Tuesday 20 November, 2007

நடு இரவில்


"சொல்லும்மா, என்ன ஆச்சு?" நூற்று பத்து என்று காட்டிய தெர்மா மீட்டரை உதறிக் கொண்டே கேட்டார் டாக்டர்.

"இவரு என் புருஷங்க. ஊரை விட்டு பத்து மைல் தள்ளியிருக்கிற கரும்பாலையில வேலை பார்க்கிறாரு. தெனமும் வீட்டுக்கு லேட்டாதான் வருவாரு. நேத்து ராவு ரெண்டு மணி ஆயிட்டு. இவர காணும். நான் பதறிப் போய் நாலு ஆளுகள கூட்டிக்கிட்டு ரோட்ல தேடிக் கிட்டே போனா நல்லூர் கேட்டாண்ட இவரு ரோட்டு மேல கெடக்காரு, சைக்கிளு வாய்கால்ல கவுந்து கெடக்குது. இவர பேயடிச்சிடுச்சுங்க"

"என்னது, பேயா ?" அதிர்ந்தார் டாக்டர்.

"ஆமாங்க மெய்யாலுமா! ஏங்க, நீங்களே சொல்லுங்களேன்."

மனைவி கொடுத்த தைரியத்தில் தலையை சுற்றி கட்டியிருந்த துண்டை சற்று தளர்த்திக் கொண்டு மெதுவாக பேச தொடங்கினான் முருகேசன். "நேத்து பாக்டரியை விட்டு கெளம்ப பத்து ஆயிருச்சுங்க. நாளைக்கு அம்மாசி வருதில்ல, வழியெல்லாம் கும்மிருட்டு! கக்கன் பாலத்துக்கிட்ட ஒரு தொண்டு கெளவி குந்திக்கினு உட்கார்ந்த வாக்கில ரெண்டு கையாலும் தள்ளிக்கிட்டே ரோட்டை கிராஸ் பண்ணிச்சு. காதுல பெருசு பெருசா பாம்படம். நெத்தில பட்டையா துண்ணூறு. வெத்தில போட்ட ஒண்ணு ரெண்டு காவிப் பல்லுன்னு பயங்கரமா இருந்திச்சு. சரி, ராத்திரில கிளவி போகுதுன்னு மனசை தேத்திக் கிட்டு சைக்கிளை வேகமா விட்டேன். மனசுல அந்த கிளவி வந்துகிட்டும் போய்கிட்டும் இருந்தா. நம்ம நல்லூர் ரெயில் கேட் தாண்டி கொஞ்ச தூரம் போயிருப்பேங்க... சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த கெளவி மறுபடியும் ரோட்டை க்ராஸ் பண்ணுது. ஆனா இந்த முறை இடது வலமா! அப்படி கிராஸ் பண்றப்ப, ஒரு தடவ என்னய பார்த்து சிரிச்சுது பாருங்க... யம்மாடி! என் ஈரக்கொலையே வெளியில வந்த மாதிரி ஆயிட்டு. அப்ப அலறிக்கிட்டு சைக்கிளோட விளுந்தவன்தான்...!"

டாக்டருக்கு புரிந்து விட்டது. இது மென்டல் ஹலூசினேஷன். அந்த கிழவியை பற்றியே ஓயாது நினைத்துக் கொண்டே வந்திருக்கிறான். பயத்தின் உச்சத்தில், அந்த கற்பனையே ஒரு முப்பரிமாண பிம்பமாக அவனுக்கு தோன்றியிருக்கிறது.

"முருகேசன்! பேய், பிசாசெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்க ரொம்ப பயந்ததினால, பிரமை ஏற்பட்டிருக்கு. பேயெல்லாம் சுத்த ரீல். நம்பாதீங்க. இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. ரெண்டு நாள்ல சரியாயிடுவீங்க."

மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தது. உடனடியாக பேயோட்டுவதற்கு பூசாரி வரவழைக்கப்பட்டார். முருகேசனுக்கு வேப்பிலையடிக்கப்பட்டு நாலா புறமும் எலுமிச்சைபழங்கள் நசுக்கி எறியப்பட்டன.

ஒரு வார லீவுக்கு பிறகு ட்யூட்டியில் சேர்ந்த முருகேசனின் நண்பன் சரவணனுக்கு விஷயம் தெரிந்து ஓடோடி வந்தான்.

"மடையா! அந்த கெளவி பேயுமில்லே. பிசாசுமில்லே! நல்லா ஜம்னு உசுரோடதான் இருக்குது. நீ ரெண்டு இடத்துல பார்த்ததும் ஒரே கெளவிதான். மொதல்ல பார்த்தது அது பஸ்ல ஏறத்துக்கு முன்னால. அடுத்தது, அது பஸ்ஸை விட்டு இறங்கிப் போகும் போது."

முருகேசனுக்கு உடனே காய்ச்சல் விட்டுவிட்டது.

இந்த கதைக்கான தீப்பொறி... (திரு டி.வி.வரதராஜன்)

நான் சிறு வயதில் வாழ்ந்த உரகடம் என்ற கிராமத்தில் ஒரு பாழடைந்த வீடு ஒன்று உண்டு. பேய் பிசாசு பற்றிய புரளியால் இரவில் அந்த பாழடைந்த வீட்டை கடக்கும் போது காதில் ஏதேதோ ஓசைகள் கேட்கும். ஒரு முறை அந்த வீட்டுக்கு அருகில் இருட்டில் ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. மல்லிகைப்பூ வாசம். கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தம். கால் கொலுசின் சலக் சலக் சத்தம். பளீரென வெள்ளை பற்கள் காட்டி சிரிக்கவும் அலறி விட்டேன். கடைசியில் அது எங்கள் வீட்டு வேலைக்காரி ! கோயிலுக்கு போனவனை எங்கே கானோம் என்று தேடி வர வீட்டில் அனுப்பியிருக்கிறார்கள். அன்று அலறியதை இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

2007 விகடன் தீபாவளி மலர்

No comments: