Monday, 12 November, 2007

சின்ன விஷயம்லூவர் மியூசியத்தை நெருங்கி விட்டோம். திடீரென எங்கள் காமிரா மேன் தினேஷ் பரபரப்பானான். ஏர் பேக்கின் ·ஸிப்புகளை இழுத்தும் பிரித்தும் தேட ஆரம்பித்தான்.

"விஜய். என் மெடிகல் கிட்டை ஹோட்டல்லையே விட்டுட்டு வந்திட்டேன். இப்ப பிரஷர் மாத்திரை சாப்பிடணும். மதியம் லஞ்சுக்கு முன்னால சுகருக்கு இன்ஜெக்ஷன் போட்டுக்கணும்."

எனக்கு சொரேல் என்றது. ஹோட்டல் இங்கிருந்து குறைந்த பட்சமாக பத்து கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். இரை தின்ற மலைப் பாம்பு மாதிரி, டிராபிக் அரை கிலோ மீட்டருக்கு அசையாமல் நீண்டு கிடக்கிறது. மீண்டும் ஹோட்டலுக்கு போவதென்று முடிவு செய்தால் இன்றைய ஷெட்யூல் ·பனால். ஆனால், தினேஷ் இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

முன் சீட்டில் இருந்த திலீபனிடம் நாங்கள் தயக்கத்தோடு சொல்ல, அவரோ கொஞ்சமும் பதட்டப்படாமல் "இவ்வளவுதானே? இது சின்ன விஷயங்க. அந்த மாத்திரை பேரை எழுதிக் கொடுங்க" என்றவர், உடனே ஹோட்டலுக்கு போனில் பேசினார். பிறகு, சரேலென முன் கதவை திறந்து கொண்டு இறங்கி, டிராபிக்கில் கலந்து, காணாமல் போனார்.

நாங்கள் லூவரை நெருங்குவதற்குள்ளேயே மாத்திரையோடு வந்தார். லஞ்சுக்கு முன்னாலேயே மருந்து பெட்டியும் வந்து சேர்ந்தது. நாங்கள் பாரிஸில் காலை வைத்ததிலிருந்து திலீபன் எங்களுக்கு செய்யும் சேவைகள் கண்டு பிரமித்து போனோம். இத்தனைக்கும் நாங்கள் அனைவருமே அவருக்கு அறிமுகம் இல்லாதவர்கள். எங்கள் தயாரிப்பாளருக்கு தெரிந்தவர். அவ்வளவுதான்!

நேற்று அது போலத்தான், பாரிஸ் ஏர்போர்ட்டில் ஏக அமர்க்களம் ஆனது. எங்கள் டைரக்டரின் லக்கேஜ்களில் ஒன்று லண்டன் ஏர்போர்ட்டிலேயே தங்கி விட்டதாகச் சொல்ல, அவர் ஏகத்துக்கும் டென்ஷனாகி விட்டார். ஆனால் தீலீபனோ 'இது சின்ன விஷயங்க' என்று சொல்லி விட்டு எங்களை ஹோட்டலுக்கு பேக்கப் செய்து விட்டு ஏர்போர்ட் அதிகாரிகளுடன் போராடி, இரண்டே மணி நேரங்களில் அந்த சூட்கேசுடன் எங்கள் ஹோட்டல் ரூம் கதவை தட்டினார்.

இது மாதிரி எத்தனையோ கஷ்டங்கள்... குழப்பங்கள். எல்லாவற்றுக்கும் தீலீபனிடமிருந்து ஒரே பதில்தான்..... 'இது சின்ன விஷயங்க!'.

ஒரு முறை, தாங்க முடியாமல் அவரிடம், "அதெப்படி எதையும் நீங்க சின்ன விஷயமாகவே எடுத்துக்கிறீங்க?" என்று கேட்டு விட்டேன்.

தீலீபன் கொஞ்சம் தயக்கத்தோடு ஆரம்பித்தார். "இலங்கையிலே போர் தொடங்கியதும் நாங்க குடும்பத்தோட தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்தோம். சின்ன படகுல அஞ்சு நாள் கரை தெரியாம நடு கடல்ல சோறு தண்ணியில்லாம தத்தளிச்சோம். இனி பொணமாதான் கரை ஒதுங்கப் போகிறோம்னு நெனைச்சுக்கிட்டு இருந்த போது, கடவுள் ரூபத்தில ஒரு ஏழை தமிழ்நாட்டு மீனவர் எங்கள் அத்தனை பேரையும் காப்பாத்தி, உயிரோட கரை சேர்த்தார். ஒரு தனி ஆளா அவர் எப்படி சங்கடங்களை சமாளிச்சார் என்பதை நேர்ல பார்த்து பிரமிச்சவன் நான். எல்லா கஷ்டங்களையும் தன் உள்ளுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு, எங்களுக்கு நம்பிக்கையா சிரிச்ச முகத்தோட உதவினாரு பாருங்க... அதுதாங்க பெருசு! மத்ததெல்லாம் சின்ன விஷயங்க!"

நான் ஆடிப் போனேன்.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு விஜய் சாரதி)

நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சிக்காக நான் வெளிநாடு போயிருந்த போது, ஒருவர், நாங்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எல்லா உதவிகளை செய்ததுடன் பிரச்சனைகளையும் சமாளித்து உதவினார். புன்முறுவலோடு எங்களுக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்

2007 விகடன் தீபாவளி மலர்

No comments: