Monday 24 September, 2007

இனி எல்லாம் நீயாக


இனி எல்லாம் நீயாக

தினமலர் - வாரமலர் - 23 செப்டம்பர் 2007

சிவகாமி தனக்கு முன்னால் செத்து போய் விடுவாள், தான் தனிமை பட்டு போய்விடுவோம் என்பதை பரசுராம் கனவிலும் நினைத்துப் பார்த்ததேயில்லை. அவருக்குத்தான் கர்ணனின் கவச குண்டலங்கள் மாதிரி ஆஸ்துமாவும் இருதய நோயும் உடம்பின் ஒட்டுண்ணிகளாக ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. சிவகாமி லேசாக தலைவலி என்று ஒரு நாள் கூட படுத்துக் கொண்டதில்லை. ஆனால் விதி யாரை விட்டது? எதிர்பாராத நேரத்தில் முதுக்குக்கு பின்னால் தடதடவென எருமை மாடு ஓடி வந்து முட்டி தள்ளிவிட்டு போய்விட்ட மாதிரி இன்று காலையில் அது நடந்தே விட்டது.

வழக்கம் போல காலை வாக்கிங் போய்விட்டு வந்து, ஹிண்டுவில் முதல் பக்கத்தையும், புரட்டிப்போட்டு ஸ்போர்ட்ஸ் பக்கத்தையும் மேய்ந்துவிட்டு இடது பக்க முக்காலியை பார்த்தபோது.... அங்கு காப்பி இல்லை. அப்போதே எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. ஒரு வேளை உடம்பு சரியில்லாமல் இருக்கலாம். என்ன ஏது விசாரித்தால் போயிற்று? என்று மனசை திடப்படுத்திக் கொண்டு குரல் விட்டு பார்த்தார். அதற்கும் பதிலில்லை. பயம் நெஞ்சுகூட்டுக்குள் சுறுசுறுவென மெல்லிய புகையாக பரவ, ரத்த அழுத்தம் சூடேறியது. மூச்சிறைத்தது. தட்டு தடுமாறி எழுந்ததில் டைனிங் டேபிள் முனையில் இடித்துக் கொண்டார். படுக்கையறைக்கு போனதில்.... அங்கு இல்லை. கிச்சனில் எட்டிப் பார்த்தபோது, கடவுளே.....

சிவகாமி சுவரோரமாக பிரிந்த தவிடு மூட்டை மாதிரி உட்கார்ந்திருந்த வாக்கில் சரிந்திருந்தாள். மூத்திரம் சற்று தூரம் ஓடி குளம் கட்டியிருந்தது. 35 வருட போலீஸ் அனுபவம் உண்மையை புத்திக்கு உடனடியாக தெரிவித்துவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளாத பரசுராம் கன்னங்களை தட்டினார். கீழே படுக்க வைத்து நெஞ்சை பிசைந்து பார்த்தார். ம்..ஹ¥ம்... உயிர் போய் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும்.

சிவகாமி அசைவற்று படுத்திருந்தாள். மளமளவென கண்கள் இருட்டிக்கொண்டன. தொண்டை வறட்சியில் பேச்சு வரவில்லை. துக்கமும் பயமும் ஒன்று சேர, இருக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி நெஞ்சை பிடித்துக்கொண்டு பரசுராம் சங்கிலித் தொடராய் அலறியதில்....

'டொம்' என சத்தத்துடன் மடியிலிருந்த பிளாஸ்க் கீழே விழுந்து உடைந்தது. பரசுராம் சுதாரித்து எழுவதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. வார்டு பாய் ஓடி வந்து அவரை தூக்கி நிறுத்தினான். கூட்டத்தை விலக்கி சிதறிய கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்த ஆட்களை அழைத்தான்.

பரசுமாம் பிளாக் அவுட் குழப்பத்தில் தடுமாறினார். முதுகில் வெயில் சுட்டது. மதிய வேளை. நர்சிங் ஹோம். ஆமாம்! ஞாபகம் வந்துவிட்டது. நேற்று விடியக்காலையில்தான் சிவகாமியை இந்த நர்சிங் ஹோமில் சேர்த்தார். இரண்டு நாள் இடைவிடாத அலைச்சலில் சற்று கண் அயர்ந்துவிட.... தேங்க் காட்! சிவகாமி இருக்கிறாள். கால்கள் சிக்க வேகத்தை கூட்டி ஸ்பெஷல் வார்டு அறை 18ல் எட்டிப் பார்த்ததில்...

சிவகாமி இருந்தாள். உயிரோடு... பரசுராமின் பதட்டத்தை கண்டு கொஞ்சம் மிரட்சியோடு எழுந்து உட்கார முயற்சித்தாள்.

டி.ஜி.பி பரசுராம் ரிடயர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்றைக்கும் கூட அவர் பட்டி தொட்டிகளில் பிரபலம். அவர் அதிகாரத்தின் கீழ் அந்தியூர் காட்டு வீரப்பன் முதல் அயோத்தியா குப்பம் வீரமணி வரை அடங்கி போயிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளே அவரின் கத்திமுனை பார்வைக்கு எதிரில் இயல்பான பேச்சுக்கு திணறுவார்கள். எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். பேச்சிலும் செயலிலும் ஒரு மிடுக்கு இருக்கும். போலீஸ் உடுப்பில் கேடிகளுக்கு எந்த அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரோ அதே அளவுக்கு வீட்டிலும் கெடுபிடிகள்தான்.

டாக்டரின் கையெழுத்து கம்பெளண்டருக்கு அத்துபடி என்பது மாதிரி சிவகாமிக்கு அவர் கண் அசைவிலேயே அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து விடும். பத்து வேலையாட்கள் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் சிவகாமிதான் செய்ய வேண்டும். அதில் கண்டிப்பாய் இருப்பார். தெருவில் நடந்து போகும் போது கூட மிடுக்காக நாலு அடி அவர் முன்னே நடக்க, சிவகாமி அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சிறைக்க பின்னால் வந்து கொண்டிருப்பாள். சிரிப்பென்றால் பிறை சந்திரன் மாதிரி துளியூண்டு வந்து போகும். கேலியோ கிண்டலோ அவர் அறிந்திராதது. பேச்சு மிகவும் குறைவு. வீட்டில் கிச்சன் எங்கே இருக்கும் என்று கூட தெரியாது. தனக்கு என்ன உடுப்பு எப்போது வேண்டும்? குளிக்கும் வெந்நீர் எவ்வளவு வெதுவெதுப்பில் வேண்டும்? சிவகாமிக்குதான் தெரியும். எல்லா வசதிகளுக்கும் உடனுக்குடன் ஏற்பாடு செய்தார். ஒரு குறையும் வைத்தில்லை. குழந்தை பாக்கியத்தை தவிர.

"அம்மா. நீங்க இங்க வந்ததிலேர்ந்து அய்யா ஒன்னும் சரியா சாப்பிடலங்க. வெறும் டீயா குடிச்சி பொளுத ஓட்டறாரு. பசி மயக்கத்துல பிளாஸ்க்கை வேற உடைச்சிட்டாரு."

பரசுராமின் பின்னாலிருந்து முளைத்த வார்டு பாய் சொல்லிக் கொண்டே போனான். சிவகாமி கேள்வியாக பரசுராமை பார்த்தாள்.

"என்னங்க? போய் சாப்பிட்டு வாங்க. பார்த்தா உங்களுக்குத்தான் நோவு வந்த மாதிரி இருக்கு. போங்க. எனக்கு சரியாயிட்டு." ஈனஸ்வரத்தில் கண்களில் கவலை கொப்பளிக்க அவரை விரட்டினாள்.

பரசுராம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிவகாமியின் கைகளை இறுகி பற்றியபடி இருந்தார். நிமிர்ந்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. "நான் எப்ப சாப்பிடணும்? என்ன சாப்பிடணும்? எவ்வளவு சாப்பிடணும்னு எனக்கு தெரியாதே செல்லம். நீ சட்டுனு கால் நீட்டி படுத்ததும் எனக்கு ஒண்ணும் விளங்கல. அதான்."

அவசர கதியில் பைபாஸ் சர்ஜரிக்கு ஆயத்தங்கள் செய்தபோது கூட கலங்காத பரசுராம் தற்போது உடைந்து போன கண்ணாடி சில்லுகளாக இருப்பதை பார்ப்பதில் சிவகாமிக்கு நெஞ்சு கனத்தது.

"நீ பொழைச்சு வந்தா சாப்பிடலாம். இல்லேன்னா, அப்படியே போயிடலாம்னு இருந்தேன்."

பதறிப் போனாள் சிவகாமி. "என்னங்க. முதல்ல இந்த பேச்சை விடுங்க. எனக்கு ஒண்ணுமில்லே... ஒரு டிஜிபி பேசுற பேச்சா இது?"

முகம் பார்ப்பதை தவிர்த்து வெறுமையாக வெளி வாசலையே பார்த்துக் கொண்டே இருந்தவர், ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராய் "அடப்போ செல்லம். டிஎஸ்பி, ஐஜி, டிஜிபின்னு, போலீஸ் உடுப்பை கழட்டின பிறகும் கூட வித்தியாசமே இல்லாமல் இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு காலம் தப்பி இப்ப புரியுது. உனக்கு நல்ல கணவனா எதுவுமே செய்யலையேன்னு என்னை ரெண்டு நாளா மார்ல ரம்பம் வச்சி அறுக்கிற மாதிரி வலிக்குது. எவ்வளவு சீப்பா சுயநலமா நடந்துக்கிட்டிருக்கேன்கிற உணர்வு என்னை ஊசியா குத்துது."

சிவகாமி மிகுந்த முயற்சிகள் செய்து கொஞ்சமாக ஒருக்களித்து வலக்கையை ஊன்றி இடது கையை தூக்க எத்தனித்தாள். அவரை கொஞ்சம் நெருங்கலாம் என்றால், முடியவில்லை. அப்படியே சரிந்தவள் கண்களை மூடி நெஞ்சுக்குள் விசும்பினாள்.

"அழறையா. வேணாம். என்னோட துக்கத்தை உங்கிட்ட சொல்லி இன்னும் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல"

பரசுராம் தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு கஷ்டப்பட்டு இயல்புக்கு வர முயற்சித்தார். மீண்டும் அந்த மௌனம் அவரை கொன்று தீர்த்தது. "நான் ஒன்னே ஒன்னு கேட்கட்டுமா? நீ ஏன் எதுவுமே கேக்கல?"

சிவகாமிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "அட போங்க. வேற பேச்சு ஏதாவது பேசுங்க." வெட்கமாக இருந்தது.

"இல்ல சொல்லு. எனக்கு தெரிஞ்சுக்கணும். வீட்ல ஒரு பொருளை எடுத்துக் வச்சதில்லே. பிறந்த நாள் திருமண நாள்ன்ணு ஒரு தடவை கூட துணிமணி எடுத்துக் கொடுத்ததில்லே. பூ கூட நீயேதான் வாங்கி வச்சிப்பே. அதக் கூட நான் வாங்கித் தரணும்ணு எனக்கு இப்ப வரைக்கும் மனசுல வர்லே."

சிவகாமி அவரையே கண்கொட்டாமல் பார்த்தாள். விழியோரங்களில் கண்ணீர் முட்டி நின்றது. நீண்ட பெருமூச்சுக்கு பிறகு நிதானமாக ஆரம்பித்தாள். "நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சீங்களே, அப்பவே தீர்மானம் செஞ்சிட்டேங்க. என் அம்மாவுக்கு லுக்கோர்டமா இருந்ததை காரணம் காட்டி உங்க வீட்ல கல்யாணத்தை நிறுத்த பல பேர் குறுக்க நின்னாங்களாம். ஆனா நீங்கதான் தனி ஆளா போராடி என்னை கட்டிக்கிட்டீங்களாம். இது ஒன்னே போறுங்க, உங்க மனச தெரிஞ்சிக்க. நீங்க போலீஸ் வேலைய ஒரு தவம் மாதிரி செஞ்சிங்க. அதுக்கு எந்த பங்கமும் வந்திடக் கூடாதுன்னு என்னை நானே குறுக்கிக் கிட்டேங்க. உங்ககிட்ட இருக்கிற சமூக அக்கறை, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளையெல்லாம் பார்த்து பிரமிச்சிருக்கேங்க. என்ன, மத்த ஆம்பிள்ளைக மாதிரி பொளுதன்னிக்கும் கட்டிபுடிச்சு கிட்டு ஆட்டுக்குட்டி மாதிரி நீங்க இல்லை. அது உங்க சுபாவம் இப்படித்தான்னு புரிஞ்சிக்கிட்டேங்க. உங்க மனசு என்ன சொல்லுதுன்னு எனக்கு புரியுங்க. அப்ப அப்ப செல்லம்ன்ணு கூப்பிடுவீங்களே, அது ஆயிரம் பட்டுப் புடவைகளுக்கு சமானங்க."

"யு ஆர் க்ரேட் செல்லம். ஒரு துடிப்பான ஏஎஸ்பி டிஜிபியா உயர்ந்தேன்னா அது உன்னாலத்தான். இன்னும் ஒண்ணே ஒண்ணு கேட்கட்டுமா? இதிலும் சுயநலமிருக்கு. என்ன செய்ய?"

"சொல்லுங்க."

"கலியுகத்தில சொர்க்கம், நரகமெல்லாம் இங்கெயேத்தான் சொல்லுவாங்க. அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யவும் வாய்ப்புகள் வரும் போலிருக்கு. இவ்வளவு காலம் பளபளப்போட உயரத்துல பறக்குற பட்டமா நான் இருந்தேன். நீ எனக்கு எல்லாமா இருந்தே. உன்னை இப்படி திடீர்ன்னு படுக்கைல போட்டு ஆண்டவன் என் கண்ணை திறந்திட்டான். இனி உன்னை உட்கார வச்சி, வாழ்நாள் முழுக்க நான் உனக்கு எல்லாமா இருக்கப் போறேன். அதனால....."

"என்னங்க? என்ன தயக்கம்? சொல்லுங்க."

"எனக்கு முன்னாடி நீ போயிடாதே செல்லம்.. உனக்கு என்ன வேணுமின்னாலும் நானே செய்யறேன். நீ இரு. என்ன பார்த்துக்கிட்டே இரு. அது போதும்."

சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்சம் அவஸ்தையாக நெளிந்தாள். "ஏங்க நர்ஸை கூப்பிடுறீங்களா. பாத்ரூம் போனுங்க."

டக்கென்று எழுந்து கதவு வரை போனவர், புன்னகையோடு திரும்பி வந்து, "செல்லம், வா. நான் கூட்டிக்கிட்டு போறேன்."

சிவகாமி திடுக்கிட்டவளாய், வெட்கத்துடன், "நீங்களா? அடச் சீ. விளையாடாதீங்க. போய் நர்ஸை கூப்பிடுங்க"

"ஏன். என்னால முடியாதா? நான் உன் ஹஸ்பண்டுதானே இதிலென்ன வெட்கம்?"

"இல்லங்க. எனக்கு இடது பக்கம் மூவ்மெண்ட் கொஞ்சம் சிரமப்படுங்க. ரொம்ப கவனமா அழைச்சுகிட்டு போவணும். உங்களுக்கு பழக்கமிருக்காது. அதுக்குத்தான் சொல்லறேங்க."

"அடப்போ. பழகினாப் போச்சு. நீ வா". பரசுரமுக்கு எங்கிருந்து வலு வந்தது என்று தெரியவில்லை. சிவகாமிக்கு வசதியாக அவளை தன் இடது தோள்களில் அணைத்தவாறு பாத்ரூமை நோக்கி நடக்கலானார்.

எதேச்சையாக வார்டு 18க்குள் எட்டிப் பார்த்த நர்ஸ், "பார்த்து டிஜிபி சார். மேடமை கெட்டியா பிடிச்சுக்குங்க. விடாதீங்க. அப்படியே ஒரு பாதி எடுத்துகுங்க" என்று சொல்லி சிரிக்கவும்...

சிவகாமிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. நெஞ்செல்லாம் பூரித்து கண்களிலும் கன்னங்களிலும் ஆனந்த கீற்று வழிந்தோடியது. ஆனால் மெல்லியதாக அழுகையும் கூடவே வந்தது.

2 comments:

குசும்பன் said...

வாழ்த்துக்கள், நீங்களும் பூண்டி கல்லூரி தானா?
கதை அருமையாக இருக்கிறது!!!

Chandravathanaa said...

கருவும், கதை சொல்லிய விதமும் அருமை