Monday 23 March, 2009

இந்த மாத அமுதசுரபியில் எனது கட்டுரை


காமராஜர் தாமதத்தால் மேம்பாலம் கிடைத்தது

தமிழ் திரைப்படத் துறையில் தொழிலாளர் பிரச்சனைகள் என்பதும் கடற்கரையில் தோன்றி மறையும் அலைகள் என்பதும் ஒன்றே. அப்படி இருக்கும் போதிலும், இன்றைக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் உரிமையை போராடி பெரும் அளவுக்கு ஒரு வலுவான அமைப்பு பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர்களில் மிக முக்கியமானவர் 'பாலா மூவீஸ்' கிருஷ்ணசாமி அவர்கள்.

83 வயதான இவர், ஒரு இனிய காலை வேளையில், தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"இந்தியாவிலேயே அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முதல் திரைப்பட தொழில்நுட்ப கல்லூரி சென்னையில்தான் உருவானது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயம். 'ஓளிப்பதிவு மற்றும் ஒலி பொறியியல்' என்ற பெயரில் அது பிராட்வேயில் வெகுகாலம் செயல்பட்டது. பிறகுதான் அது தரமணியில் திரைப்பட தொழில் கல்லூரியாக உருவெடுத்தது. அப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் படித்து வெளிவந்த முதல் கலைஞனாக நான் இருந்தது எனக்கு பெருமை. கூடவே அதிர்ஷ்டமும் இருந்தது. படிப்பை முடித்த கையோடு ஜெமினி ஸ்டூடியோவில் உதவி ஒளிப்பதிவாளராக வேலையும் கிடைத்தது. அப்போதே சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கான ஒரு அமைப்பை ஆரம்பிக்க ஆர்வம் காட்டினேன். Cine Technicians Association என்ற அமைப்பில் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதால், என் பெயருக்கு முன்னால் சி.டி.ஏ என்ற அடைமொழி ரொம்ப காலம் இருந்தது."

"நான் ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்தது ஆகஸ்டு 11. அடுத்த ஐந்தாவது நாளே, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. நாடே விழாக் கோலத்தில் இருந்தபோது, ஜெமினி அதிபர் வாசன் இந்திய விடுதலையைக் கொண்டாடும் விதமாக அன்று இரவு சிறப்பானதொரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் கல்கி, டி,டி,கே, கொத்தமங்கலம் சுப்பு போன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாலும், கூடவே ஒரு வருத்தமும் இருந்தது. இந்த விடுதலை பொன்நாளை கண்டு களித்திட சத்தியமூர்த்தி இல்லையே என்ற ஏக்கம்தாம் அது"

"காமராஜரையும், மஹாத்மாவையும் என் இரு கண்களாக பாவித்து வருகிறேன். தேசப்பிதாவின் தீண்டாமை கருத்துக்களை தமிழ் திரைப்பட வாயிலாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக 'ஒன்றே குலம்' என்ற தமிழ் திரைப்படம் ஒன்றை 1954ல் நான் இயக்கினேன். அதன் துவக்க விழாவுக்கு, அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜரை அழைத்திருந்தேன். முன் கூட்டியே அவர் தன் வீட்டிலிருந்து கிளம்பி விட்டாலும், கோடம்பாக்கம் ரெயில்வே கேட் மூடியிருந்ததால் அவருக்கு காலதாமதமாகி விட்டது. என் விழாவுக்கு வந்ததும், அவர் உதித்த முதல் வார்த்தை 'மேம்பாலம்' என்பதாகும். ஒரு விதத்தில் கோடம்ப்பாகம் மேம்பாலம் வருவதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது."
"ஒன்றே குலம் படம் வெளியானதும், அது ஏகப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தது. சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ஆதரவாக பேசியவர்கள், அந்த திரைப்படத்தை தமிழக அரசே வாங்கி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இது பற்றி காமராஜருக்கு போக, அவரோ, "கிருஷ்ணசாமி என் நண்பன். அவன் படத்தை வாங்க நான் கையெழுத்துப் போட்டால் அது தவறான முன் உதாரணமாகிவிடும்", என்று சொல்லி தடுத்து விட்டாராம்! இதுவல்லவோ அப்பழுக்கற்ற அரசியல் நேர்மை!! எனவே, எனது அடுத்த வெற்றி தயாரிப்பான 'படிக்காதை மேதை' என்ற படத்திற்கு கர்ம வீரரை நினைவு படுத்தும் வகையில் பெயர் வைத்தேன்"

"திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி சேர்க்கும் விதமாக ஹிந்தி மற்றும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிகெட் போட்டியை சென்னையில் முதன் முறையாக 1952ல் நடத்தினேன். அதில் சென்னை அணிக்காக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் மட்டை பிடித்தார்கள். அதே அணியில் ஜெமினி கனேசணும், சாவித்ரி மற்றும் புஷ்பவல்லியோடு களம் இறங்கியது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். பம்பாய் அணியில் ராஜ் கபூர், தேவ் ஆனந்த், திலீப் குமார், நர்கீஸ், நூதன் போன்றவர்கள் பங்கேற்றார்கள். அவர்களுக்காக பம்பாயிலிருந்து ஒரு தனி விமானமே ஏற்பாடு செய்யப்பட்டது. ரிப்பன் கட்டிடத்தின் பின்னால் இருந்த கார்ப்பரேஷன் மைதானத்தில்தான் அந்த போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னால் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மக்களிடையே வின்டேஜ் கார்களில் பவனி வந்தார்கள். சென்னையில் மிகப் பெரிய கோலாகலம் என்றால் பம்பாயில் படப்பிடிப்பே ஸ்தம்பித்து போனது. அவ்வளவு சிறப்பு பெற்ற போட்டிக்கு நான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். அதே போல இந்தியாவில் நடைபெற்ற முதன் முதல் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் நான் ஒருகினைப்பாளன்"

"முன்பெல்லாம் தேசிய விருது என்றால் அது நடிகர், நடிகை, தயாரிப்பாளர் என்பதிலேயே முடிந்து விடும். சினிமா என்பது பல தொழில் நுட்ப கலைஞர்களால் உருவாக்கப்படுவது என்பது உணர்த்த, அவர்களுக்கும் விருதுகள் கிடைக்க, மத்திய அரசாங்கத்தோடு பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கிறேன். மொரார்ஜி நிதி மந்திரியாக இருந்த போது, சினிமா நெகடிவ்களுக்கு பத்து சதவிகித வெட்டு அறிவித்தார். ஒட்டுமொத்த திரைப்படத் துறையே கவலையில் ஆழ்ந்தது. சென்னையில் பிரும்மாண்ட பேரணி நடந்தது. ஆனால் மொரார்ஜி பிடிவாதக்காரர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது லால்பகதூர் சாஸ்திரிதான் வர்த்தக மந்திரி. அவரை சந்தித்து சாதுர்யமாக திரைப்பட பிலிம் சுருள்களை 'ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தில்' சேர்த்துவிட ஏற்பாடு செய்து விட்டேன். அதனால், வெளிநாட்டில், இன்னும் மலிவான விலையில், அதிக அளவில் பிலிம் சுருள்கள் வாங்க முடிந்தது."

"எனக்கு புதுமைகள் செய்வது பிடிக்கும். சினிமாவை குறைந்த செலவில் அரங்கம் வாயிலாக கிராம மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான திறந்த வெளி திரை அரங்கை வடிவமைத்து, அதை சோமங்கலம் என்ற கிராமத்தில் செயல்விளக்கம் செய்தும் காட்டினேன். அது ஏனோ வர்த்தக ரீதியாக எடுபடவில்லை."

"கர்நாடக இசையிலும் ஏதாவது புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. திருவையாற்றில் எப்படி தியாக ப்ரும்மத்தின் பஞ்ச ரத்ன க்ருதிகளை பாடுவார்களோ, அதே மாதிரி முன்னனி இசை கலைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, மிக சிறப்பான முறையில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டேன்."

"சுதந்திர போராட்டங்களை பார்த்த, படித்த, கேட்ட அனுபவங்கள் இருப்பதால் அது சம்பந்தமாக திரைப்படத் துறையில் வாயிலாக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆவல் எனக்கு ரொம்ப நாட்களாக இருந்தது. தேச விடுதலைக்காக சினிமாத்துறையும், நாடகத்துறையும் தங்கள் பங்களிப்பை மிக திறமையாக அளித்திருக்கிறது. எனவே எல்லா விவரங்களையும் ஒன்று திரட்டி நாடக பாணியில் டாக்குமென்ட்ரி தயாரிக்க முடிவு செய்த்தேன். முதலில் 1995-ல் 'சுதந்திர போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்கு' என்ற தலைப்பில் 80 நிமிட விவரனப்படம் தயாரித்தேன். இதில் விஸ்வநாத தாஸ், டி.கே.சண்முகம், டி.பி.ராஜலக்ஷ்மி போன்றவர்கள் எப்படி சினிமா மற்றும் மேடை நாடகங்கள் மூலம் இந்திய விடுதலைக்கு பாடுபட்டார்கள் என்பதை பற்றி எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் அதை பதிவு செய்தேன். இதன் வெற்றியை தொடர்ந்து, சுதந்திர இந்தியாவின் பொன்விழா ஆண்டில், 'சுதந்திர இந்தியாவுக்கு மேடை நாடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் 12 அரை மணி நேரத் தொடரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற இந்திய மொழிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த நாடக கலைஞர்கள் ஆற்றிய வீர தீர செயல்களை இந்தியா முழுவதும் அறியும்படி வெளிக்கொணர்ந்தேன்."

பழைய நினைவுகளிருந்து திரும்பி வந்தவரை, 'இந்தக் கால தொலைக்காட்சி தொடர்கள் திருப்தியளிக்கிறதா?' என்று கேட்கவும்,

"மிகப் பெரிய காவியமான சம்பூர்ணராமாயணமே ஒரு இரவுக்குள் சொல்லப்பட்டுவிடுகிறது. ஆனால் இவர்கள் ஒரு சாண் நீள கதையை அதன் தன்மைக்கு முரணாக ஆண்டுக் கணக்கில் இழுப்பதில் ஒரு படைப்பாளியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஆரோக்கியமானதல்ல. சீக்கிரமே மக்களை சலிப்படைய செய்து விடும்." என்று முடித்தார் கிருஷ்ணசாமி.

--மெலட்டூர்.இரா.நடராஜன்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் நடராஜன்
அருமையான கட்டுரை. வயதில் மூத்த பழுத்த அனுபவசாலியின் அனுபவங்கள் சாதனைகள் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள்.