Monday, 19 November, 2007

ஓடாதே.. யோசி


முதலில் பயங்கர வெடிச் சத்தம் மாதிரி கேட்டது. அதை தொடர்ந்து கட்டிடமே குலுங்கியது. பிறகு தொடர்ச்சியாக எதோ முறிந்து உடைந்து படபடவென சரிவதும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

"சில்வியா! நம்ம ஆபீஸ் பில்டிங் கொஞ்சம் கொஞ்சமாக இடிஞ்சு விழுந்திட்டிருக்குன்னு நினைக்கிறேன். தப்பிச்சு ஓடு" என்று சொல்லிக் கொண்டே அரை இருட்டில் தட்டு தடுமாறி வந்த லதாவின் மேலேயே சில்வியா மோதினாள். ஊனமுற்ற கால்களுக்காக லதா உபயோகிக்கும் கிரெச்சஸ் இரண்டும் மூலைக்கு ஒன்றாக போயின. இருவரும் தலை குப்புற விழுந்தனர். யார் யாரோ அவர்களை மிதித்தும் தடுக்கி விழுந்து கொண்டும் ஓடினார்கள்.

கொஞ்சம் சுதாரித்து எழுந்த சில்வியா வாசலை நோக்கி ஓடினாள். லதா எங்கே போனாள் தெரியவில்லை. பொடி மணலாக தூசு மழை பொழிந்து கொண்டிருக்க மூச்சு திணறியது. நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள். திடீரென காலுக்கடியில் தரை சரிய நிலைதடுமாறி விழுந்து சுவரோம் உருண்டாள். ஒட்டு மொத்த மின்சாரமும் துண்டித்துப் போக இருள் சூழ்ந்தது. ஏதேதோ அவள் மேல் வந்து விழுந்தன. சரிவதும் விழுவதுமாக சில்வியா அடித்து செல்லப்பட்டாள். "யாராவது காப்பாற்றுங்களேன்?" என்று தொண்டை கிழிய கத்தினாள்.

கட்டிடம் ஆடுவது கொஞ்சம் நின்றது. எங்கும் கும்மிருட்டு. திசை தெரியவில்லை. உயிர் பிழைப்போமா என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தபோது, வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆறு மாத குழந்தை கண் முன்னால் வந்து போனது. சில்வியா தன் முழு பலத்தையும் திரட்டி, கைகளை தரையில் அழுத்தி எழ முயன்றாள். மீண்டும் காலுக்கடியில் கான்க்ரீட் தரைதளம் சரியத் தொடங்க 'செத்தேன் நான்' என்றிருக்கும் போது யாரோ கையை பிடித்து மேலே இழுத்தார்கள். சில்வியாவை நாலைந்து பேர் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்தார்கள்.

அரை மயக்கத்திலிருந்த சில்வியா திடீரென கத்தினாள். " போங்கள். லதாவை தேடுங்கள். நாலாவது மாடியில் இருக்கிறாள்"

"லதாவா! சரியா போச்சு. ஹேய் லதா... இந்தா உன் பிரெண்டை பார்த்துக்கொள்" என்று துளி கூட காயம் இல்லாத லதாவிடம் சில்வியாவை ஒப்படைத்துவிட்டு இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்ற ஓடினார்கள்.

"லதா, என்னால் நம்பவே முடியவில்லை! நீ எப்படி தப்பித்தாய்? உன்னிடம் ஸ்டிக்ஸ் வேறு இல்லையே?"

"அதனாலென்ன? நான் லேசில் நம்பிக்கை இழக்க மாட்டேன். இருப்பது போனால் கூட அது கூட ஒரு விதத்தில் நன்மைக்கே என்று நினைப்பேன். உன் மீது மோதி விழுந்த எனக்கு வசதியாக ஒரு பெரிய மேஜை கிடைத்தது. அதன் அடியில் தவழ்ந்து, நுழைந்து, அதன் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டேன். உயர் கட்டிடங்கள் இடிந்து விழும்போது தரைதளங்கள் பிளந்து உள்ளுக்குள் நொறுங்கி விழும். அந்த சமயத்தில் டிராப், ஹைடு, ஹோல்டு (படு, பதுங்கு, பற்று) என்பவை உயிர் காக்கும் மந்திர வார்த்தைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் மேல்தளத்தில் இருந்தது கூட நல்லதாகப் போயிற்று. ஆட்டம் நின்றதும் நானே தவழ்ந்து மேலே வந்து விட்டேன். ஓடுவதற்கு உனக்கு வலுவை கொடுத்த அதே ஆண்டவன் எனக்கு யோசிக்க புத்தியையும் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கொடுத்திருக்கிறான். அவ்வளவே !"

இந்த கதைக்கான தீப்பொறி.... (திருமதி ப்ரியதர்ஷிணி)

சென்னையில் நிலநடுக்கம் வந்தபோது நான் டி.வி. நியூஸ் ரூமில்தான் இருந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரை பிடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தோம். வெளியே வருவதற்கு சில நிமிடங்களே ஆன போதும் வீட்டிலிருக்கும் குழந்தை, அம்மா, அப்பா அனைவரும் கண்முன் வந்து போனார்கள். ஒரே தள்ளு முள்ளு. இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் நிறைய பேருக்கு தெரியவில்லை, என்னையும் சேர்த்து.

2007 விகடன் தீபாவளி மலர்

No comments: