Thursday 22 November, 2007

நான் நானாக


நான் நானாக

"என்னங்க. கார்த்திக்கை பற்றி ரொம்ப கவலையா இருக்குங்க. இஞ்சினீயரிங் காலேஜுக்கு அப்ளிகேஷன் வாங்கி வச்சிருக்குன்னு சொன்னா, நான் கேட்டேனாங்கறாங்க. நீங்களாவது கேக்க மாட்டீங்களா?"

ஆமாம். கார்த்திக்கை புரிந்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது. ஒரே மகன். தாத்தா பாட்டி செல்லம் வேறு. சித்ரா அவனை பாட்டு கற்றுக் கொள் என்றாள். மாட்டானாம். ஆனால் பெயிண்டிங்காக வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறான். சித்ராவுக்கு பெயிண்ட் ஸ்மெல் என்றாலே அலர்ஜி. எனக்கும் தரையில் சிதறிக் கிடக்கும் பேப்பர் துண்டுகளையும் காலி பெயிண்ட் ட்யூபுகளையும் கண்டால் எரிச்சலாய் வரும்.

சரி, சின்ன வயசு. நாம்தான் திசை திருப்பி விட வேண்டும் என்று ரெண்டு பேரும் ஒரு நாள் முழுக்க யோசித்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அவனோ, சாப்ட்வேர் பக்கம் தலைவைத்து படுக்காமல், கம்ப்யூட்டரை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து போட்டு ஏதாவது சேர்த்துக் கொண்டிருக்கிறான். ஆரகிள், ஜாவா மாதிரி டிரைனிங் கோர்ஸ் போயேன் என்றதற்கு, அதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிவிட்டான். எப்படி வேஸ்ட் எங்களுக்கு புரியவில்லை.

என் ஆற்றாமையை ஒரு சேர திரட்டி என் நண்பர் அறந்தை மணியனிடம் கொட்டினேன். அவரும் அவனோடு பேசிப் பார்த்தார். என்னிடமும் சித்ராவிடமும் அளந்து பேசுகிறவன், அவரிடம் மணி கணக்கில் பேசினான். காரணம், அவர் உலக சினிமா பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.

கடைசியில் அவரும் என் அப்பா, அம்மா கட்சியில் சேர்ந்து விட்டார். 'டேய்! உன் மகன் உன்னை மாதிரி இல்லைடா. படு புத்திசாலி.. அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று கேபிள் டிவி ஜோசியர் மாதிரி சொல்லி என் வாயை அடைத்துவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அவனாகவே வந்து. "லயோலாவில் விஸ்காம் சீட் கிடைசசிடுச்சுப்பா. ·பீஸ் கட்டிடுங்க" என்று சொன்னான். எனக்குள் ரொம்ப நாளாக அரித்துக் கொண்டிருந்ததை போட்டு உடைத்து விடுவது என்று தீர்மானித்தேன்.

"கார்த்திக்! நீ விஸ்காம் சேர்ந்ததுல எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனா அதையே நாங்க சொல்லியிருந்தா உனக்கு பிடிச்சிருக்காது. அப்படித்தானே?"
"அப்படியில்லையப்பா. எனக்கு சில விவரங்கள் தேவைப் பட்டுச்சு. அதை அறந்தை மணியன் சார் கிட்டேயிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அவ்வளவுதான். உங்க நிறைவேறாத ஆசைகளுக்காகவோ, மத்தவங்க என்ன பண்ணறாங்களோ அதையே நானும் செய்யணும்கிறதுக்காகவோ நான் நிச்சயமா இல்லை. அதை புரிஞ்சுக்குங்க. நான் உங்க மகன்தான். ஆனா நான் நீங்க இல்லை. நான் நானாகவே இருக்க ஆசைப்படறேம்ப்பா. இது தப்பா, சொல்லுங்க?"

கார்த்திக்கின் நெத்தியடி தாக்குதலில் நான் நிலைகுலைந்து போனாலும் 'என் மகன் சிங்கம்டா' என்று மனசின் எங்கோ ஒரு மூலையில் சந்தோஷம் கொப்பளித்தது.

குங்குமம் - 22 நவம்பர் 2007

No comments: