Thursday, 26 April 2012

சுஜாதா

திரு சுஜாதா அவர்களை முதன் முதலாக ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. 1997 என நினைக்கிறேன். எங்கள் நாடகத்தை பார்க்க வந்திருந்தார். கொஞ்சம் கூட தயங்காமல், கிடைத்த அரிய சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, வார இதழ்கள் மீது எனக்குள்ள கோபத்தை கொட்டினேன். அப்போது அவர் ஒரு சில டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு வேதமாகவே தோன்றியது.

"நடராஜன், ஒரு பத்திரிக்கை உங்கள் கதையை திருப்பியனுப்பிவிட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன மாதிரி எதிர்பார்க்கிறார்கள் என்பதை நுட்பமாக கவனியுங்கள். அதற்கு ஏற்றமாதிரி உங்கள் கதைகளை அமையுங்கள். சோம்பல் படாமல் அடித்து, திருத்தி, மாற்றியமையுங்கள். உங்கள் சிந்தனை முற்றிலும் புதிய கோணத்தில், வித்தியாசமான களன்களில் இருந்தால் நல்லது. பளிச்சென்று தொடங்குங்கள். தொய்வில்லாமல் விறுவிறுவென சொல்லுங்கள். முடிவை வாசகன் நெருங்கும் போது 'அட' என்று அவன் வியக்கும்படி செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வெற்றி" என்றார். அதன் பிறகுதான் என் பல சிறுகதைகள் பிரசுரம் ஆயின.

சிறுகதையில் ஒரு வாக்கியத்தை உருவினால் அந்த சிறுகதையே சரிந்து விடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும் என்றார். 


சுஜாதாவின் ஆரம்ப கால கதைகளில் நீரஜா என்ற கதாபாத்திரம் வரும். என் இரண்டாவது பெண்ணின் பெயர் நீரஜா.

ஊடகங்களின் உள்குத்து - அட்சயதிருதியை

அட்சயதிருதியை நகை வியாபாரம் ஒரு கூட்டு கொள்ளை. நகை வியாபாரிகள் தங்கள் கொள்ளையை அரங்கேற்ற வேண்டுமென்றால் ஊடகங்களின் துனை தேவை. ஊடகங்களுக்கும் விளம்பரம் கிடைப்பதால் அவர்களும் அந்த கொள்ளையில் பங்கு கொள்கிறார்கள். எல்லா அச்சு ஊடகங்களும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று ஐதீகம் என்ற பொய் பல்லவியை வைத்து ஸ்பெஷல் பக்கங்கள் போட்டிருக்கின்றன. ஐபிஎல் வியாபாரம் நடக்கும் போது அட்சய திருதியை வியாபாரம் எம்மாத்திரம். மூட மக்கள் இருக்கும் வரை கொள்ளையர்கள் கொள்ளையடிப்பார்கள்.

அட்சயதிருதியை என்ற ஒரு தர்ம சிந்தனையை ஒரு வியாபார உக்தியான அவலத்தை நான் ஒரு பத்தியாக எழுதியதற்கு, என் அருமை நண்பர் மக்களை 'இடியட்' என்று எப்படி சொல்லலாம் என்று கோபித்துக்கொண்டார். இடியட் என்பவன் யார்? யார் சொல்பேச்சை அப்படியே கேட்டு, மூளைக்கு கொண்டு பொய் அலசி ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்பவன்தான் மூடன். ஆங்கிலத்தில் இடியட். இன்று அட்சயதிருதியை விஷயத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மூளை சலவை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. என் விவசாய நண்பர் இன்று என் வீட்டுக்கு மதியம் வந்தார். பிடித்த மழை விடவில்லை. ஆனால் அவர் நிம்மதியற்று பொறுமையிழந்து கொண்டிருந்தார். என்னவென்று கேட்டேன். "இன்று அட்சய்திருதியை, பாங்கில் போய் இரண்டு தங்க காசு அவசியம் வாங்க வேண்டும். ஆர்டர் செய்திருக்கிறேன், வீட்டம்மா உத்திரவு" என்றார். நான் அவருக்கு பால பாடம் எடுத்தேன். ஆனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. "தங்கம் வாங்கனும், அப்படி செஞ்சாத்தான் குடும்பம் செழிக்கும்னு எல்லாரும் சொல்றாங்க" என்றார். இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களை அவர்களுக்கே தெரியாமல் இடியெட்டுக்களாக ஆக்கியிருக்கிறார்கள். கோபலவல்லிதாசர் அருமையான ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். பிரிடிஷ் வருவதற்க்கு முன்னால் உணவு விற்பது ஒரு பாபகரமான செயலாக இருந்தது. கிடைக்கும் ஐஸ்வர்யத்தில் ஒரு பகுதியை உணவாக மக்களுக்கு கொடுப்பது சத்ரிய மற்றும் வைசிய தர்மமாக இருந்தது. காலப்போக்கில் ஒரு தர்ம சிந்தனையே ஒரு வைசிய தொழிலாக ஆகிவிட்டது

கோபல வல்லிதாசரும் அட்சய திருதியையும்

எனக்கு தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைத்தபோது, நான் அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. நான் எதிரிபார்த்தது, பெரம்பலூர் அல்லது கடலூர். ஆனால் எனக்கு வாய்த்தது தூத்துக்குடி. ஆனால் வந்து பிறகுதான் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேன் என்று புரிந்தது. கடந்து போயிருக்கும் இந்த மூன்று ஆண்டுகளும் என் வாழ்நாளில் மிக மிக மிக மகிழ்ச்சியான நாட்கள். நான் சமுதாய பணிகளில் என்னென்ன செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினேனோ அனைத்தையும் பார்த்துவிட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் அடிக்கடி சந்திக்கும் மக்கள் வெள்ளந்தியான அருமையான மக்கள். எனக்கே உரித்தான தனித்துவமான முயற்சிகளை செய்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் மிகவும் திருப்தியோடு இந்த ஊரைவிட்டு செல்வேன் என நினைக்கிறேன். 

அடுத்தபடியாக இந்த ஊரில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவாக இருக்கின்றன. கோபால வல்லிதாசர் என்ற ஒரு வைஷ்னவ ஆன்மீக இளைஞர். மிக அருமையாக பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். சுகி சிவம் ஒரு ரசனை என்றால் இவரது பேச்சு இன்னொரு தனி சுவை. இந்த மூன்று வருடங்களில் அவரது தொடர் சொற்பொழிவுகளில் ஐந்து ஆறு கேட்டிருக்கிறேன். அத்தனையும் முத்துக்கள், வைரங்கள்...... கடந்த ஐந்து நாட்களாக ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று அட்சய திருதியை. சச்சின் 200 அடித்தபோது என்ன வேகம் இருந்ததோ, நான் எவ்வளவு ஆனந்தப்பட்டேனோ, அந்த மாதிரி இன்று நான் பரவசப்பட்டேன்.

அட்சயதிருதியை ஏன் அவ்வளவு அதி முக்கியமானது. கோபால வல்லிதாசர் கூறுகிறார். அன்றுதான் பரசுராமர் பிறந்தார். அதாவது கொட்டம் அடிக்கும் சத்திரியர்களை நல்முறை படுத்த எடுத்த ஒரு எழுச்சி. திரேதா யுகம் தொடங்கிய நாள். அதாவது எல்லா மக்களும் நன்மக்களாக வாழ்ந்த ஒரு காலம். சுதாமன் கொடுத்த ஒரு பிடி அவலை கண்ணன் உண்டு களித்த நாள். அதாவது தரித்திரம் பிடித்தவன் ஒரு எளிய தானம் செய்ய, அதற்கு ஆண்டவன் கருனை காட்ட, அவன் குடும்பத்திற்க்கு ஐஸ்வர்யம் வந்த நாள். தன்னிடம் இருக்கும் ஒரு சிறு தனத்தை கொடுக்கும் போது குபேரன் நம் வீட்டில் குடிபுகிறான். 

எனவே தங்கம் வாங்குவது ஒரு சுயநலம். இந்நாளுக்கு எதிரான ஒரு ஆகாத செயல். அதாவது ஒரு கோயிலில் போய் அப்பிரதட்சினமாக சுற்றுவது எவ்வளவு ஆகாத செயலோ அந்த மாதிரி. தந்தையின் பிணம் கிடக்கும் போது ஆடிப்பாடி மகிழ்வது மாதிரி (இது என் சொந்த சரக்கு). தர்மம் செய்து ஐஸ்வர்யத்தை பெருக்குவதுதான் அட்சயதிருதியை. தர்மம்தான் பிரதானம். கிடைக்கும் ஐஸ்வர்யம் அவன் கொடுப்பது. எனவே தங்கம் வாங்கி வீட்டில் வைப்பது, சனாதன தர்மத்திற்கு எதிரானது. 

ஒரு வேளை தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று தோண்றிவிட்டால், ஒரு திருமணம் ஆகாத ஒரு ஏழை பெண்ணை (உங்கள் உறவினராகக் கூட இருக்கலாம்) கூடவே அழைத்து போய் அவர்களுக்கு தானமாக கொடுங்கள். இது அதி விஷேஷம். அந்த ஏழைப் பெண், என் பெண்தான் என்று ஜல்லியடிக்காதீர்கள் (இதுவும் என் சரக்கே). சரி போகட்டும், வாங்கியது வாங்கியாகிவிட்டது. கூடிய சீக்கிரம் ஒரு தர்ம காரியத்தை நிறைவேற்றி, செய்த ஆகாத காரியத்திற்கு பரிகாரம் செய்து விடுங்கள். அடுத்த வருடம் தங்கம் வாங்காதீர்கள். தர்ம காரியம் செய்து, ஒரு நல்ல காரியத்தை தொடங்குங்கள். இந்த பதிவை எவ்வளவு மக்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். எந்த ஒரு பத்திரிக்கையும் இதை செய்ய முன் வராது. காரணம், அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் போய்விடும். சோஷியல் நெட்வொர்க்தான் செய்யமுடிய்ம். ப்ளீஸ்.....

டிரைவிங் லைசன்ஸ் வாங்கலையோ?

இன்று காலையில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போனேன். எனக்கு 50 வயது ஆகிவிட்ட காரணத்தால் தற்போதைய ஓட்டுனர் உரிமம் காலவதியாகிவிட்டது. புரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக புதுப்பிக்கும் உரிமம் பெறுவது என்ற முடிவோடு போனேன். தேவையான பாரம்ங்களை நெட்டிலிருந்து டவுண்லோடு செய்து கொண்டேன். அதன் படி நேற்று இரவு கால்கடுக்க ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்க காத்திருந்து வாங்கினேன். தெரியாத்தனமாக எனது பெயரையும், எனது மச்ச விவரங்களையும் நானே எழுதிவிட்டேன். அதை பார்த்ததும் டாக்டர் பொங்கிவிட்டார். அந்த பார்ம் முழுவதும் அவர்தான் நிரப்ப வேண்டுமாம். தவிர மா.வ.போ.அலுவலகத்துக்கு வெளியே விற்க்கும் பார்ம்தான் சரி, டவுண்லோடு பார்ம் சரியில்லை என்று மீண்டும் அனல் கக்கினார். ராஜேந்திரகுமார் கதையில் வரும் கதாபாத்திரம் மாதிரி 'ஞே' என்று விழித்தேன். ஏதோ கருனை செய்து கையெழுத்து போட்டு, ஐம்பது வாங்கிக் கொண்டார். நாளை எப்படி நடக்கப் போகிறதோ என்று வயிற்றை கலக்கியது.

மா.வ.போ.அலுவலகம் போனதும் யாரை கேட்பது என்று தெரியவில்லை. என்னுடன் வந்த நண்பருக்கு தெரிந்த ஒரு க்ளார்க் பெண்மணியை கேட்டோம். 'எல்காட் பார்ம் எங்கே?' என்றார். அப்படியா? அது என்ன? என்றோம். பின்பக்கம் போய் எல்காட் பார்ம் வாங்கி வாருங்கள் என்றார். ஒரு ரூபாய்தான். அதில் அனைத்து விவரங்களும், அவர்களே நிரப்ப வேண்டும் என்று எழுதியிருந்தது. சரி என்று ஒன்றும் எழுதாமல் போனேன். 'ம். பார்மை நிரப்புங்கள்' என்றார். அப்ப அந்த டாக்டர் சொன்னது? அது டாக்டரோடு போச்சு. கடகடவென்று எழுதினேன். எல்காட் ரூமுக்கு போங்கள் என்றார்.

எல்காட் ரூமில் போனால் வழியெல்லாம் ப்ரோக்கர்கள். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. எல்காட் ஆசாமி, என் பழைய ஓட்டுனர் உரிமத்தை அப்படியும் இப்படியுமாக பார்த்தார். :இது சென்னை எடுத்தது. தூத்துக்குடியில் செல்லாது. எனவே, சென்னையிலிருந்து தடையில்லா சான்று வாங்கி வாங்க' என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். "வேறு வழியே இல்லையா?" என்று மறுபடியும் 'ஞே' என்று விழித்தேன். அப்போது என்னையே அறியாமல் ஒரு மாஜிக் செய்திருந்தேன். எனது விசிடிங்க் கார்டை முன்னால் இனைத்திருந்தேன். அவருக்கு நபார்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன்மோகன் சிங்கே வந்து மா.வ.போ.அலுவலகத்தில். ஏதாவது கேட்டாலும் அவருடைய பதவி பவிஷூ எடுபடாது, நாம் எந்த மூலை என்று நினைத்திருந்தேன். 'வேண்டுமானால் ஆர்.டி.ஓவை பாருங்கள்' என்று எனது அனைத்து காகிதங்களையும் என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

ஆ.டி.ஓ. காபினுக்கு போய் எனது விசிடிங் கார்டை நீட்டினேன். என்ன அதிசயம்! அவர் இன்முகம் காட்டி என்னை உட்காரச் சொல்லி, விசாரித்தார். சென்னை மேட்டருக்கு ஒரு அபிடவிட் கொடுக்கச் சொன்னார். பெல் அடித்து பியூனை வரவழைத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி வரச் சொன்னார். வந்ததும் அபிடவிட்டை எழுதி கொடுத்தேன். பணம் நான் கொடுக்க பியூன் போய் கட்டி வந்தார். நேராக எல்காட் ரூமுக்கு போய் போட்டோ எடுத்துக் கொண்டேன். அரை மணி நேரத்தில் எனக்கு புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸ் கிடைத்து விட்டது.
 
 இரண்டு விஷயங்கள் நிரூபணம் ஆனது.
 
1. நபார்டின் விசிடிங் கார்டுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. 
 
2. மா.வ.போ.அலுவகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.·

Monday, 23 April 2012

சிறுகதை எழுதலாம் வாங்க

முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில்,  என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, நான் முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது இவை பயண்பட்டால் அது என் பாக்கியமே.

எது நல்ல சிறுகதை என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால்தான் என்னவோ, முதல் பரிசு பெற்ற சிறுகதை நமக்கு சாதாரணமாக தெரியலாம். ஆறுதல் பரிசு பெற்ற கதை முதல் பரிசுக்கு உரியதாக இருக்கலாம். அதே மாதிரி சிறுகதையின் எல்லைகளை யாராலும் தீர்மாணிக்க இயலாது. ஆனால் ஒன்று. ஒரு சிறுகதை, நம் உள் வட்ட நண்பர்களை, உறவினர்களை தாண்டி, ஒரு சிலரையேனும் திருப்தி படுத்திவிட்டது என்றால் அது நமக்கு வெற்றியே. அந்த பெருவாரியான ரசிப்புத்தன்மையை நோக்கியே ஒரு ஆரம்ப எழுத்தாளன் இயங்க வேண்டும்.

1. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வு. எனவே இதில் நாம் எடுத்துக் கொள்வது ஒரு சிறிய சம்பவமாக இருக்கட்டும். அதை மையமாக வைத்து முன்னே பிளாஷ்பேக் சேர்த்து, பின் பகுதியில் முடிவைச் சொல்லி கதை செய்யலாம். மாதங்கள், வருடங்கள் என்றெல்லாம் உருட்டுவது ஆரம்ப எழுத்தாளர்கள் தவிர்க வேண்டியவை ஆகும்.

2. கதைக்கு தொடக்க வார்த்தைகள் மிக மிக அவசியம். இவைகள்தான் வாசகர்களை படிக்க தூண்டுபவை. எனவே நேரடியாக கதைக்கு சம்பந்தமான விஷயங்களை கொண்டுவந்துவிடுதல் நல்லது. 'ஒரு நல்ல தொடக்கம், பாதி முடிவை எட்டும்' என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்றைய உலகம் அவசர உலகம். கதையை படிப்பதற்கு முன்னால் எவ்வளவு பக்கம் என்று பார்க்கும் மனப்பாண்மை கொண்டது. எனவே குழப்பமில்லாமல், ஜெட் வேகத்தில் சுறு சுறுவென தொடங்கும் கதை நிச்சயம் படிக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் தலைப்பே மிக சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.  கதையின் தலைப்பை படித்து, அதனால் ஈக்கப்பட்டு கதையை படிக்கப் போகிற வாசகர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

3. சிறுகதையில் எந்தவித தேவையில்லாத வார்த்தைகளும் இருக்கக் கூடாது. இந்த ஒரு வரியை எடுத்துவிடுவதால் அந்த கதை விழுந்துவிடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும். கதையை எழுதியவுடன் ஒரு வேற்று மனிதனாக இருந்து தானே படிக்கும் போது அதிகப்படியானவை பளிச்சென்று தெரிந்துவிடும்.

4. கதை சொல்லும் வார்த்தைகளில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளை படிக்கும் வாசகனை அது எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள ஜாலம்தான் உங்களுக்கு ஒரு முத்திரையை அளிக்கிறது. எனவே மேம்போக்காக எழுதாமல், ஒரு சிற்பக் கலைஞன் சிற்பி மாதிரி வார்த்தைகளை கையாள வேண்டும்.

5. நடுநடுவே வரும் வசனங்கள் பளிச் பளிச் என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும். அது கதையின் ஓட்டத்தை தீர்மாணிப்பதாக இருக்க வேண்டும். வெட்டியாக வரும் வசனங்கள் வாசகனை வெறுப்பேற்றும்.

6. முடிவு நெத்தியடியாக இருக்க வேண்டும். அந்த வரியை படித்ததும், வாசகன் 'அட' என்று வியக்க வேண்டும். அவன் திருப்தியுடன் ஒரு புன்னகை செய்தால் அது உங்களுடைய வெற்றி.

7. கதை எழுதுவதற்கு முன்னால் அதை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலும் என்ன சொல்லப் போகிறோம், அவைகள் சீராக இருக்கின்றனவா என்று மனசுக்குள் ஒரு காட்சி மாதிரி ஓடவிட்டு பார்த்துவிட்டு எழுத உட்கார்ந்தால் நல்லது.

8. ஒரு கதைக்கான கரு கிடைத்துவிட்டால், அதை மனசுக்குள் கொஞ்ச நாட்கள் உருட்டிக் கொண்டே இருங்கள். அது சம்பந்தமாக விவரங்கள், விவரனைகள், தர்க வாதங்கள், உங்களின் அனுமானங்கள் ஆகியனவற்றை அலசி செம்மை படுத்த வேண்டும்.

9. இன்றைய பத்திரிக்கை உலகில் சிறுகதைகள் என்பது A4 சைஸ் பேப்பரில் எழுத்துரு 10ல் இரண்டரை பக்கங்களுக்கு மிக கூடாது. புதிய எழுத்தாளர்கள், தங்களின் கையெழுத்து மிக தெளிவாக இருந்தால் மட்டுமே, கையிலால் எழுதி அனுப்பலாம். கொஞ்சம் மோசமான கையெழுத்து கொண்டவர்கள் கம்ப்யூட்டரில் அடித்து அனுப்புவது நல்லது. தற்போதைய சூழலில் பொறுமையாக படிக்க ஆளில்லை.

10. கதைக்கான களம் மிகவும் வித்தியானமானதாக இருந்தால் மிக நல்லது. மண்வாசனை கொண்ட கதைகளுக்கு என்றுமே மரியாதை உண்டு. அதற்காக வாசகர்களை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது. புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.

11. முதலில் உங்கள் கதை ஒரு பத்திரிக்கையால் நிராகரிப்பட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வளரும் எழுத்தாளருக்கு எதிர்மறை விமர்சனங்களை பண்புடன் எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் இந்தக் கதை அவர்களை திருப்தி படுத்தவில்லை? என்ற கேள்வி போட்டு ஆராயுங்கள். அந்த பத்திரிக்கையில் வரும் கதைகளின் போக்கை கவனியுங்கள். அவர்களின் மன ஓட்டம் புரியும். அதற்கு ஒத்துப்போக முடிந்தால் நல்லது. இல்லையேல் அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையை பாருங்கள்.

12. ஒரு கதை நிராகரிப்பட்டததும், அதை மாற்றி எழுத சோம்பல் படவே கூடாது. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களது பல சிறுகதைகள், மாற்றி எழுதப்பட்டு, வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கும்.

13. கதை எழுதுவதற்கு மிக அடித்தளமாக இருப்பது அப்ஸர்வேஷன். நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை உண்ணிப்பாக கவனியுங்கள். ஒரு குடிகாரனை பற்றி எழுதினீர்களானால், அவன் இயல்பை ரசிப்புத்தன்மையோடு எழுதுங்கள். வண்ணதாசன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களை படியுங்கள். அவர்கள் எப்படி எழுத்துக்களை நகர்த்துகிறார்கள் என்பது புரியும். கதை படிக்கும் போது எழுத்துக்கள், ஆடி வரும் தேர் மாதிரி மனசை கொள்ளை கொள்ள வேண்டும்.

14. கதையில் ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது டெக்னிகலான விஷயங்கள் பற்றியோ எழுதப்போகிறீர்கள் என்றால் அதை பற்றி விலாவாரியாக படியுங்கள். அதன் பிறகு எழுதினால், அதன் உண்மைத்தண்மை வாசகர்களை ஈர்க்கும். வாசகனின் தேடுதல் வேட்க்கையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.

15. கூடுமானவரை உங்களது அனுபவங்களை, நீங்கள் பார்த்ததை, எழுத்தில் கொண்டுவாருங்கள். அதை அப்படியே நேரடியாக எழுதாமல் உங்கள் கற்பனையை ஓடவிட்டு, ஒட்டு சேருங்கள். ஆண் சம்பந்தப்பட்டதை பெண் ஆக்குங்கள். ஒரிஜினல் சித்தப்பாவை கதையில் மாமாவாக்குங்கள். அவர்கள் கதையை அப்படியே எழுதினால் பல பிரச்சனைகள் பின்னால் எழலாம். தவிர, உங்களது தனித்தன்மை அடிப்பட்டு போய்விடும்.

16. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒரு சில பத்திரிக்கைகள் கொஞ்சம் விலங்கமான/லைட்டான கதைகள் எதிர்பார்க்கும். ஆனால் அதுவே மற்ற பத்திரிக்கையில் எடுபடாது. பெண்கள் பத்திரிக்கையில் குடும்ப பிரச்சனைகளை அலசும் கதைகள் வரவேற்கப்படும். ஒரு பக்க கதையென்றால் 70 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் கதைக்கான படம் மற்றும் லே- அவுட்டை டிசைனை கணக்கில் கொண்டு பத்திரிக்கையின் ஒரு பக்கத்தில்  கொண்டுவர முடியும்.  பத்திரிக்கையின் எடிடோரியல் செய்ய வேண்டிய எடிடிங் வேலையை நீங்கள் குறையுங்கள்.

17. கதையை எழுதி முடித்தவுடன், உங்கள் நண்பர் குழுவில் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நேரடியாக விமர்சனம் செய்யும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஒரு வாசகனாக அவருக்கு வரும் சந்தேகங்களை குறித்துக் கொண்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.

18. ஒரு கதைக்கான கரு நேரடியாக கிடைக்காது. ஒரு நிகழ்வின் தாக்கம்தான் ஒரு கதைக்கான கருவாக இருக்கமுடியும். சிக்னலில் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அம்மாவின் தோளில் தலை தொங்கி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்க்கிறீர்கள். இதில் ஒரு கதைக்கான கரு உங்களுக்கு தோன்றலாம். எனக்கு அது மாதிரி ஒரு கரு தோண்றி, அதை கதையாகி குங்குமத்தில் வெளி வந்தது. ராஜேஷ்குமாரின் நிறைய க்ரைம் கதைகளுக்கு அவர் தினம் படிக்கும் செய்தித்தாள்களே அதிகம் உதவுவதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

19. எழுத எழுததான் வார்த்தைகள் வசப்படும். எனவே நிறைய எழுதுங்கள். அதற்காக நிறைய படியுங்கள். வார்த்தைகளை கொட்டித்தள்ளாமல் அம்மா கைமுறுக்கு சுற்றுவது மாதிரி நிதானமாக கையாளுங்கள். ஒரு அரை மணிநேர கச்சேரிக்கு பின்னால் ஒரு நூறு மணிநேர உழைப்பு இருக்கும். எனவே பலமுறை அடித்து திருத்தி மாற்றியமைத்து உங்கள் மனசுக்கு திருப்தியாகும் வரை முயற்சி செய்யுங்கள்.

20.ஒரு கதையின் நீளத்தை அந்த கதைதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்க கதைக்கான விஷயத்தை வைத்துக் கொண்டு டி.வி.சீரியல் மாதிரி மூன்று பக்கங்களுக்கு இழுக்காதீர்கள்.  உங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில வார்த்தைகள், பாராக்கள், நீங்கள் கதையில் சேர்த்திருப்பீர்கள். அது கதையின் போக்குக்கு அதிகப்படியாக இருக்குமானால், யோசிக்காமல் வெட்டித்தள்ளுங்கள்.

என்ன, சரிதானே. புறப்படுங்கள்.

Sunday, 22 April 2012

அட்சய திருதியை

நாளைக்கு அட்சய திருதியை. தயவு செய்து யாரும் தங்கம் வாங்கி சொத்து சேர்க்காதீர்கள். பீடைதான் பிடிக்கும். முடிந்தால் யாருக்காவது தானம் செய்யுங்கள். நம் தர்மத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அரை பவுனாவது தங்கம் வாங்குவேன் என்று அடம் பிடித்தால் அதை வாங்கி ஒரு ஏழைக்கு தானம் செய்துவிடுங்கள். நான் எழுதி தருகிறேன். உங்கள் குடும்பதிற்கு நல்லது நிச்சயம் நடக்கும்.

ஜெயமோகன்

இன்று கூந்தல் என்ற ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை படித்தேன். அடுத்த கதையை என்னால் படிக்க முடியவில்லை. என்னமாய் எழுதியிருக்கிறார்! கூந்தலை விரும்பும் ஒரு பெண் விதவை. ஆனால் சமூகம் அவளுக்கு கூந்தலை வைத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கிறது. அவள் தூங்கும் போது தன் மண்டைக்குள் கூந்தல் வளர்வதை உணர்கிறாள். மயிர் மழிக்கப்படும் போது துடித்துப் போகிறாள். ஆனால் அவளுடைய கொள்ளு பேத்திக்கு கூந்தலே சுமையாய் இருக்கிறது. கூந்தலை வெட்டி எறிய வேண்டும் என்று நினைக்கிறாள். வெட்டினால் டைவர்ஸ் என்கிறான் கனவன். வேதனையில் அவளே கத்திரிக்கோலை எடுத்து சிரமப்பட்டு தன் முடியை வெட்டி ஒரு பைக்குள் போடுகிறாள். ஜெயமோகன், ஒரு நல்ல படைப்பை கொடுத்தமைக்கு நன்றி. டெயில் பீஸ். இந்த கதை குமுதத்தில் வந்தது. ம்... என்ன கொடுமைடா சாமி!

கொலை வெறி சொல்லும் பாடம்

தனுஷ் அந்த வொய் திஸ் கொலைவெறி பாடலை பாடினாலும் பாடினார். அது மொழி கடந்து, இனம் கடந்து, தேசம் கடந்து போனது. ஓபாமாவும் மன்மோகன் சிங்கும் அந்த பாடலுக்கு கட்டிபிடித்து டான்ஸ் ஆடவில்லை அவ்வளவுதான். 3 படத்தின் எதிர்பார்ப்பு ஒரே நாளில் எண்ணமுடியாத உச்சத்தை தொட்டது.

படம் வெளியாகியது. உச்சாதான் போனது. தனுஷ் தலைமறைவு. ரஜினி எனக்கும் 3 படத்தின் விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிடுகிறார்.

ஏன் இந்த கொலைவெறி?

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தமிழ் சினிமாவில் இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. ஒன்று படம் எடுத்தல். இன்னொன்று படத்தை வியாபாரம் செய்தல்.

எந்த ஒரு பொருளை உற்பத்தி செய்தாலும் அது சந்தையை சார்ந்துதான் அதன் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் சந்தையை பற்றி ஆய்வு செய்ய பெரிய பெரிய கம்பனிகள் ஒரு பிரயேக டீமை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து சந்தையை கண்கானிக்கிறார்கள். அதற்கு ஏற்றால் போல மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது? ஒரு சினிமாவின் கதை இரண்டு மூன்று மாதங்களில் முடிவாகி விடுகிறது. தயாரிப்பாளருக்கு அந்த கதையின் வலு சந்தையில் எப்படி நிற்க்கும் என்ற தகவல் கூட கொடுப்பதில்லை. அப்படி அவர் கேட்டுவிட்டால் அது இயக்குனரின் ஈகோவை பாதிக்கிறது. கடைசியில் பார்த்தால் அந்த படத்தின் கதை அரைத்த மாவாகவே இருந்துவிடுகிறது. கதைதான் வியாபாரத்தின் உந்து சக்தி. ஆனால் இவர்கள் படத்தின் பிரபலங்களை வைத்து வியாபாரம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரு கொலை வெறி பாடல் எப்படி ஒரு படத்தின் வெற்றியை தீர்மாணிக்க முடியும்? ரஜினியின் மகள் எடுக்கும் படம் என்றால் குப்பை கூட தங்கம் ஆகிவிட முடியுமா? நம் இயக்குனர்கள் காதலை தாண்டி வேறு கதைகள் சொல்ல முயற்சிப்பதே இல்லை.

ஷாருக்கான் தான் அமெரிக்காவில் பட்ட அவமானங்களை வைத்து மை நேம் இஸ் கான் என்ற படம் எடுத்தார். அந்த கதையின் வீரியத்தை பாருங்கள்!

நம் தமிழ் சினிமாவின் இன்னொரு சாபம், பிரபலங்களின் படங்களுக்கு தனியாக கதை என்று ஓன்று வேண்டாம் என்பது தான். விஜய் நடித்த பத்து படங்களை எடுத்தால் அதில் ஏழு படங்கள் ஓரே மாதிரி இருக்கும். இந்த கோபக்கார இளைஞன், தெரு பொறுக்கி ஹீரோ என்பதை தாண்டி என்றைக்கு இந்த இயக்குனர்கள் யோசிக்க தொடங்குவார்கள்?  சூர்யா கூட தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆறு மாதிரியான பொறுக்கி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆக, ஒரு ஹீரோவுக்கு அறிமுகம் லவர் பாய்யாக கிடைக்கிறது. அதை தாண்டி மாஸ் ஹீரோவாக வரவேண்டுமானல் அவருக்கு தெரு பொறுக்கி கதை தேவை. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு எல்லோருமே அப்படித்தான் வந்தவர்கள்.  நடுநடுவே நானும் நல்லவன் என்று போலீஸ் உடுப்பு போட்டு சில படங்கள் வந்துவிடும். கதைக்கு ஹீரோவை தேடாமல் ஹீரோவுக்கு கதை எழுதும் அவலம்தான் 3 படம் மாதிரியான பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது.

முதலில் கதை ரெடியாக வேண்டும். அதன் சந்தை தன்மை பற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும். இயக்குனர், தயாரிப்பாளரை தாண்டி ஒரு வல்லுனர்கள் குழுவின் ஆலேசனைகள் பெற வேண்டும். அனைத்து ஸ்டேக் ஹொல்டர்களின் கலந்தாலொசிப்பு வேண்டும்.

அடுத்து தமிழ் சினிமாவின் வியாபார உத்தி. ஒன்று அவுட் ரைட் முறை. இரண்டாவது ஷேர் முறை. முதலாவது கிட்டத்தட்ட சூதாட்டம் தான். 3 வியாபாரத்தில் இதுதான் நடந்தது. இந்த குதிரை நிச்சயம் ஜெயிக்கும் என்று ஏகத்துக்கும் பணத்தை கொடி வாங்கிய பிறகு அந்த குதிரை பாதியிலேயே சுருண்டு விழுந்தால் என்ன ஆகும்? அது தான் ஆனது. ஏன் இந்த சூதாட்ட முறை? இனி எல்லா படங்களும் ஷேரிங் முறையில் வரட்டுமே!

அதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. நம் மக்கள் கலெக்ஷ்ன் தகவல்களை சரியாக சொல்லமாட்டார்கள். எந்த வியாயாரியையும் கேட்டுப்பாருங்கள். எப்படி வியாபாரம் போகிறது? அதுவா, ஒன்னும் சுகமில்லே என்பார். ஆனால் நேற்றைக்குதான் பிஎம்டபியூ கார் வாங்கியிருப்பார். கலெக்ஷன் முறையில் ஆள்படைகள் போட்டு, எற்படும் பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்வது என்பது போதும் போதும் என்றாகிவிடும். காரணம், எங்கும் ஒழுங்கற்ற தன்மை. கொஞ்சம் அசந்தால், முதலுக்கே மோசம் வந்து நம்மை மூழ்கடித்துவிடுவார்கள்.

இவ்வளவும் நடந்தால்தான் தழிழ் சினிமா உருப்படும். இல்லையேல் அவ்வப்போது இந்த மாதிரி 3 அடிக்கடி நடக்கும்.

Saturday, 21 April 2012

இடைத் தேர்தல்

சங்கரன் கோயில் தேர்தல் முடிந்த பிறகு ஒரு மைக்செட்காரரை சந்திக்க நேர்ந்தது (என்னை சந்திக்க வந்த விவசாயின் சகோதரர் அவர்).தேர்தலை பற்றி பேச்சு திரும்பியது. ' சார். ஒரு மாசம் செம பிசினெஸ். ராப்பகலா நல்லா சம்பாரிச்சோம்' என்றார். இதே மாதிரி உணவு தயாரிப்பாளர்கள் பலரும் தூத்துக்குடியிலிருந்து சங்கரன் கோயில் போய் நன்கு கல்லா கட்டியிருக்கிறார்கள். எல்லா லாட்ஜுகளும் நிரம்பி வழிந்தனவாம். இஸ்திரிகாரகள் பிழைத்தார்கள். தண்ணீர் விற்றவர்கள் பிழைத்தார்கள். அவர் அடுத்து சொன்னதுதான் நம் ஜனநாயக சீறழிவை காட்டியது. 'சார் அடுத்து எங்கையாவது இடைத் தேர்தல் வருதா சார் ?" என்ற அவரின் கேள்வியை வேறுவிதமாக சொல்லலாம். "யாராவது எம்.எல்.ஏ. செத்து போயிருக்காங்களா?' அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் பல ஏழை எளிய மக்கள், சிறு உறுபத்தியாளர்கள், வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் இப்படி இருக்கின்றன.  அவர் அந்த மாதிரி கேட்டு ஒரு வாரத்தில் புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நம் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

பாவம் ஆடுகள்

 தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி பயணித்தபோது மனசை நெருடும் ஒரு விஷயத்தை காணநேர்ந்தது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் லாரிகள் மக்காச்சோளம் போன்ற உணவு பொருட்களை ஏற்றி வருகின்றன. ஆனால் மிக பாதுகாப்பாக கொண்டு வராமல் வழியெல்லாம் சிந்த விடுகிறார்கள். சிந்தும் சோள மணிகளை தின்பதற்கு நிறைய ஆடுகள் இங்கும் அங்குமாக அலைகின்றன. ஒரு குட்டி ஆடு இன்று வாகனத்தில் அடிபட பார்த்தது. ஆடுகளுக்கு இது போல இலவசமாக உணவு கிடைத்து ஓசியில் அதன் உடம்பு கொழுத்தால் நல்ல கறி கிடைக்கும் என்று ஆடுகளின் சொந்தக்காரர்கள் இப்படி ஆடுகளை அவிழ்த்து விடுகிறார்கள் யாரை குற்றம் சொல்ல?

நாத்திகம் ஏன் வளரவில்லை?

இருபது வயதில் நாத்திகனாக இருப்பது அதியசமில்லை. அதே மாதிரி நாற்பது வயதில் நாத்திகனாக இல்லாமல் இருப்பதும் அதியசமில்லை என்ற சொல் வழக்கு உண்டு. நாத்திகம் என்பதை மிக தெளிவாக விளக்க வேண்டுமென்றால், இருப்பதை ஏற்றுக்கொள்ளாதது அல்லது இல்லாது இருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதாகும். 'அது' இருக்கா ? இல்லையா? என்பதை வைத்தே மேற் கூறிய வாக்கியத்தின் உண்மைத் தண்மையை தீர்மானிக்க முடியும். அது என்று சொல்லும்போதே இருக்கிறது என்றாகிவிடுகிறது என்பார்கள் ஆத்திகர்கள். நாத்திகர்களோ நீங்கள் சொல்வது மாதிரி 'அது' ஒரு சூப்பர் போலீஸ் இல்லை. அது வெறுமனே இயங்கி கொண்டோ அல்லது இயங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

எவ்வளவோ அறிஞர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துரைத்தும், செயல்விளக்கம் காட்டியும் (மூளை சலவை செய்தும்) நாத்திகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிலிருந்து கழன்று கொண்டவர்களே அதிகம். அதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது சமூக நிர்பந்தங்கள், வாழ்வியல் சவால்கள்.

ஆத்திகத்தை எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கையை பொறுத்து இருக்கிறது. அவர்களை கேட்டால் அது நம்பிக்கையல்ல, உண்மை என்பார்கள். தீவிரமாக ஒரு சிந்தனையை பற்றிக் கொள்ளும் போது நம்பிக்கையும், உண்மையும் இரண்டற கலந்து விடுகின்றன.

நாத்திகம் என்பது என்னவோ இந்து மதத்திற்கு மட்டும் உரித்தானது இல்லை. எல்லா மதங்களிலும் எதிர்மறையாளார்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒன்று, சத்தம் போடாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அல்லது, எதிர்த்து நின்று மாற்று இயக்கம் காண்கிறார்கள். ஆக, பிற மதங்கள் எல்லாம் ஒரு தொகுப்பு கட்டளைகளாக இருக்கின்றன. எதிர்ப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. இந்து மதம் என்பதோ ஒரு மதமே இல்லை. இது ஒரு வாழ்வு முறை. பன்முனை நம்பிக்கைகளுக்கு இங்கே இடமுண்டு. எனது கடவுள் சாராயம் சாப்பிடும், பீடி குடிக்கும் என்று நம்பி அந்த மாதிரி விருந்து அதற்கு படைக்கலாம் என்றால் அது சுடலை மாடன் மாதிரி இருக்கலாம். இல்லை, இல்லை, எங்களது கடவுள் சாந்தமானவர், கொழுக் மொழுக் என்று எங்களைப் போன்று இருக்க வேண்டும் என்றால் அவர்களது கடவுள் அப்படியே இருக்கும். பெரும்பாலான பிராம்ண கடவுள்கள் அப்படித்தான் இருக்கின்றன. இல்லை, கடவுளே கிடையாது, மனசுதான் கடவுள் என்றால், அப்படியும் இருக்கலாம். அதற்காக அவர்கள் வெளியேற்றப்படுவது இல்லை. ராமாயணத்தில் ராமரிடம் நாத்திக தர்கம் செய்யும் ஜபாலி என்ற கதாபாத்திரம் வருகிறது.

தமிழ் நாட்டில் நாத்திகம் வளர்ந்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் அது வளரவில்லை. இங்கு சமூக மாற்றத்தை உருவாக்க கடவுள் மறுப்பு ஒரு கடவு சொல்லாக இருந்தது. அதிகாரங்களும், பணபலமும் ஆத்திகத்துக்கு அடையாளம் காட்டக் கூடிய ஒரு பிரிவினரை அதாவது பிராமினர்களை சார்ந்து இருந்தது. அவர்களின் சமூகப் பார்வை மனிதாபிமானத்துக்கு முரணாக இருந்தது. அவர்களின் செயல்பாட்டில் தீண்டாமை தலை தூக்கியிருந்தது. எனவே, நாத்திகம் விறுவிறுவென வளர்ந்தது. எனவே கோயிலையும் அதில் உள்ள கடவுளையும் மறுத்தால் அங்கு பிராமணர்களின் பிடிப்பு அற்று போகும் என்ற எண்ணத்தில் அது செயல்பட்டது. தீண்டாமையை மிகவும் வலியுறுத்தி வந்த அந்த கால பிராமணர்களின் போக்கு அவர்களுக்கு இலக்கானது.

ஆனால் இன்றைய நிலமை என்ன? அன்று இருந்த அதிகாரமும், பணபலமும் இன்று பரவலாகப்பட்டு இருக்கின்றன. இண்றைய சமுதாய முரண்பாடுகளுக்கு காரணங்களாக இருப்பவர்களாக அவர்களை மட்டுமே சொல்லிவிட முடியாது. சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் வராமல் தடுத்தவர்கள் அவர்கள் அல்லவே? அன்றைய அரசு அவர்களின் அடாவடிதனங்களுக்கு பயந்து, எல்லா போக்குவரத்து கழகங்களின் பெயர்களை எடுத்துவிட்டது. இன்று நடக்கும் ஜாதி கலவரங்களில் முக்கியமாக இருப்பது தீண்டாமையே. அதில் பிராமணர்கள் நிச்சயமாக அதிகம் இல்லை. ஜாதி இந்துக்கள் என்று ஒரு பிரிவினரும் தலித்துகளும்தான் அடிக்கடி முட்டிக் கொள்கிறார்கள்.

அரசியலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. எந்த அமைப்பை எதிர்த்தார்களோ அந்த அமைப்பிலிருந்து வந்த பெண் இன்று ஒரு திராவிட கட்சிக்கு தலைவி. அ.இ.அ.தி.மு.கவில் திருநீறு மற்றும் குங்குமம இட்டுக் கொள்வது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது. தி.மு.க.விலோ தலைவர் மட்டுமே நாத்திகம் பேசுகிறார். அவரது மருமகளோ திருவாரூர் கோயிலில் கைகூப்பி நிற்கிறார். திராவிடம் என்பதற்கு அர்த்தமே இன்று பலருக்கு புரிவதில்லை. புரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை.

சமூகமும், அரசியலும் நாத்திகத்தை கழற்றி விட்டன. இனி இருப்பது பொருளாதாரம் தான். நாத்திகத்துக்கு என்னவாயிற்று ?

நாத்திகம் அறிவு சார்ந்த விஷயம். கிட்டதட்ட ஆத்திகத்தின் ஞான மார்க்கத்தை ஒட்டிச் செல்வது. இதில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. திணிக்கப்படும் பண்டிகைகள் இல்லை. மனசை மயக்கும் இசை இல்லை. என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் இன்னமும் மக்கள் ஆட்டு மந்தை கூட்டங்கள்தான். கஷ்டகாலங்கள் வரும்போது அவர்களை தாங்கிபிடிக்க, ஆறுதல் சொல்ல, நம்பிக்கை காட்ட ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அங்குதான் நாத்திகம் தோற்றுப் போகிறது.

குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், வந்தவர்கள் கட்சி மாறி போனாலும், இல்லாது இருக்கும் அந்த உண்மை, பொய் என்று ஆகிவிடாது. என்கிறார்கள் நாத்திகவாதிகள்.

ஆத்திகத்தில்தான் என் கூட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொன்னால், நூறு முட்டாள்களை விட பத்து புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்கிறார்கள் நாத்திகர்கள்.

மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை செய்தவர்களும், சிருஷ்டியின் மிக அருகில் சென்ற விஞ்ஞானிகளும் ஆத்திகர்களாக இருப்பது விந்தையான ஒரு விஷயம். சச்சின் டென்டுல்கர் ஒரு சாயி பக்தர் என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம்.

விறைப்பாக, அறிவு சார்ந்து நாத்திகம் பேசும் ஒருவன் கூட தனக்கு கஷ்டம் வந்து மருத்தவ மனைகளில் அலையும் போது சிறிதளவு திருநீறு/குங்குமத்துடன் காட்சியளிக்கிறான்.

நாத்திகம் என்பது கசப்பான ஒரு உண்மை. அது நிறைய பேருக்கு பிடிப்பதில்லை.

ஒரு எழுத்தாளனின் இயலாமை

நான் நல்ல நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட 80 சிறுகதைகளுக்கு மேல் இருக்கும்.  எல்லா சிறுகதைகளும் ஒரே பேட்டர்னில் இல்லாமல் வெவ்வேறு தளங்களில் எழுதியிருக்கிறேன். பல வெகுஜன பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே என்ற பல முயற்சிகள் எடுத்தேன். சிறுகதைகளுக்கு எப்படி பத்திரிக்கைகளில் ஆதரவு இல்லையோ அதே மாதிரிதான் தொகுப்பு வெளியிட பதிப்பகத்தார்களிடம் ஆதரவு இல்லை.  நானே எனது தொகுப்பை வெளியிட்டு, என் சொந்த காசை பெருமளவு செலவழித்து, அச்சடித்த புத்தகங்களை வீட்டில் புழுதியடையாமல் பாதுகாக்க சிரமப்பட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு, நண்பர்களிடம் விற்க முயற்சித்து அவர்களிடம் மன கசப்பு கொண்டு, கிடைக்காத லைப்ரரி ஆர்டருக்காக அலையாய் அலைந்து அல்லோல படுவதை விட ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தேன். அதாவது, தற்கால லேசர் பிரிண்டர்களில் ஒரு ஏ4 பேப்பரில் நான்கு பக்கங்கள் குறுக்காக அடிக்கும் படியான லெஃப்ட் ரைட் பைண்டிங் வசதி உள்ளது. அதாவது 1ம் மற்றும் 16ம் பக்கம் ஒரு தாளில் குறுக்காக இருக்கும். பின் பக்கத்தில் 2ம் மற்றும் 15ம் பக்கம் வரும். இந்த மாதிரி 16 பக்கங்கள் வரும் மாதிரி தனித் தனி செட் தயார் செய்து, ஒரு மாஸ்டர் செட் தயார் செய்து கொண்டேன். பிறகு அதை ஜெராக்ஸ் கடையில் கொடுத்து 40 காப்பி எடுத்தேன். பெயரளவுக்கு ஒரு சாதாரண அட்டை தயார் செய்து கொண்டேன். பைண்டிங் கடைகளில் பர்ஃபெக்ட் பைண்டிங் என்று தொழில்நுட்பத்தில் பைண்டிங் செய்து தருகிறார்கள். அந்த மாதிரி முதலில் 40 அதன் பிறகு அடுத்து 40 என என் தேவைக்கு ஏற்ப பைண்டிங்க் செய்து கொண்டேன். இனி எனக்கு பதிப்பாளர்கள் தேவையில்லை, வீட்டில் ஸ்டாக் வைக்க வேண்டாம். என் நண்பர்கள் என்னை கண்டு ஓடமாட்டார்கள். லைப்ரரி ஆர்டர் பிடிக்க அலைய வேண்டாம். என் சிறுகதைகளை படிக்க விரும்புகிறவர்களுக்கு, இனைய வசதி இல்லாதவர்களுக்கு அன்பளிப்பாகவே கொடுத்து விடுகிறேன். ஒரு எழுத்தாளன் என்னமாய் ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது? ஆனால் அதே நேரத்தில் ஓபாமா, கடலை மாவு என்று இனையத்திலிருந்து காப்பி யடித்து, கொஞ்சம் ஜல்லியடிச்சு ஒரு புத்தகம் போட்டால் பதிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை, இன்றைய வணிகம் அப்படி!

தேக்கு மரமும் கீதையும்

தூத்துக்குடியில் நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் வாசலில் ஒரு தேக்கு மரம் இருந்தது. காட்டு மரம் வீட்டில் இருந்தால் வீட்டுக்காரருக்கு ஆகாது என்று யாரோ ஒரு அரைவேக்காடு ஜோசியர் கொளுத்திப் போட சென்னையில் இருக்கும் வீட்டுக்காரர் ஆள் வைத்து அந்த மரத்தை வெட்ட துனிந்தார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். தேக்கும் முழு வளர்ச்சியும் அடையைவில்லை, வெட்டி விற்றால் கூட ஒன்றும் தேராது என்றும் சொன்னேன். நான் வெளியூர் போயிருக்கும் ஒரு விடுமுறை நாளில், அரசு அனுமதி பெற்று, அந்த மரத்தை, இல்லை, இல்லை, குழந்தையை வெட்டி விட்டார்கள். ஊர் திரும்பியதும் சரிந்து கிடந்த மரத்தை பார்த்து என்னால் வருத்தப்படதான் முடிந்தது.  இரண்டு வாரம் முன்னால் கர்ணன் படம் பார்த்தேன். மரத்தை வைத்தவனும் கண்ணன். வெட்டச் சொன்னவனும் கண்ணன். வெட்டியவனும் கண்ணன். வருத்தப்பட்டவனும் கண்ணன். ஏன்..... மரமும் கண்ணனே என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். என்ன ஆச்சர்யம்.... வெட்டிய இடத்திலிருந்து தேக்கு மரம் துளிர்க்க தொடங்கியிருக்கியிருக்கிறது. ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற கீதையின் தத்துவதும் இதுதானோ ?

Friday, 20 April 2012

ஆன்மீகம்/சமூகம்

நான் அடிக்கடி அலுவல் நிமித்தமாக தூத்துக்குடியிலிருந்து விளாத்திகுளத்திற்கும் சாத்தான்குளத்திற்கும் போவதுண்டு. அவ்வாறு போகும் போது மிக மிக எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக திருச்செந்தூருக்கு நடைப்பயணம் போவதை பார்த்திருக்கிறேன். எனக்கு இரண்டு கேள்விகள் மனத்தில் எழுந்தன. இது ஆன்மீகத்தின் வளர்ச்சியா? அல்லது சமூக சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு ஒரு வடிகாலா? இவ்வளவு உடல் வருத்தத்துடன், மன ஒன்றினைப்புடன் செய்யப்படும் இந்த வழிபாட்டு முறைகள் சமூக மாற்றங்களை ஏன் ஏற்படுத்தவில்லை? பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிதைந்து வரும் குடும்ப உறவுகள், சமூக நல்லிணக்கம் ஆகியவைகளில் முன்னேற்றம் கான இந்த ஆன்மீகம் உதவில்லை. இந்த தீவிர ஆன்மீக செயல்கள் வெறும் சுய நல போக்கின் வெளிப்பாடா? அல்லது வெறும் கேளிக்கைகளா? என்னை பொறுத்தவரையில் சமூக மாற்றத்திற்கு உதவாத ஆன்மிக செயல்கள் கவலையை அளிக்கக் கூடியன. இது ஒரு பக்கம் என்றால் அந்த பக்கத்தில் கோயில்கள் ஒரு வணிக கூடாரங்களாக ஆகி வருகின்றன.

உழவர் பெருவிழா

கிராமம்தோறும் விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் விதமாக விவசாய உழவர் பெருவிழா நிகழ்ச்சிகளை விவசாய துறை நடத்தி வருகிறது.  ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை கிராமம்தோறும் நடத்த தேவையான விரிவாக்க பணியாளர்கள் விவசாயத் துறையிடம் இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 408 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. 12 வட்டாரங்களில் உள்ள மொத்த அதிகாரிகளே 50ஐ தாண்டாது.  எனவே மற்ற துறைகளில்ருந்து அதிகாரிகளை பிடித்து எப்படியோ நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.  இதில் 13 வகையான விருந்துக்குத்தான் முக்கியத்துவம்.  அடுத்தபடியாக முதலவர் துதிபாடுதல்.  தொழில்நுட்ப்ப பரிமாற்றம் என்பது ஏதோ ஒரு நாளில் நடந்துமுடிகிற விஷயம் அல்ல என்பது இவர்களுக்கு எப்படி புரியவைப்பது? உதாரணமாக மண் பரிசோதனை செய்தல், விதை நேர்த்தி செய்தல். கடந்த பல ஆண்டுகளாக விவசாயத்துறை சொல்லி வருகிறது. ஆனால் இன்றைய தேதியில் எத்தனை சதவிகிதம் இந்த அடிப்படை தொழில் நுட்ப்பம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது?

கல்வி வியாபாரத்தில் விழும் விட்டில் பூச்சிகள்

ஏதோ பொறியியல் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, அவர்கள் படித்து, பாஸ் செய்துவிட்டால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்ற மாயையில் ஏராளமான பெற்றோர்கள் கடனை வாங்கியாவது செலவழிக்க அல்லது லஞ்சம் கொடுக்க அலைகிறார்கள். ஆட்டு மந்தைகள் மாதிரி எல்லோரும் ஓரே மாதிரி இயங்குவது பல சமூக சிக்கல்களை உருவாக்குகிறது. மிகவும் ஏழையான மணிவண்ணன் 26 அரியர்ஸ் வைத்து, மேல் கொண்டு படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவமாக திறமை இருக்கிறது. அதில் காசு சம்பாதிக்கும் முறையை உட்புகுத்தி, அவர்களை பெற்றோர்களே வீணாக்குகிறார்கள். சாகடிக்கிறார்கள். எனக்கு தெரிந்து கலைக் கல்லூரிகளில் படித்து விட்டு அதன் பிறகு எம்.பி.ஏ. படித்த பிறகு லட்சலட்ச மாக சம்ப்பாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பனம் சம்பாதிக்க பொறியியல் கல்லூரிதான் வாசல் கதவு என்ற மாயை எப்போது அகலும்?

ஆத்திகம்/நாத்திகம்

ஒரு ஆஸ்திகனுக்கு பல வெற்றிகளை தொடர்ந்து ஒரு சில கஷ்டங்களை கொடு. அவனுக்குள் லேசாக நாத்திகம் துளிர்க்கும்.  ஒரு நாத்திகனுக்கு தொடர்ந்து கஷ்டங்களை கொடு.அவனுக்குள் லேசாக ஆத்திகம் துளிர்க்கும். சென்ற மாதம் நான் மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்காக ஒரு மருத்துவ மணைக்கு போயிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவின் வெளிப்பகுதியில் காத்திருந்த பெரும்பாலானவர்களின் நெற்றிகளை வீபூதி குங்குமம் இருந்தன. கையில் ஸ்லோக புஸ்தகம். இந்த மாதிரி இடங்களில் நாத்திகம் எப்படி செயல்பட முடியும்? ஞான மார்கமே பின் வாங்கும். பக்தி மார்க்கம்தான் செழித்து வளரும். இந்த வலுவற்ற சூழ்நிலையைதான் பக்தி பிராண்ட் அம்பாசெடர்கள் நன்கு பயண்படுத்திக் கொள்கிறார்கள். ஆத்திகத்தில் மடமை இருக்கிறது. நாத்திகத்தில் வெறுமை இருக்கிறது.

அட்சய திருதியை

அட்சய திருதியை என்பது ஒரு மகத்தான சனாதன தர்மம். அந்நாளில் தர்ம காரியங்கள் பல செய்து, புண்ணியங்கள் சம்பாதித்து, தன் வாழ்வு குறைவில்லா செல்ல வேண்டும், இந்த சமூகமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. விடுவார்களா நம் வணிகர்கள்? அன்று தங்கம் வாங்கினால் சொத்து சேரும் என்ற பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். மேற்கத்திய சிந்தனையில் உள்ள கெடுதலான விஷயங்களுக்கே தொடர்ந்து அடிமையாகி வரும் நம் பெரும்பான்மை தமிழ் சமூகம், அந்நாளில் நகைக் கடைகளில் ஈக்கள் மாதிரி மொய்த்து நிற்கும். தர்மமா? அப்படீன்னா என்ன சார்? துட்டை வலிக்க வழி சொல்லுவீகளா? அதை விட்டுப்புட்டு.......

பரிதவிக்கும் தமிழ்

நீங்கள் நீ.வெ.ஒ. கோடி நிகழ்ச்சி பார்ப்பவரா? சமீபத்தில் கமல் பெண் சுருதி ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அவர் தினமும் ஒரு படம் பார்பார்களாம். ஆனால் அவள் அப்பா நடித்த அவள் ஒரு தொடர்கதை பற்றி எதுவும் தெரியாதாம். என் நண்பன் ஒரு முறை வேடிக்கையாக சொன்னது இது. இந்தக் கால டாலர் துரத்தும் இளைஞர்களுக்கு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் என்று தெரியாது. சுருதிக்கு ஆங்கில சினிமா பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்பாவின் படம் கூட தெரியாது. வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம். ஆங்கில மோகம் தமிழை மறைக்கிறது. கமல் சொன்னது மாதிரி ஆங்கில யானை மோதி தமிழ் செத்துக் கொண்டு இருக்கிறது.

ஐ.பி.எல்

கிரிகெட் என்றாலே வணிகம் தான். அதிலும் ஐ.பி.எல். வணிகத்திலும் வணிகம். எனவே, ஐ.பி.எல்லை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். கடந்த முன்று ஐ.பி.எல்லை நான் பார்ப்பது இல்லை. இது போல நிறைய பேர் ஒன்று சேர்ந்து உதாசின படுத்தினால்தான், கிரிகெட்டில் வணிகத்தின் தாக்கம் குறையும். என் பங்கை நான் செய்துவிட்டேன். மற்றவர்கள்?

Thursday, 19 April 2012

ஷோலே - காலத்தை வென்ற படம்

இரண்டு வாரங்கள் முன்னால் ஷோலே ஹிந்தி படம் பார்த்தேன். 1975ல் வெளிவந்தது. அப்போது எனக்கு 13 வயது. ஹிந்தி தெரியாமலே அந்த படத்தை ரசித்திருக்கிறேன். தற்போது அட்சர சுத்தமாக டயலாக் புரிதலுடன் படம் பார்த்த போது பிரமிக்க வைக்கிறது. புதிதாக படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளம் இயக்குனர்கள் எப்படி ரசனையான திரைக்கதையை அமைக்க முடியும் என்பதற்கு பார்க்க வேண்டிய படம். பல வசனங்களை தமிழ் படுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தேன். கால தாமத்தில் மறந்து விட்டது.

அதெப்படி?

அதெப்படி? அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், தி.மு.க அமைச்சர்கள் மற்றும் மா.செ. எல்லாம் சட்டத்தை மீறியவர்கள் மாதிரியும் அவர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறது. அம்மா ஆட்சிக்கு வந்தற்க்கு ஒரு நாள் முன்னால் வரை போலீஸ் துரத்தல்களில் இருந்த அ.தி.மு.க. அனுதாபிகள் திடீரென போலிஸ் பார்வையில் பவித்ரமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து இந்த நிலமை தலைகீழாக மாறும். இந்த ஜனநாயக கேலி கூத்துக்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும்? தற்போது காசு பார்த்துக் கொண்டிருக்கும் ஆளும்கட்சி ஜால்ராக்களுக்கு இந்த ஆட்சியிலேயே ஆப்பு அடிக்கப்பட வேண்டும். அது நடப்பதாக இல்லை. கலி காலத்தில் கைமேல் பலன் என்ற கருத்து அரசியலுக்கு பொருந்தாது போலிருக்கிறது. எனவே, அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஓட்டு போட இப்போதே நான் தயாராகிவிட்டேன்.

தூத்துக்குடி முதலூரில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் என் பேச்சு