Friday, 30 November, 2007

கமல் சொன்ன வேல் கதை


கல்கி - 02 டிசம்பர் 2007

குமுதம் பத்திரிகையில் துணை ஆசிரியராக நாற்பத்திரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி, ஆறு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு விழா கண்டுள்ள அல்லயன்ஸ் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏராளமான
அறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை உலகத்தினர் கலந்து கொண்டனர்.

சில தெறிப்புகள்

நடிகர் கமலஹாசன்:

'மகாநதி' படத்தில் ரா.கி.ர.வோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான் பல படங்களை உருவாக்க எனக்கு உதவின. அவர் பணிபுரிந்த குமுதத்தில என்னைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவ்விழாவில் கலந்துகொண்ட பிறகே - பேசியவர்களின் பேச்சுக்களிலிருந்து குமுதத்தைப் பற்றிய பல கிசுகிசுக்கள் எனக்குத் தெரிய வருகின்றன, சந்தோஷம்! ரா.கி.ர. தம் சட்டைப் பையில் எப்போதும் ஒரு வேல் வைத்திருப்பார். அதைத்தான் நான் 'தெனாலி' படத்தில் பயன்படுத்தினேன்.

ஜ.ரா.சுந்தரேசன்:

'விகடன் ஆபீஸில் துணியாசிரியர்களுக்கு கார் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த வசதி எங்களுக்கும் வேண்டும்' என்று ரா.கி.ர. ஒருமுறை குமுதம் எடிட்டர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டார். அன்றிலிருந்து எடிட்டர் ஆபீஸ் வருவதை நிறுத்திவிட்டு,
கன்னிமரா நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு குமுதத்துக்குத் தேவையானதை எழுதிக் கொடுத்தார். இதை ரா.கி.ர.விடம் நான் தெரிவித்தபோது, பதறிப் போனவர், 'அந்த விஷயத்தை நான் வலியுறுத்தப் போவதில்லை. எடிட்டரை அலுவலகம் வரச் சொல்லுங்கள்' என்று என்னையே தூது அனுப்பினார். இப்படிப் பல முறை இருவருக்குமான தூதுவனாக நான் செயல்பட்டிருக்கிறேன்.

திலகவதி ஐ.பி.எஸ்:

ரா.கி.ர. எழுத எழுத, அவரது எழுத்துக்கள் மெருகேறிக்கொண்டே வருகின்றன. வெகுஜன இதழுக்கு எழுதுவதாலேயே அது இலக்கியம் இல்லை; ஆழமில்லை என்பதாக ஒரு கருத்து நிலவுவது சரியல்ல. ஏராளமாக எழுதித் தள்ளினாலும் வீரியம் குறையாத வித்து அவரது எழுத்துக்களில் உண்டு.

கிரேஸி மோகன் - எஸ்.வி.சேகர்:

ரா.கி.ர. மட்டும் இல்லையென்றால் எங்களது முதல் முயற்சியான 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' குமுதத்தில் தொடராக வந்திருக்காது. நாடகத் துறையில் நாங்கள் முத்திரை பதிக்க ரா.கி.ர.வே காரணம்.

சீதா ரவி:

நூறாண்டுகளுக்கு ஒரு பதிப்பகம் நல்ல நூல்களை மட்டுமே வெளியிடுவது தவம்; அதையே வெற்றிகரமாகச் செய்வது வரம். தவமும் செய்து வரமும் பெற்ற அல்லயன்ஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்.

1 comment:

சுபமூகா said...

ராகிரா தமிழ் இலக்கியத்தில் மேன்மேலும் பெருமைகளை சேர்க்க ராகிராவின் ரசிகன் என்ற முறையில் விழைகிறேன். நிகழ்ச்சியின் தெறிப்புகளை [!] அருமையாகத் தொடுத்திருக்கும் கல்கியின் புதிய நிருபருக்கும் [;-)] பாராட்டுகள்.