Wednesday 28 November, 2007

கிரீடம்


"ஏங்க. வெயிட்டர் காத்துக்கிட்டு இருக்கான். பில்லை பார்த்து பணத்தை வைச்சோமா, போனோமான்னு இல்லாம... உங்க இன்ஸ்பெக்ஷன், வெரி·பிகேஷனையெல்லாம் ஆபீஸ்ல வைச்சுகுங்க".

என் மனைவி வார்த்தைகளை அம்புகளாய் பொழிந்தாள். சட்டென்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை உருவி அந்த அட்டைக்குள் சொருகினேன். வைத்த இரண்டாவது நொடியிலேயே அதை கொத்திக் கொண்டு போனான் வெயிட்டர்.

பொதுவாக பில்லுக்கு பணம் கொடுக்கும்போது என் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரிதான் இருக்கும். ஆனால் அதற்கு மாறக என் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியதை என் மனைவி கவனித்துவிட்டாள். எங்களுக்குள் பல அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் என் மனதில் ஓடும் எண்ண அலைகளை எ·ப் எம் ரேடியோ மாதிரி கேட்க கூடியவள் என் மனைவி. கேட்டுவிட்டாள்!
"அது வந்து... பில்லுல ஸ்பெஷல் ரவா மசாலாவுக்கான அமௌண்ட் விட்டிருக்கு. முப்பது ரூபா லாபம். அடிக்கிற கொள்ளையில கொஞ்சம் கொறைஞ்சாதான் என்ன?"

"ஏங்க, சாப்ட பொருளுக்கு பணம் கொடுக்கலைன்னா தப்புங்க. பேதி வரும்". என் மனைவி எப்போதும் இப்படிதான்! ஒரு தத்துவம் சொல்லி கூடவே ஒரு சாபமும் கொடுத்து பயமுறுத்துவாள்.

"சரி.. சரி. இஷ்யூ பண்ணாத. போகும் போது கல்லாவுல எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துட்டு போகலாம்."

"சுத்தம். நீங்க மிஸ்டர் க்ளீன்னு பேரு வாங்கிக்கிட்டு போயிடுவீங்க. அந்த வெயிட்டருக்கு வேலை போயிடும். இருங்க, நான் டீல் பண்ணறேன்". அந்த வெயிட்டரை தேடிப்பிடித்து மெல்லிய குரலில் சொன்னாள். அவன் அதிர்ந்து போய் ஓட்டமாய் ஓடி கூடுதல் பில் வாங்கி வந்தான். என் முகத்தில் விளக்கெண்ணெய் வழிந்தது. நெஞ்செல்லாம் பூரிக்க எனக்கு கை கொடுத்துவிட்டு போனான் அந்த வெயிட்டர்.

என்னை பொறுத்த வரை நேர்மையாய் இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. நல்லவனுக்கு இது காலமில்லை. வல்லவனுக்குதான் காலம். ஏமாற்றுகிறவனுக்குதான் காலம்!

வெறுப்புடன் ஸ்கூட்டரை உதைத்தேன். "ஆஹா! சபாஷ் ! பலே ! நான்தான் இன்னிக்கு நேர்மைக்கு வாரிசு. என் தலையில கிரீடம் இருக்கா பாரு?" என்றேன் கேலியாக.

வித்யா ஏதோ சொல்ல வாயெடுக்கவும் அந்த வெயிட்டர் ஓடி வந்தான். "ஐயா! வாஷ் பேசின் கிட்டே இந்த செல்போன் இருந்துச்சு. உங்களுதா பாருங்க."

தூக்கிவாரி போட்டது! ஆமாம்! எட்டாயிரம் ரூபாயில் போன மாசம்தான் வாங்கினேன். "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றேன்.

"தலையில கிரீடம் இருக்குங்க!" என்றாள் வித்யா புன்சிரிப்பாக.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு விஜய் ஆதிராஜ்)

ஒருமுறை கொட்டும் மழையில் சென்னை எக்மோரிலிருந்து அண்ணா நகருக்கு போக ஆட்டோ தேடினேன். மிகவும் ஆச்சர்யப்படும் விதத்தில் நியாயமான கட்டணத்தில் ஒரு ஆட்டோ கிடைத்தது. வீடு போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு சற்று அதிகமாகவே கொடுக்க வந்தபோது 'உழைப்புக்கு மேல வாங்கற எந்த ஒரு காசும் உடம்புல ஒட்டாது சார்' என்று சொல்லி அவர் தன் கூலியை மட்டும் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவரின் நேர்மையை கண்டு வியந்து போனேன்.

(விகடன் தீபாவளி மலர் 2007)

1 comment:

Unknown said...

நான் உங்கள் கதைகளை விகடனில் படித்திருக்குறேன்...
அட்டகாசமாக இருக்கு போங்க!!!!!!
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!!!!