Wednesday, 7 November, 2007

தங்கக்கூரை


தங்கக் கூரை

கிருஷ்ணய்யாப் பிள்ளையின் வரவுக்காக காத்திருந்த ஊர் மக்கள், அவர் வந்ததும் மரியாதைக்கு எழுந்து, அமர்ந்தனர்.

"என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா? கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" கணீர் குரலில், தனது வெள்ளை மீசையை உள்ளங்கையால் நீவிவிட்டபடியே மிடுக்கோடு கூட்டத்தினரை இடமிருந்து வலமாக பார்த்தார் கிருஷ்ணய்யாப் பிள்ளை. கூட்டத்தினரின் தலையசைப்பில் சம்மதம் கிடைக்க, தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

"எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க. பட்டணம் போய் தேவ பிரசனம் பார்த்து, நம்ம ஊரு பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிச்சிருக்கு. வர்ற தை மாசம் 12ம் தேதி. இன்னும் மூணு மாசம்தான் இருக்கு. செஞ்சுடலாம் இல்லையா?"

"ஐயா, நீங்க நல்லது கெட்டதுல்லாம் பார்த்துதான் தேதி குறிச்சிருப்பீங்க. உங்க சம்மதம்தான் எங்க சம்மதம். நாங்க என்ன செய்யணும். அதைச் சொல்லுங்க. செய்ய காத்துக்கிட்டு இருக்கோம்" என்றார் ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் சிவசங்கரன் எழுந்து.

"அப்ப சரி. திருப்பணி பற்றி பேச ஆரம்பிக்கலாமா?"

"ஐயா, தேர் மராமத்து செலவு முழுசையும் நான் ஏத்துக்கறேங்க"

"கோயில் முழுவதும் கிரானைட் தளம் போடும் செலவு என்னுது"

"பெங்களூருல என் பையன் நல்ல பொசிஷன்ல இருக்கான். அஞ்சு லட்சம் வரையில வசூல் செஞ்சு கொடுக்க நானாச்சு."

இதே போல் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை உற்சாகமாக எடுத்து வைக்க, கிருஷ்ணய்யாப் பிள்ளை மகிழ்ச்சியடைந்தார். "பலே. நீங்க இப்படி செய்யும் போது நானும் என் பங்குக்கு ஏதாவது பெருசா செய்ய வேண்டாமா? அதுனால நம்ம கோயில் மூலஸ்தான வெளிக் கோபுரத்துக்கு தங்கக் கூரை போடும் செலவை நான் ஏத்துக்கறேன்."

கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பஞ்சாட்சர முதலியார் எழுந்தார்.

"ஐயா! நீங்க நம்ம கோயிலுக்காக ஒத்துமையா உற்சாகமா திருப்பணி செய்யறது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, கோயில் புனரமைப்பை மட்டுமே பார்க்கிற நீங்க, நாம கோயில் பட்டாசாரியார் குடியிருக்கிற வீட்டையும் கொஞ்சம் பார்த்தா நல்லது. வீட்டை மராமத்து செஞ்சுக்கிற நிலைமைல அவர் இல்லே. சமையல் அறை இடிஞ்சு போனதால, இப்ப கூடத்திலேதான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரு. ஐயாவோட பெரிய மனசுல பெருமாளுக்கு தங்க கூரை வருது. அதுனால, என் பங்குக்கு பட்டாசாரியார் வீட்டு சமையல் அறை மாராமத்தை நான் ஏத்துக்கறேன். என்னை பொறுத்த வரைக்கும் இது கூட சாமி காரியம்தான்."

கோபால பட்டாசாரியார் கண்ணீர் மல்க எழுந்து, நன்றியுணர்வோடு பஞ்சாட்சர முதலியாரைக் கையெடுத்து கும்பிட்டார்.

இந்த கதைக்கான தீப்பொறி...... (திருமதி உமா பத்மநாபன்)சமீபத்தில், ஒரு கிராமத்து கோயிலுக்கு போயிருந்தேன். கோயில் பளபளவென பொலிவோடு இருந்தது. ஆனால் அந்த கோயில் குருக்களின் வறுமை அப்பிய ஒல்லியான தேகத்தையும் பழுப்படைந்த உடைகளையும் பார்த்த போது மனசு சங்கடப்பட்டது.

2007 விகடன் தீபாவளி மலர்

1 comment:

தாசன் said...

//சமீபத்தில், ஒரு கிராமத்து கோயிலுக்கு போயிருந்தேன். கோயில் பளபளவென பொலிவோடு இருந்தது. ஆனால் அந்த கோயில் குருக்களின் வறுமை அப்பிய ஒல்லியான தேகத்தையும் பழுப்படைந்த உடைகளையும் பார்த்த போது மனசு சங்கடப்பட்டது.//

நல்ல சிறுகதை வாழ்த்துக்கள். இந்த விடயம் இப்போது எல்லா இடமும் நடக்கின்றது.