளை பெறும் வாய்ப்பில்லை. அவளுக்கு செத்துப் போக விருப்பமில்லையாம். எனவே அவர்கள் தப்பித்து போயிருக்கலாம் என்று தெரிகிறது."

ஜோடோவின கண்கள் சிவந்தன. ஆத்திரத்தில் பற்களை நரநரவென கடித்தான். "போங்கள். போய் டேராவை தேடுங்கள். சிகா தேவையில்லை. டேராவும் அவள் குழந்தையும் நமக்கு அவசியம் தேவை."

"அதற்கு அவசியம் இல்லை". ஜோடோவின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டு இருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மையப் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்களின் பின்னால் டேராவும், சிகாவும். சிகா டேராவின் குழந்தையை இறுக பற்றியிருந்தாள். கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது.

"சுகா அவர்களே. நீங்களே விசாரணையை நடத்துங்கள். முதலில் அந்த குழந்தை என்னது என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்."

"தலைச்சன். ஆண் பிள்ளை. ஆனால் இதை கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன். எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை தெரியுமா?" சிகா வெடித்தாள்.

"அது அந்தக் காலம். இப்போது நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்." ஜோடோ கத்தினான்.

டேரா சுகாவின் முன்னால் மண்டியிட்டாள். " சுகா அவர்களே. என் குழந்தையை கொன்று விடாதீர்கள். அடுத்த குழந்தை நிச்சயம் பெண்ணாக பிறக்கும். உங்களுக்கு என் வாழ்நாளில் பத்து குழந்தைகள் வரை பெண்களாய் பெற்று தருகிறேன். இதை மட்டும் விட்டுவிடுங்கள். என் முதல் குழந்தை. எனக்கு மட்டும் உணவு கொடுங்கள். போதும். நான் சமாளித்துக் கொள்கிறேன்."

"உனக்கு உணவு குறைந்து போனால் எப்படி அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக் கொள்வாய். முட்டாள்தனமாக பேசாதே. ஜோடோவிடம் குழந்தையை ஒப்படைத்துவிடு. அதுதான் உனக்கு நல்லது." சுகா ஆகாயத்தை பார்த்துக் கொண்டே பதிலளித்தார்.

அதற்கு பிறகு அதிகம் பேச்சில்லை. ஒருவன் டேராவை தரதரவென இழுத்துக் கொண்டு போனான். சிகாவிடமிருந்து குழந்தை வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. அதன் கைகளும் வாயும் கட்டப்பட்டன. சிகா ஒரே பாய்ச்சலில் ஜோடோவை நெருங்கி அவனை பிராண்டினாள். மற்றவர்கள் விலக்குவதற்குள், ஜோடோவின் இடது தோள்பட்டை பகுதியில் தோல் கிழிந்து ரத்தம் பீறிட்டது. ஜோடோ மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அமைதி திரும்பியது.

"ஜோடோ! என்ன சொல்கிறாய் ?" சுகாவின் குரல் கம்மியிருந்தது.

"சொல்வதற்கு என்ன இருக்கிறது. நம்மிடம் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். விதிகளை மாற்ற இப்போதைக்கு அவசியமில்லை. ஆற்றில் வீசிவிடச் சொல்லுங்கள்."

ஜோடோவின் ஆணை நிறைவேறுவதைப் பார்க்க சகிக்காமல் சுகா சிறிது தூரம் விலகிப் போய் திரும்பி நின்று கொண்டார்.

"சுகா அவர்களே! மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டீர்களா? நீங்களே இப்படிச் செய்தால் நான் என்ன செய்ய? எனக்கு எதற்கு இந்த தலைவர் பதவி ?" ஜோடோ பின் தொடர்ந்தான்.

"ஜோடோ என்னை மன்னித்து விடு. என் புத்தி ஒத்துக் கொண்டாலும் மனசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது. டேராவின் அலறல் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை கொன்று விடுவார்களாம் !"

" அப்படியா ! பைத்தியக்கார்கள். " ஜோடோ ஆச்சர்யப்பட்டான்.

(குங்குமம் - 6 மார்ச் 2008)

No comments: