Monday, 20 October 2008

இது, அது அல்ல


"ச்சீ!.... என்ன ராஜேஷ்?..... யூ ஆர் வெரி நாட்டி" ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின் மேல் சின்னச் சின்னதாய் நீர் மொட்டுக்கள்.

"கமான் ஷர்ம்ஸ். இதவிட பவர்ஃபுல்லா இன்னொண்ணு இருக்கு.. வேணுமா?" ராஜேஷ் விஷமத்தனமாக சிரித்தான். அவனுள்ளே இளமையின் வேகம் ஓவர்டைம் செய்து கொண்டிருந்தது.

"நோ தாங்க்ஸ். ராஜேஷ், வரவர நீ ரொம்பவே கெட்டுப் போய்ட்டே. புதுப் பெண்டாட்டியிடம் பேசும் பேச்சா இது?" முகத்துக்கு முன்னால் வந்துவிட்ட மயிற்கற்றைகளை காதுக்குப் பின்னால் தள்ளினாள். காதலிக்கும் போது எப்படி மென்மையாக இருந்த ராஜேஷ், இப்படி வல்கராக மாறியிருக்கிறான்! எல்லாம் காமம் படுத்தும் பாடு!!

"ஷர்ம்ஸ். நீயும்தான் ரொம்ப மாறிட்டே. சும்மா ஒரு எரொட்டிக் மூடுக்கு கொண்டுவரலாம்னு பார்த்தா, அதப் போய் சீரியஸ்ஸா எடுத்துக்கறயே?" ராஜேஷ் கிடைத்த ஒரு சில மென இடைவெளியில் ஷாம்பெயினை ஒரு சிறிதளவு சிப்பிக் கொண்டான். ஹு... ஹூ என்று சம்பந்தமில்லாமல் கத்தினான்.

"ராஜேஷ். நோ ஜோக்ஸ் ப்ளீஸ். ஐயாம் வெரி சீரியஸ். உன் பேச்சில் காதல் இல்லை. காமம்தான் இருக்கு. நான் வேண்டாம். என் உடம்புதான் வேணும், இல்லையா?" ஷர்மிளா அழத் தொடங்கினாள்.

"ஹேய்! என்ன இது?.... ஓகே... ஸாரி.... ஐம் ஸோ ஸாரி. என்னை மன்னிச்சுடும்மா. என்ன இவ்வளவு சென்சிடிவ்வா இருக்கே?" சில்லென்ற ஏ.சி.யில் அவனுக்கும் வியர்த்தது. காது மடல்களில் வெப்பத்தை உணர்ந்தான்.

"............."

"என்னடா? கோவமா?"

"நீ ரொம்மான்டிக்கா இருக்கிறதவிட அதிகமாவே டிராமாட்டிக்கா இருக்கே. எனக்கு பொய் வாழ்க்கை போரடிச்சு போச்சு, ராஜேஷ். திகட்டுது. எனக்கு நீ வேணும்.. நீ மட்டும் முழுசா வேணும். காலேஜில் பார்த்த, பழகிய அந்த ராஜேஷ் வேணும்." ஷர்மிளாவின் மார்புகள் விம்மி அடங்கின. கண்ணீர் கன்னங்கள் வழியாக இறங்கி, உதடுகளை ஈரப்படுத்தி உப்பு கரித்தது.

"ஷர்ம்ஸ். சின்னச் சின்ன பொய்கள்தான் வாழ்க்கையோட அஸ்திவாரமே. நீ கோபப்படும்போது கூட அழகாயிருக்கேன்னு நான் அடிக்கடி சொல்வேன் இல்லையா?"

"இது ரொம்பவே ஓவர். இதை ஜோக்கா எடுத்துக்க மாட்டேன். இதை ஒரு ஸ்டேட்மென்டா.....'

"மறுபடியும் மன்னிப்பு ப்ளீஸ். என் இன்பத் தலைவியே"

"ராஜேஷ். ஐ லவ் யூ". ஷர்மிளா அபாயகரமாக நெளிந்தாள்.

"ஐ டூ லவ் யூடா" ராஜேஷ் கரைந்துவிடுவான் போலிருந்தது.

ஒரு மென இடைவெளிக்கு பிறகு, "ஓகே ராஜேஷ். எனக்கு கண்ணைச் சொக்குது. நான் தூங்கப் போறேன். மிச்சம் மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்" ஷர்மிளாவின் பட்டாம்பூச்சி இமைகள் துடித்தன.

"நோ நோ ஷர்ம்ஸ். இன்னும் பத்தே நிமிஷம். ஜஸ்ட்.... லெட்ஸ் ஹாவ் ஒன் மோர் ஃபன்"

"உனக்கு ராத்திரி, பகல்ன்னு வித்தியாசமே கிடையாது. எப்பவும் இதே நினைப்புதான். நீ திருந்தவே மாட்டே. நாளைக்கு ஒரு ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் செஞ்சாகணும், ராஜேஷ். ஐ நீட் ரெஸ்ட்."

"ஷர்ம்ஸ்... ப்ளீஸ்.... லிசன் டு மீ...."

ஷர்மிளா இன்டர்னெட் சாட்டிங்கை மூடிவிட்டு தூங்கப் போனாள். உலகத்தின் இன்னொரு கோடியில், சியாட்டிலில், தனிமையில் வாடிக் கொண்டிருந்த ராஜேஷ் சுறுசுறுப்பாக ஆபீசுக்கு கிளம்பினான்.

(ஆனந்த விகடன் தீபாவளி மலர் - 2008)

1 comment:

குப்பன்.யாஹூ said...

இந்த கதை காப்பி . நானும் படித்தேன் விகடன் தீபாவளி மலர்.

ஆனால் இதன் மூலக்கதை புனைவு என்ற புத்தகத்தில் உள்ளது. (நன்றி- காயத்ரி பதிவர்- http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post_7450.html ) அந்த கதை வாசியுங்கள் , இன்னும் தீவிரமாக நம் மனதை தாக்கும்.

67 வயது முதிய பெண்மணி இணைய அரட்டையில் 24 வயது பெண் போல பேசுவார். அரட்டை அடிக்கும் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் 27 வயது இளைஞன் போல அரட்டை அடிப்பான்.

யாஹூ மெசஞ்ரில் கொஞ்சலும் சீண்டலுமாய் காதலித்துக் கொண்டிருக்கும் இருவரின் உண்மை முகங்களை அம்பலமாக்கி 'அடப்பாவிகளா'வென ஆச்சரியப்பட வைக்கிறது சூன்ய வெளி என்ற சிறுகதை- காயத்ரி

நம் பதிவர் உலகத்தில் idhu போல நிறைய ஆண் பதிவர்கள் பெண் புனை பெயரில் எழுதி வர்கிறார்கள். அப்பொழுதாவது நல்ல பதிவை நாம் வாசிக்க மாட்டோமா என்ற எண்ணத்தில்.

நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ