என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Tuesday, 27 February 2007
புது வரவு
புது வரவு
2008 16 மார்ச் தினமலர்-வாரமலர்
வீடே விழாக்கோலம் பூண்டது.
இருக்காதா பின்னே? வந்திருப்பது புத்தம் புதிய ஸ்கூட்டியல்லவா!
செல்லப் பெண் ரம்யா முதன்முதலாய் கொழுத்த சம்பளத்தில் நாளைக்கு வேலையில் சேரப்போகிறாள். இன்றே ஆத்மா வண்டியை டெலிவரி எடுத்துவிட்டான். ஓட்டவந்த ரம்ஸை செல்லமாய் கடிந்து கொண்டான்.
"முதலில் பூஜை. அப்பறம்தான் எல்லாம்."
பாட்டி சந்தன குங்குமம் இட்டு பூமாலை போட, தாத்தா பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பூனைக்குட்டி மாதிரி வண்டியை சுற்றி வந்து அரை மணி நேரம் வெறுப்பேற்றினார்.
பூஜை முடிந்ததோ, ரம்யா ஸ்கூட்டியில் சிட்டாய் பறந்தாள். ஐந்தே நிமிடங்களில் புயலாய் வந்தாள். முகம் முழுவதும் பெருமிதம்.
"அம்மா. என்ன பிரமாதமான பிக்கப். நீ ஓட்டி பாரு. எப்படிப்பா இருக்கு?"
"ஆமா. நான் வரும்போதே கோயிலுக்கு போய்ட்டு வந்தேன். சும்மா சல்லுன்னு வெண்ணெய் மாதிரி வழுக்கிண்டு போறது. முள்ள பார்த்ததும்தான் தெரிஞ்சுது நான் ரொம்ப வேகமா போறேன்னு."
ஆத்மா சந்தோஷ உச்சத்தில் சொல்லிக் கொண்டிருக்க, முகமெல்லாம் பல்லாக ஸ்கூட்டியை பிடித்தாள் மஞ்சுளா.
போனவள் வேதா கிளாஸ் முடித்துக் கொண்டு வந்து, ஸ்கூட்டி அருமை பெருமைகளை மூச்சுவிடாமல் அரைமணிக்கு சொன்னாள்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என்னவோ தாங்களே போய்விட்டு வந்த மாதிரி ஃபீலிங் காட்டினார்கள்.
ஆனால் இவ்வளவு அமர்க்களங்களையும் அமைதியாக புன்சிரிப்போடு ஏ.வி.எம்.சரவணன் ஸ்டைலில் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.
"ஏண்டா ராகவ். இன்னிக்கு உன் ஆபீசுக்கு ஸ்கூட்டிய எடுத்துண்டு போய்ட்டு வாயேன்."
"வேண்டாம்மா. அப்பறமா பார்த்துக்கலாம். நான் டி.வி.எஸ்.50லேயே போய்க்கறேன்."
"ஏண்டா. உனக்கு அதே பழைய மொபெட்தாங்கறதால பொறாமையா?"
"இல்லை தாத்தா. கிட்டதட்ட அஞ்சு வருஷமா நமக்கு மாடா உழைச்ச பழைய வண்டிய புதுசு வந்த உடனே சுத்தமா மறந்துட்டீங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நாம வசதிகள் கொறைச்சலா இருந்த போது முழு குடும்பத்தையும் சுமந்துண்டு அது சுத்தாத இடமே இல்லை. இன்னமும் நல்லாத்தான் ஓடுது. என்ன, கொஞ்சம் பழசாயிடுத்து. அவ்வளவுதான். உயிரற்ற பொருள் ஆனாலும் அதுல நம் உணர்வுகள் கலந்திருக்கு தாத்தா. நான் வரேன்."
ராகவ் சொல்ல சொல்ல எல்லோரும் வாயடைத்து போனார்கள்.
Labels:
06தினமலர்-வாரமலர்,
குட்டிக்கதை,
சிறுகதை
Monday, 26 February 2007
இருள் வழிப் பயணம்
இருள் வழிப் பயணம்
2007 ஜனவரி 21 குங்குமம்
எனக்கு அவனையும் அவன் கூட வந்திருந்த பெரியவரையும் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அவர்களின் பார்வையிலேயே ஒரு கெட்ட நோக்கம் இருந்தது. ஆனால் என் வீட்டு மக்களுக்கு அவர்களை பிடித்திருந்தது என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று. நான் இனியும் இங்கே இருப்பது பாரம். இரண்டாவது, அவர்கள் வசதியானவர்கள்.
ஒருவழியாக பேசி முடித்தார்கள். நாளைக்கே நல்ல நாளாம். நான் அங்கே நிற்க பிடிக்காமல் உள்ளே வந்துவிட்டேன். போவதற்கு முன் அவன் என்னை மிகவும் அருகில் நெருங்கி கோணலாக சிரித்தான். அந்த பெரியவர்... அவரும் அவர் முழியும்.. சே....
மறுநாள் மாலை நான் போகும் வேளை வந்துவிட்டது. என்னை பிரிவதில் வீட்டு குழந்தைகளுக்குத்தான் வருத்தம். அழுது அமர்க்களம் செய்துவிட்டன. வந்து நின்ற அந்த பிரும்மாண்ட வண்டியில் நான் உடனடியாக ஏறி கொண்டு விட்டேன். அவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். எங்கே போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் போகிறேன். ஒரு விபரீதத்தை நோக்கி. என் கண்கள் கலங்கின. மெளனமாக அழுதேன்.
அவர்கள் சரியில்லை என்று நான் நினைத்தது கொஞ்ச நேரத்திலேயே நிரூபனம் ஆனது. சிறிது தூரம்கூட போயிருக்கமாட்டோம். என்னை மாதிரியே சில பாவப்பட்ட ஜன்மங்கள் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்கு வழியே இல்லை. அதற்குள் நாங்கள் ஏழு பேர் ஆகிவிட்டோம்.
ஒரு ரோட்டு ஓர ஹோட்டலில் அவனும் அந்த கிழவனும் தண்ணியடித்தார்கள். கஞ்சா புகைத்தார்கள். முடிவில் அவர்களுக்குள்ளே வாய் தகராறு வர, அவன் அந்த கிழவனின் தலையில் கட்டையால் அடித்தான். நாங்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. கிழவனை அப்படியே விட்டுவிட்டு வண்டியேறிவிட்டான் அந்த கிராதகன்.
கொடுமையிலும் கொடுமை. நாங்கள் வந்து சேர்ந்த இடத்தில் எங்களை மாதிரியே நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். அனைவரின் முகத்திலும் சொல்லமுடியாத சோகம். பலரும் களைத்து போயிருந்தார்கள். என்னை அழைத்து வந்த கொடூரன் மாதிரியே பல பேர் அங்கு இருந்தார்கள். எங்களை விற்று அவர்கள் காசு பண்ணுவதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். என்ன செய்ய? நாங்கள் ஏமாளிகள். அவர்கள் பலசாலிகள். சும்மா இருப்பதை தவிர வேறு வழியில்லை. எங்களை வாங்கியவர்கள் அங்கே இருந்த இருட்டான அறைகளில் வைத்து பூட்டினார்கள்.
கொஞ்ச நேரத்திலேயே எங்களை ஒரு டாக்டர் சோதனை செய்தார். வியாதிகள் எதுவும் இருக்கக்கூடாதாம். அடுத்து அடுத்து நடந்த நிகழ்சிகள் யாவும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தன. எங்களை போட்டோ எடுத்தார்கள். எடை பார்த்தார்கள். நடக்கச் சொன்னார்கள். பல பேர் அப்படியும் இப்படியுமாக எங்களை பார்த்தார்கள். உடம்பு சுத்தம் ரொம்ப முக்கியமாம். நாலு குளியல் ஆகிவிட்டது. சம்பந்தமே இல்லாமல் திடீரென குட்டி பூஜை நடந்தது. பொட்டு மட்டும்தான் இட்டார்கள். கவனியுங்கள். பொட்டை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வளவு செய்தார்களே தவிர, சாப்பாட்டை கண்ணில் காட்டவே இல்லை. வெறும் தண்ணீர்தான். இளைத்தது பத்தாதா? இன்னும் வேறு இளைக்க வேண்டுமா? அவர்கள் நோக்கமே புரியவில்லை. கூட வந்தவர்களிடம் ஏதாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் அவாகளும் என்னைப் போலவே மண்டுகளாகவே இருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த சொகுசான கட்டிடத்தில் நிறைய மக்கள் வருவதும் போவதுமாக இருந்தது. என்ன செய்யப்போகிறார்களோ?
பொழுது எப்படா சாயும் என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி அவர்கள் அனைவரும் மறுபடி வந்தார்கள். தூரத்தில் நாங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டோம். அவர்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டார்கள். ஒருவன் சத்தமாக அட்டையில் எழுதியிருந்ததை படிக்க, நாங்கள் அணி அணியாக பிரிக்கப்பட்டோம். என் போதாத வேளை நான் முதல் அணியிலேயே இருந்தேன். ஒருவன் என்னை தொட்டு தடவி அழைத்து போக வந்தான். என் எதிர்ப்பை காட்டியதும் பயந்து போய் விட்டான். எனக்கு பின்னால் பத்து பதினைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் குறுகலான சந்து வழியாக அழைத்து போகப்பட்டோம். ஒரு கேட்டை தாண்டியதும், சில்லென ஏ.சி. காற்று எங்களை வரவேற்றது.
மிகப் பெரிய ஹால். நாலா பக்கமும் விளக்குகள் எரிய பிரகாசமாக இருந்தது. குறைந்த பட்சமாக இருபது பேர் எங்களின் வரவுக்காக காத்திருந்தார்கள். உயரமான இடத்திலிருந்து ஒருவன் என்னை வா! வா! என்று சைகை காட்டினான். அவன் கையில் நீளமாக காமிரா மாதிரி ஒன்று இருந்தது. ஏதோ தப்பு நடக்கப் போகிறது.
நான் உறைந்து போய் மிரட்சியுடன் நின்றுவிட, ஒருவன் ஏதோ ஒன்றை என் மீது வைக்க சுரீரென மின்சாரம் எனக்குள் பாய்ந்தது. ஒரு துள்ளலில் நான் இரண்டு அடி முன்னே போய் விழுந்து, சுதாரித்து நிமிர, அந்த காமிராக்காரன் மிக அருகில் தெரிந்தான். இப்போது எனக்கு பின்னால் வந்தவர்களை பார்க்க முடியவில்லை. திடீரென ஒருவன் என் கால்களை கட்டிவிட்டான். இன்னொருவன் என் இடுப்பில் பெல்ட் போட்டு இறுக்கியதில் என் பிருஷ்டம் சற்று உயர்ந்தது. கால்கள் அகட்டப்பட்டன. தொலைந்தேன். நான் சீரழியப்போகிறேன்.
காமிராக்காரன் என் தலையை பிடித்து ஒரு பக்கமாக வளைத்து பின் மண்டையில் அந்த கருவியை வைத்து ஒரு அழுத்து அழுத்தினான். பொட்டில் சம்மட்டியால் அடித்த மாதிரி வலி. அடுத்த வினாடி... எனக்குள் ஆயிரம் வோல்டில் மின்னலாய் தீப்பொறிகள் என் உடம்பு முழுவதும் கொப்பளித்து பரவ.... யாரோ கத்தியது லேசாக ஏங்கோ கேட்டது.
"என்னாங்கடா. க்விக்கா வேலையை பாருங்க. ம்.. அடுத்த எருமை மாட்ட கொண்டாங்க. எட்டு மணிக்குள்ள எரநூறு மாடுங்களை வெட்டி முடிக்கனும். சீக்கரம்." அந்த நவீன மாட்டிறைச்சி கூடத்தின் ப்·ளோர் மேனேஜர் கத்தினார்.
Sunday, 25 February 2007
அஞ்சு பலி
அஞ்சு பலி
2007 ஜனவரி 17 தேவி
எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை என்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த பூசாரியை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் சரளா இருக்கும் நிலையில் எதுவும் சொல்ல முடியவில்லை. என் அம்மாவும் அவள் கட்சியில் சேர்ந்துவிட்டாள்.
எனக்கும் சரளாவுக்கும் கல்யாணம் ஆகி முதல் இரண்டு வருடம் குழந்தைகளே இல்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று குறை பிரசவங்கள்.
அதில் போன வருடம் கொஞ்சம் கொடுமையானது. எட்டரை மாசம். முழு குழந்தையாகவே இறந்து பிறந்தது. சரளாவை சமாளிக்க நான் பெரும்பாடு பட்டேன்.
இந்த சந்தர்ப்பத்தில் யாரோ சொல்லி வந்த இந்த பூசாரி நான்கே மாதத்தில் எங்கள் வீட்டில் நங்கூரம் போட்டு விட்டான். நான் சொல்ல வந்த போது அதை தெய்வ குத்தம் என்று சொல்லி அம்மா தடுத்து விட்டாள். நானும் விட்டுவிட்டேன்.
அம்மாதான் இன்று காலையில் மெதுவாக ஆரம்பித்தாள்.
"சேகர். நம்ம பூசாரி சோழி போட்டு பார்த்ததில நமக்கு செய்வினை இருக்குதாம். ஒரு காளி கோயில்ல பூஜை போட்டு அஞ்சு பலி கொடுத்துட்டா, நம்ம பாவமெல்லாம் விலகிடுமாம்."
"அஞ்சு பலின்னா?"
"அதான்டா. காளிக்கு கோழி, மைனா, கெடா, வெள்ளாடு, எருமை மாதிரி அஞ்சு பலி கொடுக்கணுமாம். ஆனா. அதுக்கு பதிலா அஞ்சு கெடா வெட்டிட்டா போதுமாம்."
எனக்கு கண் முன்னால் ஐந்து ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக 'சொத்' 'சொத்' என பலியாவது வந்து போனது.
கூடவே சென்ற வருடம் நான் கையில் சுமந்து சென்ற அந்த குறை பிரசவ குழந்தை....
"வேண்டாம்மா. அஞ்சு பலிய கொடுத்துட்டு எனக்கு ஒரு கொழந்தை குடுன்ணு கேட்பது வேண்டாம்மா ப்ளீஸ். இதுக்கு மட்டும் என் பேச்சை கேளுங்க."
கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கொஞ்சம் அதிகமாகவே நான் கத்திவிட இருவரும் கலவரப்பட்டு போனார்கள்.
கொஞ்ச நேர மெளன நிமிடங்களுக்கு பிறகு,
"நீங்க சொல்லறது சரிங்க. பலி கொடுத்துதான் நம்ம பாவங்கள் போய் குழந்தை பெத்துக்கணும்னா எனக்கு அந்த பாக்கியமே வேண்டாங்க."
சரளா சொன்னாள். அம்மா கண்களால் ஆமோதித்தாள். நான் எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.
Saturday, 24 February 2007
இரண்டும் ஒன்று
இரண்டும் ஒன்று
2007 ஜனவரி 14 கல்கி
ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் தெரிந்தவர்கள். நெஞ்சு வரை நினைவிருக்கிறது. ஆனால் யார் என்று உடனே சொல்லத் தெரியவில்லை.
"உங்களை அறிந்திருக்கிறேன். ஆனால் யார் என்று தெரியவில்லை."
"நீயாகவே கண்டுபிடியேன் பார்க்கலாம்." அதற்கும் சிரிப்பு.
ஆஸ்பிடலின் தூக்கலான டெட்டால் வாசனை ராகவனை சங்கடப்படுத்தியது. வலது கையை பார்க்க முடிந்ததே தவிர அசைக்க முடியவில்லை. தலையின் மேல் ஒரு கல்லை வைத்திருப்பது மாதிரி அவஸ்தை. கொஞ்சம் இடுப்புப் பகுதியை அசைக்கலாம் என்று முயற்சித்ததில் 'சுரீர்' என்று மின்னல் மாதிரி ஒரு வலி தண்டுவட நுனியில் புறப்பட்டு கழுத்து வரை வந்தது.
"உங்களை யார் உள்ளே விட்டார்கள். இங்கு யாருக்கும் அனுமதியில்லை."
"சிறப்பு அனுமதி உண்டு"
"சரி, அப்படித்தான் உள் மனது சொல்கிறது. எதற்கு வந்திருக்கிறீர்கள், நீங்கள் இருவரும்."
"இருவரும்?" ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். "நாங்கள் ஒருவர்" என்றார்கள் கோரஸாக. அது ராகவனுக்கு எரிச்சலை தந்தது. கோபமாக வெற்றுப் பார்வை பார்த்தான்.
"சரி. சரி. நாங்கள் இருவர். அப்படியே வைத்துக் கொள்வோம், ஒரு பேச்சுக்கு?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள்.
"என்ன சிரிக்கிறீர்கள். என் கண் முன்னால் இருவரும் தெளிவாக தெரிகிறீர்கள். என் கண்கள் பழுதில்லை. இன்னொரு முறை கெக்க பிக்கே என்று சிரித்தீர்களானால் சத்தம் போட்டு உங்களை வெளியேற்றி விடுவேன்."
சிரிப்பது நின்று கொஞ்சம் சீரீயஸ்னஸ் வந்தது. "ஒரே மூச்சில் இரண்டு கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். இருப்பதும் பார்ப்பதும் வெவ்வேறு நிலைகள்."
"புரியவில்லை."
"மணியும் நூலும் இரண்டாக இருந்தாலும் மாலை ஒன்றுதான் அல்லவா. கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்றல்லவா. சாதாரண மனிதனுக்கு கல் கல்லாகத்தான் தெரியும். ஒரு சிற்பிக்கு அதனுள் இருக்கும் சிலை புரியும். கல் ஒன்று. பார்வை இரண்டு. ஆனால் இரண்டும் ஒன்று."
"சபாஷ். நீங்கள் இருவரும் ஒருவரா? நான் நம்ப வேண்டும். அப்படியானால் நான் இருவரா?"
"ஆமாம். உடல் தெரிகிறது. உயிர் உன்னிலும் உன்னைச் சுற்றியும் இருக்கிறது. அது தெரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே."
ராகவனுக்கு தலை சுற்றியது. "இல்லை. நாத்திகனான நான் உங்கள் ஆத்திக கருத்துக்களை ஏற்க மாட்டேன்."
"அதில் தவறில்லை. இரண்டும் ஒன்றே."
"இதென்ன புது குழப்பம்."
"ஆமாம். ஒன்று இருப்பதாக நம்புபவர்கள் ஆத்திகர்கள். அதை பூஜ்ஜியம் என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். அவ்வளவே. இரண்டும் ஒன்றே."
"நீங்கள் சொல்வது லாஜிக்கலாக இருந்தாலும் என் புத்தி ஏற்க மறுக்கிறது. இருக்கிறது. இல்லை. இவைகள் இரண்டு மட்டும்தான் இருக்கின்றனவா?"
"ஆமாம். கம்ப்யூட்டரில் பைனரி கோட் என்று சொல்லுகிறீகளே. அது என்ன? இரண்டு என்பது பெயரளவுக்குத்தான். அதாவது, ஒன்றுமில்லை என்பதாக பூஜ்ஜியம். இருப்பதாக ஒன்று. இரண்டு இருக்கின்றன. ஆனால் இரண்டு என்ற எண் இல்லவே இல்லை."
"சரி. இதை மெனக்கெட்டு என்னிடம் வந்து சொல்லக் காரணம்? நான் உங்களையும் உங்கள் பேச்சையும் நம்பிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை."
"அது உன் இஷ்டம். உன் கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக ஒரு உண்மையை இல்லை என்று சொல்வது முட்டாள்தனம். சூரியனில் இரண்டு ஹைட்ரோஜன் துகள்கள் ஒன்று சேர்ந்து ஒளியாகிறது. அதுவே பல வண்ணங்களாகிறது. இரண்டு உயிரனுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு உயிரை உண்டாக்குகின்றன. இல்லையென்பது உருவாகும். உருவானது இல்லையென்பது ஆகும். ஆக இரண்டும் ஒன்று."
அப்போதுதான் ராகவன் கவனித்தான். அவர்கள் இருக்கிறார்கள் என்பது புத்திக்கு எட்டியதே தவிர, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர முடியவில்லை. அவர்கள் இருவருமே ஒரே மாதிரி இருந்தார்கள். முகம் வட்டமாக இருந்தது. சில கணங்களில் அவர்களே ஒரு வட்டத்துக்குள் இருந்த மாதிரி இருந்தது. பின் அதுவே நீள் வாக்கில் இருப்பதாகப் பட்டது. மனதுக்கு பிடித்த பிரகாசமான ஜோதி ரூபமாக தெரிந்தார்கள். அவர்களை உருவத்தில் சேர்ப்பதா இல்லை அருவத்தில் சேர்ப்பதா என்ற குழப்பம் இருந்தது.
"எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நீங்கள் பேய்களா? அல்லது நான் செத்துப் போன பின் என்னை அழைத்து போக வந்திருக்கும் எம கிங்கிரர்களா? பேய்களும் எம கிங்கிரர்களும் கோரமாக இருப்பார்கள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அப்படி இல்லையே? யார் நீங்கள்?"
"மரண பயத்தின் கற்பனை வெளிப்பாடுதான் பேய்களும் எம கிங்கிரர்களும். பிறப்பு எப்படி ஒரு நிகழ்வோ அப்படித்தான் மரணமும்."
"அப்படியானால் எனக்கு மரணமா? என் வாழ்க்கை முடியப் போகிறதா? இதோ நான் கத்தப் போகிறேன். நீங்கள் யார். சொல்லுங்கள். என் மன பிரமைதானே?
"கொஞ்சம் நெருங்கி வந்திருக்கிறாய்."
"யார் நீங்கள். எனக்கு பொறுமை இல்லை. சொல்லுங்கள். சொல்லுங்கள். சொல்லுங்கள்."
"சரி. சொல்லும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கிறோம். நாங்கள் யாரா? ஒன்று இல்லை. மற்றொன்று இருக்கிறது. ஆக இரண்டுமாக ஒன்று. அதாவது நீதான் நாங்கள்."
"மை காட். நானா? என்ன விளையாடுகிறீர்களா?"
"இதோ உன் இந்த விளையாட்டு முடிந்து கொண்டிருக்கிறது. ரிலே ரேஸ் மாதிரி அடுத்த ஓட்டத்துக்கான குச்சி உன்னிடமிருந்து எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. நீ நினைப்பது போல் இது முடிவல்ல. சுழற்சியின் ஒரு அங்கம். இப்போது வரை நீ ஒன்று. இனிமேல் நீயான நாங்கள் இரண்டானோம். பிறகு மீண்டும் ஒன்றாவோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். வருகிறோம்."
ராகவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்த இரண்டாவது நொடியில் செத்து போனான்.
மறுநாள் ராகவனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. "ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது" என்றார் ஒருவர். "ராகவனின் உடல் மறைந்தாலும் அவர் அவரது நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்" என்றார் இன்னொருவர். இரண்டும் ஒன்று.
Friday, 23 February 2007
அந்த ஒரு கேள்வி
அந்த ஒரு கேள்வி
2006 நவம்பர் 19 கல்கி
அந்த வயதானவர் எங்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"சேகர். அங்க நிக்கிறாரே அவர் யார்றா?"
"என்னடா. இவரை தெரியாது? எங்க ஷூட்டிங் நடந்தாலும் அங்க வந்திடுவாரு. என்ன, சான்ஸ் கேட்கத்தான். விட்றா. நம்ம வேலைய பார்போம். ஆர்டிஸ்ட் சீக்கெளன்ஸ் ரெடி செஞ்சுட்டியா,"
ஆனால் என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் பார்த்த பார்வை ஏதோ சொல்லியது. என் பார்வையின் கூர்மையை உணர்ந்ததும் என்னை நோக்கி வந்தார்.
"ஸார். வணக்கம். இன்னிக்கு எனக்கு எதாவது ரோல் கிடைக்குமா?"
ஒல்லியான தேகம். முள்ளுமுள்ளான தாடி ஒரு வாரத்தை சொல்லியது. போட்டிருப்பது நிச்சயம் அவர் சட்டையாக இருக்காது.
அன்றைய ஷூட்டிங் ஷெட்யூலை புரட்டினேன். அவருக்கு ஏற்ற ரோலை தேடியதில்....
இருந்தது. ஆனால் டைரக்டர் அல்லது ப்ரொடக்ஷன் மேனேஜரை கேட்காமல் சொல்ல முடியாது.
"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் வரட்டும். "
போய் தன் பழைய இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
டைரக்டர் வர மணி பத்தாகி விட்டது. வந்ததும் வராததுமாய் அந்த கேரக்டரை சொல்லி அவரைக் காட்டி கேட்டேன். அவரும் கொஞ்சம் யோசித்துவிட்டு சரியென சொல்லிவிட்டு ஃபீல்டுக்குள் போய்விட்டார்.
மிகுந்த உற்சாகத்தோடு அவரை அழைத்துச் சொன்னேன்.
"நிச்சயமா உண்டா?"
அவர் கேள்வி புதிராக இருந்தது.
"ஏன் கேட்கிறீங்க. டைரக்டரே ஓக்கே சொல்லியாச்சு. நிச்சயம் உண்டு."
"அப்ப, நான் டிபன் சாப்பிட்டுக்கலாம் இல்லையா."
அந்த பதிலில் பொதிந்திருந்த அவலம் என்னை என்னவோ செய்தது.
Thursday, 22 February 2007
அப்பாவா? யாரது?
அப்பாவா? யாரது?
2006 நவம்பர் 01ஆனந்த விகடன்
"வாம்மா. உட்காரு." வந்தவளுக்கு சேர் ஒன்றை என் டேபிளுக்கு முன்னால் இழுத்து போட்டேன்.
ஒல்லியான சிறிய உருவமாக இருந்தாள். செபாஸ்டினின் சாயல் துளி கூட இல்லை. கருப்பாக இருந்தாலும் நடை உடை பாவனையில் ஸ்மார்ட்னெஸ் தெரிந்தது. ஏதோ பிபிஓ கால் சென்டர் கம்பனியில் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருப்பதாக ஆபீஸில் யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
"ஸார். நீங்க சொன்ன பேப்பர்ஸ் எல்லாம் கொண்டு வந்திட்டேன். டெத் ஸர்டிபிகேட் வாங்கறதுல கொஞ்சம் சிக்கலாயிட்டு. அதான் லேட். செக் நாளைக்கு கிடைச்சா நல்லது."
உடனடியாக கிளார்கை கூப்பிட்டு அவளுக்கு முன்னாலேயே அவள் திருப்தியாகும்படி உத்திரவுகளை கொடுத்தேன்.
"நாளைக்கு ஒரு மணிக்கு வந்தா, செக் கிடைச்சுடும்மா. கவலைப் படாதேம்மா. நாங்கள்லாம் இருக்கோம்."
என் குரலில் கொஞ்சம் கனிவு சேர்ந்தது. அவள் தலையை குனிந்து கொண்டாள். செபாஸ்டின் எங்கள் ஆபீஸ் ப்யூன். நாற்பது வயதுதான். ஆறு மாசமாக படுத்த படுக்கையாக கிடந்து, போன சனிக்கிழமை செத்து போய்விட்டான். படிப்பறிவில்லாத மனைவி. இவளைத் தவிர நண்டும் சிண்டுமாக ஒரு தம்பியும் ஒரு தங்கையும்.
"ஸாரிம்மா. ஆபீஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு நேத்திக்கு காலைதான் வந்தேன். செபாஸ்டின் நல்ல சின்சியர் ஒர்கர்ம்மா. ரொம்ப பணிவு. நாங்கள்லாம் அவன் பொழைச்சு வந்திடுவான்னுதான் நம்பிக்கிட்டிருந்தோம். கடவுள் இவ்வளவு கொடுமைக்காரராக இருக்கக்கூடாது"
மெல்லியதாக தொடங்கிய என் இரங்கலை அவள் சட்டென கை உயர்த்தி நிறுத்தினாள்.
"போதும் சார். இந்த மேம்போக்கான வார்த்தைகளை கேட்டு கேட்டு எனக்கு போரடிச்சிடுச்சு. மன்னிச்சுக்கணும். அவரை நான் அப்பான்னு சொல்லவே விரும்பல. வாங்கின சம்பளத்துக்கும் மேல குடியும் கூத்துமா இருந்தாரு. ஊரு முழுக்க கடனை வச்சாரு. வெட்கமே இல்லாம மூனு பிள்ளைங்களை பெத்தாரு. என் அம்மாவை அடிச்சே முடமாக்கினாரு. கடைசில எங்கையோ தண்ணிய போட்டுட்டு லாரி முட்டி ஆஸ்பத்திரில கெடந்து இழு இழுன்னு இழுத்து இன்னும் அரை லட்சத்துக்கு கடனை வச்சிட்டு ஒரு வழியா போய் சேர்ந்தாரு."
நான் உறைந்து போய் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
"லாரில அடிபட்டு செத்திருந்தா கூட ரெண்டு லட்சம் வரைக்கும் நஷ்ட ஈடு கிடைச்சிருக்கும். ஆஸ்பத்திரி செலவு மிச்சமாகியிருக்கும். அவரோட கடன்களை அவராட சாவாலேயே சரி செஞ்சிருக்கலாம். என்ன செய்ய? எங்க விதி. இருக்கும் போதும் சல்லி காசுக்கு உபயோகமில்லே. செத்தும்......"
"இல்லைம்மா. என்ன இருந்தாலும் அப்பாவை அதுவும் செத்து போய்ட்டவங்களை அப்படி எடுத்தெறிஞ்சு பேசக் கூடாது."
"அப்பாவா? யாரது? ஸார். அவரை பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியும். ஏன், எல்லாருக்குமே தெரியும். இருந்தும் எதுக்கு ஸார் பொய்யான வருத்தம்? அவரோட கொடுமைகளை உடம்பாலயும் மனசாலயும் நான் ராத்திரி பகலா வலிக்க வலிக்க அனுபவப்பட்டிருக்கேன் ஸார். என்னை பொறுத்த வரைக்கும் அப்பா, அம்மா, கணவன், மனைவிங்கற சொற்களுக்கெல்லாம் அர்த்தமிருக்கு. அதற்கு தகுதி வேணும். ஹி ஹெப்பண்ட் டு பி மை பயாலாஜிகல் பாதர். அவ்வளவுதான். நீங்க செக்கை சீக்கிரம் கொடுத்தா கந்து வட்டி கொஞ்சம் குறையும். என் ட்யூட்டிக்கு லேட் ஆவுது. வர்ரேன் ஸார்."
சரேலென எழுந்தாள். வலுவற்ற செயற்கையான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு போய்விட்டாள். எனக்குள் அதிர்ச்சி முழுவதுமாக விலக வெகு நேரம் ஆயிற்று.
Wednesday, 21 February 2007
கண் திறந்த ஓவியம்
கண் திறந்த ஓவியம்
2006 ஆனந்த விகடன் தீபாவளி மலர்
"சிந்துஜா. நல்ல பெயர். சிந்து பைரவி எனக்கு மிகவும் பிடித்த ராகம்"
பளீரென்று நெடுநெடுவென உயரமாக இருந்தாள். ஷாம்பு விளம்பரதாரர்கள் இவளைப் பார்த்தால் நிச்சயம் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள்.
"ம்.... சொல்லுங்கள். என்ன விஷயமாக என்னை சந்திக்க வந்திருக்கிறீர்கள்?"
"சார். சென்ற சனிக்கிழமை எங்கள் காலேஜ் ஆண்டு விழாவில் உங்கள் லெக்சர் சிம்ப்ளி சூப்பர்ப். உங்கள் எழுத்து மாதிரியே பேச்சும் இருக்கிறது. வீழ்வது தோல்வியல்ல. வீழ்ந்து கிடப்பதுதான் தோல்வி என்ற சிறு தலைப்பில் எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்."
"ரொம்ப நன்றி. நீங்கள் என்னைப் பார்க்க வந்தது குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், இதை அங்கேயே சொல்லியிருக்கலாம் அல்லவா?"
"மன்னிக்கவும். நான் சாதாரணமாக விஐபிகளை பொது இடங்களில் தொந்தரவு செய்வதில்லை. தவிர, உங்களிடம் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்."
"சொல்லுங்கள்."
"அன்றைக்கு விழா முடிந்ததும் நான் பஸ் பிடிக்க வந்து விட்டேன். அப்போது அந்த பக்கமாக உங்கள் கார் வந்தது."
"ஞாபகமில்லை. சொல்லுங்கள்."
"உங்கள் கார் வரவும், ஒரு மாணவன் வாழைப் பழத் தோலில் சறுக்கி விழவும் சரியாக இருந்தது. அனைவரும் முதலில் சிரித்தாலும் உதவிக்கு ஆள் தேடினோம். ஆணுக்கு ஆணாக நீங்கள் உதவ வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் கண்டும் காணாதது மாதிரி போய்விட்டீர்கள்."
"ஆமாம். எனக்கு உடனடியாக இன்னொரு இடத்திற்கு போக வேண்டியிருந்தது."
அவள் எதுவும் பேசாது என்னையே பார்த்தாள். என் பதிலில் அவளுக்கு திருப்தியில்லை என்று தெரிந்தது.
"ஸாரி. நான் கொஞ்சம் நின்று அவனுக்கு உதவியிருக்கலாம். உதவியிருக்க வேண்டும்."
அவள் மெதுவாக என்னைப் பார்ப்பதை தவிர்த்து கீழ் நோக்கிய பார்வையில்...
"ஸார். உங்கள் எழுத்திலும் பேச்சிலும் பிரமிப்போடு இருந்த நான் உங்களில் அந்த செயலில் நானே சறுக்கி விழுந்த மாதிரி அவஸ்தைப் பட்டேன். எனக்கு அன்றைக்கு முழுக்க தூக்கம் வரவில்லை. எழுத்தும் பேச்சும் அரை கிணறு சார். நான் உங்கள் பரம ரசிகை. என் ரோல் மாடல் நீங்கள். உங்களை முழு மனிதராகவே பார்க்க விரும்புகிறேன்."
அவள் வார்த்தைகளால் என்னை விளாசியிருந்தாலும் அதில் உள்ள உண்மையும் என் மேல் அவள் கொண்டிருந்த பற்றும் என் புத்திக்கு உடனடியாக உறைத்தது.
"ரொம்ப நன்றிம்மா. தயங்காம வந்து எடுத்துச் சொன்ன உன் தைரியத்தை பாராட்டறேம்மா. ஆமா, நீங்கள் ஒரு ஓவியரா?"
"இல்லையே. ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?"
"இல்லை. என் கண்களை திறந்து விட்டிருக்கிறீகளே. அதனால்தான் கேட்டேன்.... சிந்துஜா. நல்ல பெயர். சிந்து பைரவி எனக்கு மிகவும் பிடித்த ராகம்"
இந்த முறை அவள் புன்னகை பூத்தாள்.
Tuesday, 20 February 2007
வல்லவன்
வல்லவன்
2006 செப்டம்பர் 24 குங்குமம்
கொல்கத்தா விமானம் தரை இறங்கிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் எங்கள் புதிய மண்டல மேலாளார் ம்ருனாள் தாஸ் குப்தா யார் என்பது தெரிந்துவிடும். இப்போதைக்கு எனக்குப் பெயர் மட்டும்தான் தெரியும், ஆள் எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்தப் பெயருக்கு ஒரு முலாம்பழத் தலையும் சரிந்த தொந்தியுமாக ஒருவரைத்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
‘டால்பின் ரிஸார்ட்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ (சுத்தப் பொய்!) என்று ஆங்கிலத்தில் எழுதிய 'டி' வடிவ தட்டியை பெருமாள் கோவில் தீவட்டி மாதிரி பயபக்தியுடன் உயர்த்தி பிடித்திருந்தான் டிரைவர் சுந்தரம். எங்கே கொஞ்சம் அசிரத்தையாக இருந்து, ஆரம்பமே கோணலாகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு.
எங்கள் கம்பனிக்கு சனி திசை கடந்த மூன்று வருடங்களாக ரொம்பவே உச்சத்தில் இருக்கிறது. விஸ்வநாத பிரதாப சர்மா (அப்படித்தான் சொல்லவும் வேண்டும். எழுதவும் வேண்டும். விஸ்வநாதவுக்கோ பிரதாபவுக்கோ புள்ளி வைத்தீர்கள் என்றால் நிச்சயம் சம்பள உயர்வுக்கு முற்றுப் புள்ளி) என்ற கிழம்தான் சென்ற சனிக்கிழமை வரை எங்களுக்கு பாஸ். திடீரென எங்கள் முதலாளி மீது கோபித்துக் கொண்டு ராஜினாமா செய்துவிட்டு அடுத்த பிளைட்டில் தன் சொந்த ஊரான டில்லிக்கு போய்விட்டது.
கொல்கத்தா பிரயாணிகள் வெளியே வருவது அதிகரித்து விட்டது. ஒரு கிழம் கிட்டதட்ட என் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அது என்னை தாண்டிச் சென்று ஒரு கவுன் போட்ட கிழவியை அணைத்துக் கொண்டு சென்றுவிட்டது. அதன் பிறகு ஒரு சொட்டையை பார்த்து சந்தேகப்பட்டேன். அதுவும் இல்லை. நேரம் ஆக ஆக எனக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. முலாம்பழத்தை கோட்டை விட்டு விட்டேனா? அது எங்கயாவது போய் சந்தி சிரித்து கடைசியில் அலுவலகத்துக்கு வந்து என் சீட்டை கிழித்துவிட்டால்? நிற்க முடியவில்லை. ஆனால் விட்டுப் போக மனசில்லை.
இப்படியாக யோசித்து யோசித்து முடியை பிய்த்துக் கொள்ளாத குறையில் இருக்கும் போது நீல ஜீன்ஸ், கருப்பு டி சர்ட், ரேபான் பச்சை கண்ணாடி, லோட்டோ கான்வாஸ், ஆறடி உயரம், அத்லெடிக் பாடி, கோதுமை நிறம், மொத்தத்தில் ஹிந்தி சினிமா ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து வந்தவன் மாதிரியான ஒருவன் (ஸாரி ஒருவர்) எங்கள் தட்டியை அடையாளம் கண்டு கையசைக்க....
மை காட்! இவர்தான் ம்ருனாள் தாஸ் குப்தாவா?
பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்று 007 ஸ்டைலில் "நான் தாஸ் குப்தா. ம்ருனாள் தாஸ் குப்தா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நல்லவேளை கையில் சாக்பீஸ் சைஸில் கைதுப்பாக்கி இல்லை. கைகுலுக்கலில் கொஞ்சம் பெண்மை இருந்தது.
சே! மிகப் பெரிய பதவியில் இருப்பவர் இப்படி கெளபாய் மாதிரி... என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு குப்தாவை சுத்தமாக பிடிக்கவில்லை.
நானும் பதிலுக்கு "ஐ ம் கிருஷ்ணன் வினயா. கிருஷ்ணன் தாமோதரன் வினயா. டால்பின் ரிசார்ட்ஸின் சென்னை மண்டல அலுவலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது." என்றேன். சுந்தரத்திடமிருந்து ரோஜா மாலையை வாங்கி அணிவித்தேன்.
அதற்குள் கார் வந்து விட்டது. நானும் மடமடவென்று அலுவலக ரீதியாக சொல்ல வேண்டியவைகளை சொல்லித் தீர்த்து விட்டேன். அது மனதுக்குள் சென்றதா என்று தெரியவில்லை. பார்வை என்னவோ பல இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தது.
இனி எங்கள் ஆபீஸ் உருப்பட்ட மாதிரிதான். சர்மா ஆடியது ருத்ர தாண்டவம். இது ஆடப்போவது ப்ரேக் டான்ஸாகத்தான் இருக்கும். தமிழ் பேசியது ஆச்சர்யம் என்றால் (அம்மா தமிழச்சி) காரில் சுந்தரத்தோடு சமமாக உட்கார்ந்து கொண்டு பேசியது எரிச்சலோ எரிச்சல்.
ஹோட்டல் ரூமில் விட்டுவிட்டு அவசரம் அவசரமாக வீடு திரும்பினேன். என் மனைவியும் எங்கள் கம்பனியிலேயே வேலை பார்க்கிறாள். எதிர்பார்த்த மாதிரியே வித்யா மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.
"ஏங்க புது பாஸ் எப்படீங்க, கலகலவா சிடுசிடுவா,"
"இரண்டும் கெட்டான். இனிமே ஆபீஸ் ஆபீஸாக இருக்காதுன்னு நினைக்கறேன்."
வித்யாவை ஆபீஸ் வாசலிலில் இறக்கிவிட்டபோதுதான் ஞாபகம் வந்தது. ஸ்வீட் பாக்கெட்டுகளுக்கு சொல்லியிருந்ததை வாங்கிவரவில்லை.
வேலையை முடித்துக்கொண்டு செக்ஷனில் வந்து அமரவும் குப்தா அழைப்பதாக சுந்தரம் சொல்லிவிட்டுப் போனான்.
காபின் கதவை டொக் டொக்கி விட்டு உள்ளே சென்ற எனக்கு ஆயிரம் வோல்டில் ஷாக். சாம்பல் கலரில் உயர் தர கோட் சூட். தங்க பிரேமில் முட்டை வடிவ கண்ணாடி. குப்தா... அப்படியே உல்டா. என்னால் நம்பவே முடியவே இல்லை. ஏர்ப்போர்ட்டில் கெளபாய் மாதிரி இருந்தவர் இங்கு அனில் அம்பானிக்கு தம்பி மாதிரி இருந்தார்.
"மிஸ்டர் வினயா. இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் எல்லோரையும் சந்திக்கப்போகிறேன். தகவல் அனுப்பிவிடுங்கள். கான்பிரன்ஸ் ஹாலை தயார் செய்து வையுங்கள்."
முக்கிய ஆபீஸ் கோப்புகளில் அவர் சொன்ன குறிப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. சர்மா விட்டுவிட்டு போன எல்லா பென்டிங் வேலைகளும் க்ளியர் ஆகியிருந்தன.
கான்பிரன்ஸ் ஹாலில் குப்தா வெளுத்து வாங்கினார். ரிசார்ட்ஸ் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். பல தகவல்கள் எங்களுக்கு புதிதாக இருந்தன. வந்து இரண்டு மணி நேரம்கூட ஆகியிருக்காது. அதற்குள் பொது மேலாளரிலிருந்து டிரைவர் வரை அனைவரின் பெயர்களும் டாண் டாண்னென்று வந்து விழுந்தன. தமிழில் மெல்லிய நகைச்சுவை இருந்தது.
மதியம் குப்தாவிடமிருந்து மறுபடி அழைப்பு வந்தது.
லாப்டாப்பில் மூழ்கியிருந்தார் குப்தா.
"ஸார். ஏர்ப்போட்டில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதற்கு மன்னிக்கவும். உங்கள் புத்திசாலித்தனம் எங்களை பிரமிக்க வைக்கிறது."
"நோ. நோ. வினயா. நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. நான் கம்பனியை விட்டு வெளியே வந்து விட்டால் மிக சாதாரண இளைஞன் மாதிரிதான் இருப்பேன். என் கண்டிப்பும், அதிகாரமும் அலுவலகத்துக்குள் மட்டும்தான். அதை விடுங்கள். இந்த கம்பனியில் உங்கள் வேலைகள் என்ன?"
"ஸார். நான் உங்களுக்கு செக்ரெட்டரி. கம்பனிக்கு பி.ஓ. வெளிநாட்டு வி.ஐ.பி. வந்தால் அவர்களோடு கூடவே செல்லும் சிறப்பு அதிகாரி. சில சமயங்களின் நம் ரிஸார்டுகளில் தொழிலாளிகள் பிரச்னை வந்தால் அதை சமாளிக்கப் போவது உண்டு."
"போதும் போதும். எனக்கு புரிந்து விட்டது. உங்கள் பளுவை உடனடியாக குறைக்க வேண்டும். ம்... ம்... என்ன செய்யலாம். ... சரி... எனக்கு தனி செக்ரெட்டரி தேவை. மற்ற வேலையெல்லாம் நீங்களே இப்போதைக்கு பார்த்துக் கொள்ளுங்கள். நம் ஆபீஸில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா?"
எனக்கு வித்யாவின் ஞாபகம் வந்தது. அக்கெளண்ட்ஸ் செக்ஷனில் இடுப்பொடிய வேலையிருப்பதாகவும் வேலையை விட்டுவிடலாமா என்று நச்சரித்து கொண்டிருக்கிறாள்.
"ஸார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அக்கெளன்ட்ஸ் செக்ஷனில் வேலை பார்க்கும் வித்யாவை போடலாம். என் மனைவி என்பதற்காக இல்லை. திறமையானவள்."
"ஓகே. உடனடியாக என்னை பார்க்கச் சொல்லுங்கள். நான் வேலையில் காம்ப்ரொமைஸ் செய்து கொள்ள மாட்டேன். திறமையிருந்தால் நிச்சயம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியானால் உங்கள் வீட்டில் வைத்து எனக்கு விருந்து அளிப்பீர்களா?"
"நோ ப்ராப்ளம் சார். உங்களுக்கு இல்லாத விருந்தா? அது எங்கள் பாக்கியம் சார்."
வித்யா உள்ளே போய் ஐந்தாவது நிமிடத்தில் மலர்ந்த முகத்துடன் வந்தாள். துள்ளிக் குதித்து போய் அவளே ஆர்டரை டைப் செய்தாள். கையெழுத்து ஆகி வந்ததில் சம்பளம் கிட்டத்தட்ட இரட்டிப்பு ஆகியிருந்தது.
நாலு மணிக்கெல்லாம் குப்தா பிசினெஸ் விஷயமாக வெளியே போய்விட்டார். முன்பெல்லாம் சர்மா கிழம் வெளியே போனது என்றால் நாங்களெல்லாம் ஹுர்ரே என்று வெஸ்ட் இண்டீஸ் மாதிரி கைகளை மேலும் கீழுமாக தட்டிக் கொள்வோம். இப்போது அடியோடு மாறிவிட்டது. அவரவர்கள் அவர்கள் வேலையில் மூழ்கியிருந்தாகள்.
குப்தா பொறுப்பேற்றுக் கொண்டதைப் பற்றி ரிப்போர்ட் ஒன்றை எங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நேர்த்தியாக ரிப்போர்ட் தயார் செய்திருந்தார். உயர்தர ஆங்கிலம். ஹாவர்டில் எம்.பி.ஏ என்றால் சும்மாவா?
ஃபேக்சுக்கு எண்களை தட்டி தட்டி பொறுமை போனது. சில சமயங்களில் இப்படித்தான் ஆகும். ஃபேக்ஸ்தான் சண்டித்தனம் செய்கிறதே. ஈமெயிலில் அனுப்பி விடலாமா என்று கேட்க எங்கள் கொல்கத்தா முதலாளியின் பி.ஏ.வை டெலிபோனில் பிடித்தேன்.
"வணக்கம். நான் வினயா. சென்னை மண்டல அலுவலகம். திரு குப்தா அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்கள். அது பற்றிய ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ஃபேக்ஸில் ஏதோ ப்ராப்ளம். ஈமெயில் அனுப்பிவிடவா?"
"குப்தாவா. யார் ம்ருனாள் தாஸ் குப்தாவா?" (இங்கும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலா!)
"ஆமாம்."
லேசாக நக்கலாக சிரிப்பது தெளிவாகக் கேட்டது. என்னால் பொறுக்க முடியவில்லை.
"என்ன விஷயம். எதற்கு சிரித்தீர்கள்? ஏன் ரொம்ப புத்திசாலியாகத்தானே தெரிகிறார்."
"அதிலெல்லாம் கில்லாடிய்யா. முதலாளிக்கும் ரொம்ப புடிச்ச ஆள்தான். ஆனா... எனக்கு எதுக்கு வம்பு? நீங்களே தெரிஞ்சுப்பீங்க."
"சார், சொல்லிடுங்களேன். எனக்கு மண்டை வெடிச்சுடும் போல இருக்கு."
"சரி. சொல்லறேன். ஆனா யாருக்கும் தெரியக்கூடாது. அதுவும் நான் சொன்னேன்னு."
"சரி. சொல்லுங்க."
"அந்த ஆளு பொம்பள விஷயத்திலயும் ரொம்ப கில்லாடிப்பா. அதுவும் கல்யாணமான பொண்ணுகள அவன் ப்ராகெட் போடற மாதிரி ஒரு பய போடமுடியாது. மும்பைலகூட இந்த பிரச்னை இருந்ததா கேள்வி."
எனக்கு தலை சுற்றியது.
Monday, 19 February 2007
தேடிச் சோறு நிதந்தின்று....
தேடிச் சோறு நிதந்தின்று....
2006 செப்டம்பர் கலைமகள்
"எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல்லை ஸார். செத்துடலாமான்னு பார்க்கறேன். ஏதாவது நோய் நொடில போயிடலாம்னு பார்த்தா எனக்கு ஒரு ஜலதோஷம் கூட வந்ததில்லை. உடம்பு என்னவோ பெருமாள் கோயில் துவாரபாலகர் மாதிரி வளர்ந்திண்டேயிருக்கு. ஷேவிங் செஞ்சுக்கும் போது என் உடம்ப பார்த்து எனக்கே பயமாயிருக்கு.
போன வருஷம் காலரா வந்து ஊர்ஊரா ஜனங்கள் செத்து மடிஞ்சா. ஊரு முழுக்க இப்படி வியாதி வந்து கொல்லறதே எனக்கு ஒன்னும் வரமாட்டேங்கறதே ஏன்னு தெரியாத்தனமா கோயிலாத்து அம்பிகிட்டே கேட்டது என் தப்பு. அவன் சொல்லறான். அது ஓடியாடி வேலை செஞ்சு நல்ல வேலையில இருக்கறவாளுக்கு. ஒன்ன மாதிரி திண்ணை தூங்கிகளுக்கில்லேங்கறான். கம்மனாட்டி. இதுக்காகவே நாக்கைப் பிடிங்கிண்டு சாகலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நாக்கைப் பிடிங்கின்டா ரத்தம் கொட்டுமாமே. வலிக்குமாமே. உடனே உயிர் போகாதாமே. அது சரிப்படாது.
சாகணும் சாகணும்ங்கறேனே, ஏன்னு கேக்கறேளா ? வேற ஒன்னுமில்ல. என்னால யாருக்கும் தம்பிடி ப்ரயோஜனமில்லே. தோன்றினா புகழோடு இல்லேன்னா வேஸ்ட்டுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கா இல்லையா? நான் ஒரு ஆளு ஒழிஞ்சேன்னா இந்த பஞ்ச பாட்டு பாடற சர்க்காருக்கு ப்ரயோஜனமா போகும். அடுத்த ஜன்மத்துலையாவது காதுல கடுக்கன், அப்பளாக் குடுமின்னு இல்லாம நன்னா கிராப், கிருதாவோட பொறந்து தொலைக்கணும். குளத்துல விழுந்து ப்ராணனை விடலாம்னு பார்த்தா எனக்கு நீச்சல் தெரியுமே? தவிர மூக்கு வழியா லங்ஸ் முழுக்க ஜலம் போய் உயிர் போக ரொம்ப நேரம் ஆகுமாமே? ம்ஹூம்.. அதுவும் சரிபடாது.
சரி... தூக்கு மாட்டின்டு சாகலாம்ன்னா. நெஞ்சு குரல்வளை பொடலங்கா ஒடியர மாதிரி பொடக்குனு ஒடியுமாமே? என்ன கஷ்டம்டா இது, நன்னா வயறு நிறையா சாப்டோமா, சின்ன திண்ணைல வந்து படுத்துண்டு அப்படியே மேல போனோமான்னு இருக்க வேண்டாமோ ? இப்படித்தான் மூணாந்தெரு கொழந்த கிட்டா போனான். பேருதான் கொழந்தை கிட்டா. கோட்டான் வயசு. நேத்திக்கு எல்லாம் ஆச்சு. சட்டுன்னு வ்ராட்டி படுக்கைக்குள்ளே பூந்துண்டு என் மேல கொள்ளிய வைய்யுங்கோங்கற மாதிரி படுத்துண்டுடலாம்ன்னு தோணித்து.
என்னடாப்பா நாப்பது வயசிலேயே இப்படி பொலம்பறானேன்னு பார்கறேளா? உன் பையன் 16-ம் வருஷத்திலே பொறந்து 16 சம்பத்துகளுக்கும் அதிபதியாகி இருப்பான்னு பெருமாள் கோயில் பட்டாசாரியார் சொன்னதாக என் தோப்பனார் அடிக்கடி சொல்லுவார். சம்பத்தாவது? சர்பத்தாவது? ஒன்னுத்துக்கும் வழியில்லே.
ஜென்மம் எடுத்த நாள்லேர்ந்து எதுவும் என் இஷ்டப்படி இல்லே. முதல் பதினாறு வருஷம் என் தோப்பனார் நரசிம்மர் கன்ட்ரோல்ல இருந்தேன். இந்த ஸ்லோகத்தை சொல்லு அந்த ஸ்லோகத்தைச் சொல்லுன்னு என் தொடையை கிள்ளிண்டே இருந்தது இப்பவும் வலிக்கறது. பெரியவாள்ளாம் கோவிச்சுக்கக் கூடாது. இப்ப யாராவது ருத்ரம், சமகம்ன்னா நான் ஜோட்தலைய எடுத்து மொத்திப்பிடுவேன். எல்லாமே வெறுத்துப் போயிடுத்து. அவரை நடுக் கூடத்திலே போட்டு விளக்கேத்தி வைச்சபோது கூட என் தொடையத்தான் தடவிண்டேன். அழுகை துளிக்கூட வர்லே. ஆளாளுக்கு கோவிச்சுண்டா.
சரி.. ஒரு சனி விட்டுது. இனி கொஞ்சம் செளகர்யமா வெங்காய கொட்சும், பூண்டு ரசமுமா இருக்கலாமேன்னு பார்த்தா இன்னோரு சனி என் ஆத்துக்காரி ரூபத்திலே வந்தது. கல்யாண ஜோர்ல, பார்க்கறதுக்கு சின்னக் கொழந்தே மாதிரி இருக்காளேன்னு நெனைச்சிண்டு அடியே, பங்கஜம் நீ ரொம்ப அழகா இருக்கே, ஆனா உன்னோட மூக்கு சித்த கோணல்னேன். உள்ளது உள்ளபடியேச் சொன்னது தப்பாபோயிடுத்து. ரெண்டு பசங்க பொறந்து, வளர்ந்து, பட்ணத்துக்கு படிக்க போனாளோல்லியோ, ஆரம்பிச்சுட்டா. நீங்க அன்னிக்கு அப்படிச் சொன்னேளே இப்படிச் சொன்னேளேன்னு ஒரே ஹிம்சை. விட்டுடுத்து எல்லாம்னா உங்களுக்கு நல்லா புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன்.
கோபக்கார தோப்பனார் ருத்ர தாண்டவம் ஆடினார்னா, இவ பக்தி திலகம். கைல சப்பளாக் கட்டைய எடுத்துண்டு வீடு வீடா பஜனை. ஒரு சாயங்காலம் எதிர்வீட்டு சேது என்ன கேட்டான் தெரியுமா, கோபாலா எங்காத்துல இன்னிக்கு ராத்திரி திவ்ய நாம பஜனை. வர செளகர்யப்படுமா? உங்காத்து மாமிதான் சீஃப் கெஸ்ட்ன்னு சொல்லிப்பிட்டு கண்ணடிக்கறான். படவா ராஸ்கோல். நீங்களே சொல்லுங்கோ. நன்னாவா இருக்கு? ஏண்ணா? ஈரோட்டுக்கு பக்கத்திலே ஏதோ ஒரு மலை ஜாதிக்காரா அப்படியே மூச்சை தம்பிடிச்சிண்டு உசிரை விட்டுடுவாளாமே? நெசமாவா? ம்... அப்படியே இருந்தாலும் எனக்கு சரி வராது. பிராணாயாமத்துக்கே மூச்சை பிடிச்சுக்க கஷ்டமா இருக்கு, இதுல போயி மூச்சை பிடிச்சு உசிரை விடறதாவது?
ஆத்துக்காரி அப்படீன்னா, இந்த குலக் கொழுந்துகள் இருக்கே, பீடைகள். கன்னம் முழுக்க புஸ்புஸ்ன்னு கிருதா. தலைல குருவிக் கூடு மாதிரி முன்னுச்சி மயிர். கருகருன்னு தொங்கு மீசை. எனக்கு மரியாதையே கொடுக்காதுகள். எல்லாம் அம்மா ராஜ்யம். ஏன்னா எங்கிட்ட காசு இல்லையே. அப்படியே ஓடிப் போய் ரயில் தண்டவாளத்துலப் படுத்துன்டுடலாமான்னு தோண்றது. சே... வேண்டாம். சாகறதுதான் சாகறோம். பீஸ் பீஸ் போகாம முழுசா செத்துத் தொலைப்போமே.
இது வரைக்கும் நான் சொல்லறதைக் கேட்டே உங்களுக்கு த்சோ.. த்சோன்னு தோணறதோல்லியோ. இன்னும் கேளுங்கோ. இது போன மாசத்தில ஆரம்பிச்சது.
திவ்யநாமம்ன்னு பக்கத்தாத்துக்கும் எதிர்தாத்துக்கும் போயிண்டு இருந்ததுக்கு வந்தது கேடு. ஒரு சேட்டுக் குடும்பம் ஸ்னேகிதம் ஆச்சு. வீடு நாடகக் கொட்டா ஆயிடுத்து. பக்தி சிரத்தையா இருக்கறவா கோவிச்சுக்கக் கூடாது. ஸ்வாமிக்கு தீபாராதனைன்னா ஒரு ஐஞ்சு செகண்டு காட்டுவோம். அப்பறம். கீழே வைச்சுட்டு. எல்லாரும் எடுத்துக்கோங்கோன்னு சொல்லிடுவோமில்லையா. இங்க என்ன தெரியுமா? அந்த கடோத்கஜன் அவன் ஆம்பிடையா பூதகியோட ஈஷிண்டு தீபாராதனைத் தட்டை எடுத்துண்டு காட்டறா காட்டறா அரை மணி நேரமா. டோலக்கு என்ன? தபலா என்ன? அட்டகாசம். இரு, இரு, இதே மாதிரி நார்மடி கட்டிண்டு செய்வேடி. நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன், என்னை விட்டுட்டு பூஜை புனஸ்காரம் என்ன வேண்டிக் கெடக்கு?
ஏங்க? சவரக் கத்தியால நாடி நரம்பை வெட்டிண்டா வலிக்காம உயிரு போயிடுமாமே? அப்படியா? இதைத்தான் நான் மளிகைக் கடை பாலுகிட்டே கேட்டுத் தொலைச்சுட்டேன். தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே? அதை விட்டுட்டு, என்கிட்டே நெல்லுக்குத் தெளிக்கற பூச்சி மருந்து இருக்கு. அதுல ஒரு டம்பளர் மோர் சாப்பிடற மாதிரி கடகடன்னு சாப்ட்டுடு. வண்டிமாடு மாதிரி நுரை கக்கிச் சாவேங்கரான். ஏன்டா கேட்டேன்னு ஆயிடுத்து. நான்னா எல்லாக்கும் கேலியும் கிண்டலுமா இருக்கு.
சரி. எல்லாத்தையும் விட்டுடுவோம். சயனைடுன்னு ஏதோ ஒன்னு இருக்காமே? அதைப் பென்சில் நுனியளவுக்கு நாக்கில வச்சிண்டா போதுமாமே? அதை பத்தின விவரம் ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ளீஸ்.... "
மன்னிக்கவும். மேலே உள்ளவை யாவும் திரு கோபாலன் அவர்கள் 1956 ல் சொன்னது. அவர் மனைவி பங்கஜமும், மூத்த மகனும் தற்போது உயிரோடு இல்லை. மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு என்றால் அது கோபாலன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்பதுதான்.
Sunday, 18 February 2007
செல்வி
செல்வி
2006 ஜூன் 25 கல்கி
இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட்.
துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும்.
பனி கொட்டிக்கொண்டு இருந்தாலும் செல்விக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசியாக பெரிய சைஸ் போர்வையை பால்கனி கட்டையில் தொங்கவிட்டுவிட்டு நிமிர்ந்து, வலது பக்கம் பார்த்தபோது....
அப்பா வந்து கொண்டிருந்தார்.
'அப்பா'.
சந்தோஷ உச்சத்தில் செல்வி துள்ளளோடு திரும்பியதில், கீழே இருந்த பூந்தொட்டியை கவனிக்கவில்லை. கால் இடறியதில், அது நிலை தடுமாறி ஒரு பக்கமாக உருண்டு எதிர் சுவரில் முட்டி உடைந்தது.
ஹாலில் டி.வியும் ரிமோட்டுமாய் செல்வியையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கிழவி டிவி சத்தத்துக்கும் மேலாக கத்த ஆரம்பிக்க அந்த வீடே களேபரம் ஆனது.
செல்வியின் சின்ன பாதங்கள் ஈரமண்ணோடு இருந்த பூந்தொட்டியை மோதியதில் உயிரே போகிற மாதிரி வலித்தது. இரண்டு கைகளாலும் பாதத்தை பிடித்துக் கொண்டு முட்டியை அணைத்தபடி உட்கார்ந்துவிட்டாள். கட்டைவிரல் நுனியில் லேசாக ரத்தம் எட்டிப்பார்த்தது.
தூக்க கலக்கத்தோடு புயல் மாதிரி வந்த சுமதி மண் குவியலுக்கு மத்தியில் சோகமாய் சரிந்து கிடந்த ரோஜா செடியை பார்த்தாள். சுறுசுறுவென ஆத்திரம் கொப்பளிக்க செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைய, காலிங் பெல் ஒலித்தது.
ஆறுமுகத்துக்கு வரவேற்பே பிரமாதமாக இருந்தது. கிழவி ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. சுமதி ஆறுமுகத்தை இழுக்காத குறையாக பால்கனிக்கு அழைத்துபோனாள்.
"வாங்க. வந்து பாருங்க. உங்க பொண்ணு செஞ்சிருக்கும் அக்கிரமத்தை. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நேத்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய கொட்டினாள். இன்னிக்கி ஒரு பூந்தொட்டி போச்சு. பால்கனி முழுக்க மண்ணு. போச்சு. எல்லாம் போச்சு."
முதலில் ஆறுமுகத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அரண்டு போய் நிற்கும் செல்வியை தேற்றுவதா? பொருள் நஷ்டத்தை சொல்லி சொல்லி புலம்பும் வீட்டுக்கார அம்மாவுக்கு பதில் சொல்வதா? என்று தெரியாமல் குழம்பினார்.
அவருக்கு பூந்தமல்லியில் உள்ள ஒரு ஃபாக்டரியில் வாட்ச்மேன் வேலை. அதன் முதலாளி பெரிய மனது பண்ணியதில் அவர் குடும்பம் ஒண்டுவதற்கு அங்கேயே இடம் கிடைத்தது.அதை வசிக்கும் இடம் என்று சொல்லுவதே கடினம். வெயில் காலத்தில் சுட்டு பொசுக்கும். மழை காலத்தில் நாலா பக்கமும் ஒழுகி கொட்டும். இந்த அழகில் அவர் மனைவி வடிவு ஆறு மாதமாக படுத்த படுக்கையாக இருக்கிறாள். என்ன வியாதி என்றே தெரியவில்லை. அவள் சம்பாத்தியமும் நின்று போனதில் பண கஷ்டத்தில் குடும்பம் நிலை தடுமாறியது.
வேறு வழி இல்லாமல் கனத்த மனசோடுதான் பதிமூன்றே வயதான செல்வியை வீட்டு வேலைக்கு அனுப்பினார். செல்வி வண்டி மாடு மாதிரி முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறாள். வேலைக்கு சேர்த்துவிட்ட மூன்றே மாதத்தில் பத்து தடவைக்கு மேல் வந்து பஞ்சாயத்து செய்தாகிவிட்டது. நேற்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல போனில் பிழிய பிழிய அழ, ஒரு தீர்மானத்தோடு விடிகாலையிலேயே புறப்பட்டு வந்தால்...
"இங்க பாருங்க ஆறுமுகம். போறும். பேசாம உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போயிடுங்க. ரொம்ப தாங்க்ஸ். நான் வேற ஆள் பார்த்துக்கறேன். இவ கொடுக்கற டார்ச்சர்ல என்னால ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியலை. நேத்திக்கி டயர்டா ஆபீஸ் விட்டு வீடு வந்தா.... கிச்சன் முழுக்க எண்ணெயை கொட்டி... நாலு மணி நேரம் ஆச்சு, எல்லாத்தையும் சரி செய்ய. இவளால ஏற்படற நஷ்டம் இவளுக்கு கொடுக்கபோற சம்பளத்தை விட அதிகம். எத்தனை தடவை சொல்லியாச்சு? ஒழுங்கா வேலைய பாருன்னு. ஏதாவது அவசர வேலையா ஆள் தேடினா எங்கையாவது ஒரு மூலையில நின்னுகிட்டு அழுதுகிட்டு இருப்பா. வேணாம்.... போதும்.... கூட்டிக்கிட்டு போங்க."
"அம்மா. கொஞ்சம் பொறுங்க. செல்வி சின்ன பொண்ணு. அவ்வளவு விவரம் பத்தாது. நான் இன்னிக்கு தெளிவா எடுத்து சொல்லிடறேங்க. அரை மணி செல்விய வெளில கூட்டிக்கிட்டு போறெங்க. எல்லாம் சரியாயிடும். அம்மா. நீங்க செய்யற தயவாலத்தான் அங்க என் குடும்பத்துல அரை வயிராவது சாப்பிட முடியுதுங்க. கொஞ்சம் தயவு செஞ்சி...."
ஒரு வழியாக செல்வியை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்து போனார். பாவம். செல்வியால் நடக்கக்கூட முடியவில்லை. விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.
மூன்றே மாதத்தில் உதிர்ந்து விழுந்த கருவேலங் குச்சி மாதிரி... ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலித்தது.
"என்னம்மா. உன்னால அங்க இருந்து வேல செய்ய முடியலயா?"
செல்வியால் நேரடியாக அப்பாவை பார்க்க முடியவில்லை.
"இல்லப்பா. அம்மாவையும் தம்பிப்பயலையும் விட்டுட்டு இங்க என்னால இருக்க முடியல. அவங்க வீட்டு ஐயா குழந்தைகளோடு விளையாடுவாரு. உப்பு மூட்டை தூக்குவாரு. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தம்பி ஞாபகம் வருதுப்பா. அந்த கெளவி வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கு."
"செல்வி. இங்க பாரு. பொறுமையா இரு. உனக்கு பதிமூனு வயசு ஆயிட்டு. இன்னமும் நீ சின்ன புள்ள இல்லே. அம்மா சீக்காளியா படுத்திருக்கு. என் சம்பளமும் பத்தல. சின்னப் பயலுக்கு போன வாரம் ஒரேயடியா பேதியாகி கிளிச்சு போட்ட நாரு மாதிரி கெடக்கு. நீயும் அங்க வந்திட்டா என்னால எப்படிப்பா சமாளிக்க முடியும்."
செல்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மெல்லியதாக கண்ணீர் முட்டியது.
"போப்பா. அந்தம்மா என்ன வாளில தண்ணீ எடுத்தார சொல்லறாங்க. மூனு மாடி என்னால தூக்கியாற முடியல. கையெல்லாம் காச்சு போவுது. மீந்து போனதெல்லாம் சாப்பிட கொடுக்கிறாங்கப்பா. அந்த கொளந்தங்க தப்பி தவறி ஏதாவது திங்க கொடுத்திட்டா அந்த கெளவி கத்தி கூப்பாடு போடுது. அடிக்குது."
"அப்படியா. நான் தெளிவா சொல்லிட்டு போறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. அடிக்காதீங்கன்னு. நீ புத்திசாலி பொண்ணு இல்லையா. நெலமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா. உன்னால முடியலைன்னா தைரியமா எடுத்து சொல்லிடு. பயப்படாதெ. சரியா."
" ". செல்வி விசும்புவதை ஆறுமுகத்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
"இன்ணும் மூனே மாசம்மா. மொதலாளி சம்பளத்தை கூட்டி தரேன்னு சொல்லியிருக்காரு. பதினாலு வயசு கட்டும். அந்த கம்பனிலேயே உனக்கும் ஏதாவது வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பொறும்மா."
சொல்லிக்கொண்டே வந்தவர் சட்டென கண் கலங்கி...
"என்ன கஷ்டம்மா. நம்ம பொழப்பு நாய் பொழப்பு. வேண்டாம்மா. அடுத்த ஜன்மத்துலயாவது நீ கொஞ்சம் வசதியானவங்க குடும்பதுல பொறந்து தொலை. என்ன பாவம் செஞ்சேனோ, உன்னை இப்படி வாட்டுது. நீ சம்பாரிச்சு நாங்க சோறு திங்கனும்கிறது நரகல சாப்பிடறத விட கேவலம். என்னை மன்னிச்சுடும்மா."
நடுங்கும் கைகளால் செல்வியின் சவலை கைகளை பிடிக்க, " என்னப்பா. இந்த பேச்சை இத்தோட நிறுத்துப்பா. வசதி இல்லாட்டாலும் உன்ன மாதிரி அப்பா எனக்கு இனிமே கெடைக்கமாட்டாங்க. அது நிச்சயம். எனக்கு வசதியெல்லாம் வேண்டாம்பா. நீங்க, அம்மா, சேகரு போதும்.... சரிப்பா. இன்னும் மூனு மாசம்தானே. நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போங்க. போறதுக்கு முன்னாடி அந்த கெளவிய பத்தி அந்தம்மாகிட்டே தெளிவா சொல்லிடுங்க... அப்பறம்.... சரி... நான் சமாளிச்சுக்கறேன்..."
பேச்சு அழுகையோடு கலந்துதான் வந்தது.
திமிறி வந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை இனிமேல் அழப்போவதில்லை என்ற மாதிரி பிஞ்சு விரல்களால் வழித்துப் போட்டாள்.
தன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த செல்வியை அப்படியே சில நிமிடங்கள் மௌனத்துடன் அணைத்துக் கொண்டார் ஆறுமுகம். மனசு கசங்கிய காகிதம் மாதிரி ஆகிவிட்டது. கால்கள் துவண்டு உடம்பு முழுவதும் ஒரு ஆயாசம் இருந்தது.
வீட்டுக்கு திரும்பி வந்ததும் குழந்தைகள் செல்வியை கண்டதும் மகிழ்ச்சியில் ஓலமிட்டன. கிழவி பேச்சற்று ஒரு விரோத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறுமுகம் கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கார அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டார்.
செல்வி ஓடியாடி சகஜமாக வேலை செய்வதை பார்த்த திருப்தியோடு ஆறுமுகம் போனார். செல்வி பால்கனியிலிருந்து கையசைத்ததில் நம்பிக்கை தெரிந்தது.
சுமதி ஆபீஸ் போய்விட்டாள். கிழவி தூங்க போய்விட்டது. குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.
செல்விக்கு சேகரோடு கிராமத்து பம்ப் செட்டில் குளித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கொட்டமடிப்பார்கள். பெரிய குழந்தை தண்ணீரை வாரி சின்னதின் மேல் அடிக்கவும், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அது செல்வியின் பின்னால் ஒளிந்து கொண்டது.
சேகருக்கு வலது காலை விட இடது கால் சற்று சிறியது. கொஞ்சம் இழுத்து இழுத்துதான் நடப்பான். ஆனாலும் துரத்தினால் ஓட்டமாய் ஓடுவான்.
அவளுக்குள் இருந்த குழந்தை குணம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க, செல்வி அழத்தொடங்கினாள். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம், யாருக்கும் தெரியாமல்.
Saturday, 17 February 2007
நாய் பட்ட பாடு
நாய் பட்ட பாடு
2006 மே 14 ஆனந்த விகடன்
இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? சொல்லுவது யாவர்க்கும் எளிய. அனுபவப்பட்ட எனக்குத்தானே தெரியும். வாழைப்பழத்தோலில் வழுக்கி மடேரென பின்னங்கால் தூக்கி பிருஷ்டம் வலிக்க விழுந்தால் அது உங்களுக்கு 'கொல்' சிரிப்பாய் இருக்கும். வலி எனக்கு. சிரிப்பு உங்களுக்கு. அதே மாதிரி இந்த வாய் மற்றும் வாய்வு உள்ள அப்பிராணியை ஒரு வாயில்லா மற்றும் வாலுள்ள நாலு கால் பிராணி ஒரு வார காலத்துக்கு பாடாய் படுத்தி சிரிப்பாய் சிரிக்க வைத்ததை கேட்டால் உங்கள் வயிறு புண்ணாகி போக நான் கியாரண்டி.
மிக பெரிய சிந்தனைகள் ஒரு சிறு நொடித்துளியில் உருவாகிவிடும் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அந்த மாதிரி நான் மிகவும் விரும்பும் பருப்பு உசிலியை வெண்டைக்காய் மோர் குழம்போடு ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் போது என் ஆசை மனைவி கமலாவின் சிந்தனையில் உதித்த ஐடியாதான்....
"ஏங்க, நம்ம வீட்டுல நாய் ஒண்ணு வளர்த்தா என்ன?"
ரசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அதில் பாயசத்தை ஊற்றின மாதிரி எனக்கு அதிர்ச்சி. உங்களை வளர்ப்பதோடு அல்லாமல் நாய் வேறு வளர்க்க வேண்டுமா என்று கேட்டு வைத்தால் மேல்கொண்டு மோர் குழம்பு கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. என் மெளனம் கமலாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். பாருங்கள். இந்த சமயங்களில்தான் ஏழரைநாட்டு சனி உச்சம் பெறுகிறது.
"எனக்கொண்ணும் ஆசையில்லை. சின்னதுதான் அடம் பிடிக்கிறது."
அம்மாவின் புடவைக்கு பின்னாலிருந்து பாரதிராஜா ஸ்டைலில் ஒரு கண், அரை மூக்கு, அரை வாய் புன்சிரிப்போடு என் சின்னப் பெண் ஒண்ரையடி ஸ்வேதா எட்டிப் பார்க்க என் போதாத வேளை நானும் சிறிதாய் சிரித்து வைக்க பிடித்தது சனி.
"ஹாய். அப்பா ஓக்கே சொல்லிட்டார்." எனது இரண்டு வாண்டுகளும் கோரஸாக கத்திக் கொண்டே ஓடிவிட நான் நிராயுதபாணியானேன். கமலாவின் முகத்தில் இரண்டு பீட்ஸா சாப்பிட்ட பெருமிதம்.
"அதெப்படீங்க. குழந்தைகள் கேட்டா உடனே சரின்னு சொல்லிடறீங்க. நான் ஏதாவது கேட்டால் நாலு நாளுக்கு பதிலே வராது." கமலா தன் கவலையை இலவச இணைப்பாக வைத்தாள். நான் எங்கே சரின்னு சொன்னேன் என்று இந்த கேடு கெட்ட நேரத்தில் போட்டு உடைத்தால் பெரிய பிரளயமே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எல்லாம் வல்ல அந்த சனியின் மீது பாரத்தை போட்டு விட்டு வரப்போகிற சிக்கல்களுக்கு என்னை நானே நொந்து கொண்டேன்.
அதன் பிறகு எல்லாம் கிடுகிடுவென நடந்தன. மறுநாள் மாலையில் நான் 150 வவுச்சர்கள், மேனேஜரின் 1000 வாலா வசவுகளோடு சிக்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கும் போது எனது இரண்டு பெண் பிள்ளைகளின் தலைகள் லெட்ஜருக்கு மேலே ஏத்தலும் குறைச்சலுமாக தெரிந்தன.
“அப்பா. ஷாலுவை பாக்க போவேண்டாமா? அம்மா கீழ வெயிடிங்.” இது பெரிய பெண் சஞ்சனா.
“ஷாலுவா?”
“ஐய்ய. இது கூட தெரியலையா, நம்ம வாங்கப்போற டாகியோட பேரு. டாகின்னா டாக். டாக்னா நாய். சீக்கிரம் வாப்பா.” இது என் அரை டிக்கெட் ஸ்வேதா.
மேனேஜரிடம் கைகால்களில் விழுந்து கெஞ்சி கூத்தாடி கையதுகொண்டு மெய்யது பொத்தி தலையை சொறிந்து அசடு வழிந்து எப்படியோ பர்மிஷன் வாங்கி கீழே வருவதற்குள் கமலாவின் கமலா ஆரஞ்சு சைஸ் முகம் பூசணிக்காயாக இருந்தது.
“இப்பவாவது வந்தீங்களே. அஞ்சரைக்கெல்லாம் கென்னல் ஷாப் குளோஸ் ஆயிடும்ன்னு காலைல படிச்சு படிச்சு சொன்னேனே.”
என்சைக்ளோபீடியா மாதிரி ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். வழ வழ பேப்பரில் கலர் கலராய் நாய் படங்கள். சம்திங் ராங். சனீஸ்வரா!
“அப்பா. ஷாலுவ எப்படி பாத் செய்யனும். என்ன ஃபுட் குடுக்கனும்னு யாரையும் கேட்கவே வேண்டாம். அம்மா ஒரு புக் வாங்கியிருக்கா. ஜஸ்ட் செவன் ஹன்ட்ரட் ரூபீஸ் ஒன்லி.”
“20% டிஸ்கவுன்ட்ன்னு சொல்லுடி”
“ஆமாப்பா. அப்பறம் அந்த செயின்...”
“சஞ்சு சும்மாயிரு. எல்லாத்தையும் இப்பயே சொல்லனுமா?”
காரின் பின்ஸீட்டில் ஏகமாய் கேரிபேக்கில் சிக்கலாய் என்னென்னவோ இருந்தன. கிரெடிட் கார்டில் ஆட் ஆன் கார்ட் வாங்கி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பத்தான் உறைத்தது.
கென்னல் ஷாப்பில் ஏகமாய் நாய் குட்டிகள். விதவிதமான குரைப்புகள். கண்ணுகுட்டி சைசில் அல்சேஷன்களை பார்த்ததும் அஞ்சு தலை ஆதிசேஷனை பார்த்த பயம். அதன் முதலாளிக்கு கூட பாதி முதுகு வரை முடியிருந்தது. அந்த கறுப்பு கண்ணாடியும் ஒற்றை காது தோடும் என்னை கொஞ்சம் கலவரப்படுத்தியது. அவர் ஹவ் டு யூ டூ என்றதற்கு நான் அசடு வழிந்து அக்கம் பக்கத்தில் நாய் ஏதாவது இருக்கிறதா என்ற தேடலிலேயே இருந்தேன். கமலா என்னவோ தன் ஒன்றுவிட்ட மாமாவிடம் பேசுவது மாதிரி ஆரம்பித்துவிட்டாள். ஊதுகுழலுக்கு கால்கள் முளைத்தமாதிரி ஒரு குட்டி ஒன்று என் கால்களை நக்க நான் சுவற்றில் பூச்சி மாதிரி ஒட்டிக் கொண்டேன். அதன் பக்கத்திலேயே நூல்கண்டுக்கு நடுவகிடு எடுத்து வாரிவிட்ட மாதிரி இன்னோரு குட்டி நாய். பூதாகரமாய் ராமாயணத்தில் திரிசடையை பற்றி படித்திருக்கிறேன். இந்த சின்ன முழு சடை நாயின் முன்பகுதி எது என்று நான் கேட்டுவிட ஏதோ கிண்டல் செய்வதாக செல்லமாக கோபித்து கொண்டுவிட்டார்கள்.
ஒருவழியாக ஷாலு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உடனடியாக அனைவருக்கும் ஸ்வீட்ஸ் வழங்கப்பட்டது. ஏதோ ஒரு அரையடி ஸ்கேல் சைசுக்கு நாய் வரப்போகிறது என்று பார்த்தால் அரைகிலோ சதையை ஒரே கவ்வில் எடுக்கக் கூடியதைத்தான் எனக்கு ஷாலு என்று அறிமுகப்படுத்தினார்கள். நான் பார்த்த கோணம் தவறா என்று தெரியவில்லை. அது என்னை அந்நியனாய் பாவித்து உர் என்றது.
மேடையில் தலைவருக்கு மரியாதை அளிப்பது போல ஷாலுவுக்கு புத்தம் புதிய சீப்பால் வாரப்பட்டது. அலங்கார கழுத்துப்பட்டையென்ன, வாசனாதி திரவியங்களென்ன, பாண்டு வாத்தியங்கள் மட்டும்தான் குறைச்சல்.
காலனியில் கமலாவை பிடிக்கமுடியவில்லை. ஸ்வீட்சும் கூல்டிரிங்க்சும் தண்ணிபட்ட பாடாயின.
“கங்கிராசுலேஷன்ஸ். நாய் வாங்கியிருக்கீங்களாமே. எவ்வளவு ஆச்சு?”
நான் முழியாய் முழித்தபோதெல்லாம் ஆபத்பாந்தவியாய் கமலாதான் வந்தாள்.
என்ன ஜாதி? என்று ஒருவர் கேட்டுவிட 'பாமரேனியன்' என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்து என் அறியாமையை வெளிப்படுத்திவிட மறுபடியும் கமலாதான் வரவேண்டியிருந்தது.
“பமரேனியனா? என்ன உளர்றீங்க? (வழக்கம் போல என்று சேர்த்துக் கொள்ளவில்லை). இது அல்சேஷன் டாபர்மேன் கிராஸாக்கும்.”
'மம்மி. கிராஸ்னா என்ன?' என்று ஸ்வேதா கேட்டு வைக்க டாப்பிக்கை மாற்ற பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது.
காலையில் தினமும் கண்விழித்தால் கைதொழும் தேவதையம்மா என்று உருகும் உண்ணியின் பாடல் எனக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த ஷாலுதான். எனக்கு காலையில் நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைதான் நல்ல தூக்கம் வரும். அந்த அர்த்த ராத்திரி நித்திரையிலிருந்து என்னை மூஞ்சியில் தண்ணீர் ஊத்தாத குறையாக எழுப்பி என் கையில் ஷாலுவை கொடுத்துவிடுவாள்.
எனக்கோ தூக்க கலக்கம். இதுவோ கீழே படி இறங்குகிற வரைக்கும் கொஞ்சலோ கொஞ்சல். தாடை தொடை என்று அனைத்து பாகங்களையும் நக்கி என்னை கிட்ட தட்ட ஆங்கில எஸ், இசெட் வடிவங்களாக்கி பாடாய் படுத்தும். ரோட்டில் போனதும் அதை கன்ட்ரோல் செய்யவே முடியாது. புதிதாக ஆட்டோ ஓட்டினால் எப்படி ஒரு பக்கமாக இழுத்துச் செல்லுமோ அது மாதிரி போய் கொண்டேயிருக்கும். சங்கிலி என் மணிக்கட்டில் இழுபட்டு இழுபட்டு காய்த்து போய்விட்டது. வலக்கையில் சங்கிலியின் டென்ஷன் என்றால் இடக்கையில் ஒரு குச்சி. வேறென்ன? மற்ற தெரு நாய்களை விரட்ட. எங்கோ ஒரு தெரு நாய் தான் பாட்டுக்கு போய் கொண்டிருக்க ஷாலு அனாவசியமாக அதை வம்பிழுக்கும். அப்புறம் என் பாடு திண்டாட்டம். குச்சுபுடி டான்ஸ் மாதிரி என் குச்சிபிடி டான்ஸ் நடக்கும். மாஜிக் நிபுணன் மாதிரி என் வலதுகை சங்கிலியும் இடதுகை குச்சியும் தெருநாய் ஷாலு பொசிசனுக்கு ஏற்ப மாறி மாறி.... ஏக அவஸ்தை போங்கள்.
இதைவிட கொடுமை இன்னொன்று நடந்தது. ஷாலு தெரியாத்தனமாக ஒரு மெகா வில்லனை சீண்டிவிட ரிவர்ஸ் கியர் விழுந்துவிட்டது. ஷாலுவின் வால் உள் பக்கமாக போய்விட என் குச்சிபிடி நடனம் களறி பயிட்டு லெவலுக்கு போய்விட்டது. எதிரியின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்கமுடியாமல் ஷாலு சங்கிலியை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட நான் அந்த சங்கிலியை பொறுக்க வட இந்தியர்கள் செய்யும் நமஸ்காரம் மாதிரியும் நூலறுந்த பட்டத்தை பொறுக்கும் சிறுவன் மாதிரியும் சந்தி சிரிக்க ஓடியிருக்கிறேன். வெறும் கையோடு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னதில் மூவரும் நானே போய்விட்ட மாதிரி ஒப்பாரி வைக்க ஆட்படையை திரட்டிக் கொண்டு அரை மணி தேடுதலில் ஷாலு மறுபடி கிடைத்து கமலாவின் வயிற்றில் பாலை வார்த்தது. என் காஸ்ட்லியான பேன்ட் நாசமாய் போனது. கீழே விழுந்து முட்டியை சிராய்த்து கொண்டதற்கு டாக்டர் மற்றும் மருந்து செலவு மட்டும் 150 ரூபாய் ஆனது.
ஷாலு என் நிம்மதி மற்றும் சரீரத்தை மட்டும் பதம் பார்க்கவில்லை. பர்சையும் சேர்த்துதான். வீட்டில் நாய் வளர்ப்பை பற்றி விதவிதமான புஸ்தகங்கள். சஞ்சுவும் ஸ்வேதுவும் சாப்பிட்டார்களோ என்னவோ ஷாலுவுக்கு ராஜ உபசாரம். ராத்திரியில் அதுவும் எங்களோடு ஏசி ரூமில்தான் இருக்கும். நல்லவேளை பெட் மேலே இல்லை. ஒரு முறை நடுராத்திரியில் முழிப்பு வந்து தொலைக்க நான் இருட்டில் ஷாலுவின் கண்களை பார்த்து கிட்டதட்ட பேய் என்றே தீர்மானித்துவிட்டேன். முட்டை என்று எழுதினாலே குமட்டிக் கொண்டு வரும் கமலா வாட்ச்மேனிடம் நூறு ரூபாய் கொடுத்து ஷாலுவுக்கு மட்டன் கொடுக்கச் சொன்னாள். வெட்டினரி டாக்டரோடு ஷாலு சம்பந்தமாக விசாரித்ததற்கே போன் பில் 1000 ரூபாய் ஆகியிருக்கும். பார்ப்பதற்கு சின்ன கன்னுகுட்டி மாதிரி இருந்தாலும் ஷாலு இன்னமும் குழந்தைதான். வீட்டு ஹால் என்ன பெட்ரூம் என்ன என்று விவஸ்தையே இல்லாமல் எல்லா இடங்களிலும் நம்பர் ஒன் மற்றும் இரண்டு போய்விடும். அந்த நேரங்களில் கமலா சந்தேகத்துக்கு இடமில்லாமல் பிசியாக இருப்பாள். சமையல்கட்டில் தோசைக்கு 'சொய்ங்' என்று சத்தம் வந்தாலே ஷாலுவுக்கு மூக்கில் வியர்த்துவிடும். அதற்கு ரெண்டு போடுகிற வரை அதன் விதவிதமான சத்தங்கள் நிற்காது.
இப்படியாக இந்த சனி திசையிலிருந்து எப்படி விடுபடப்போகிறேன் என்று தினமும் புலம்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மத்தியான வேளையில் எனக்கு போன் வந்தது. சஞ்சுதான் பேசியது.
“அப்பா. ஷாலு அம்மாவை கடிச்சுடுத்து. கீழாத்து மாமி அம்மாவை சரண்யா நர்சிங் ஹோமுக்கு அழைச்சிண்டு போயிருக்கா. நீ நேரா அங்க வந்துடு. வரும் போது அம்மா ஏடிஎம்ல ஃபவ் தெளசண்ட் எடுத்துண்டு வரச் சொன்னா. உடனே வா.”
அலறியடித்துக் கொண்டு போனால் நர்சிங் ஹோம் வாசலில் ஸ்வேது கமலாவின் செல்லும் கையுமாக நின்று கொண்டிருந்தது.
“அப்பா. ஷாலு பேட். அம்மாவை பைட் பண்ணிடுத்து.”
கமலாவை பார்க்க பாவமாக இருந்தது. குதிகாலுக்கு சற்று மேலே நன்கு வெடுக்கென கடித்திருக்கிறது. சாதாரணமாகவே கொஞ்சம் ஸ்தூல சரீரம். வீக்கத்தில் இன்னும்... வேண்டாம். கடியைவிட போடப்போகிற ஊசிகளை பற்றிய பயம் அவளுக்கு. சாதாரண ஊசிக்கே கத்தி அமர்க்களம் செய்யும் குழந்தை குணம். மெதுவாக மூடு பார்த்து ஆரம்பித்தேன்.
“நான் சொல்லலாம்னுதான் இருந்தேன். நாயெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு. நீங்கள்ளாம் கேட்டாதானே.”
“ஆமாங்க. நீங்க சொல்லறதுதான் சரி.” இந்த சமயத்தில்தான் என் ஆசை மனைவி தேனாய் பாயும் ஒரு விஷயத்தை திருவாய் மலர்ந்தருளினாள்.
“நான் கென்னல் ஷாப்ல பேசிட்டேங்க. அவங்க ஷாலுவ திருப்பி எடுத்துக்கறதா சொல்லிட்டாங்க. இப்பவே கொண்டு விட்டுட்டு வாங்க.” கமலாவுக்கு எதை செய்தாலும் இன்னிக்கே இப்பவே இந்த நிமிடமே என்பதுதான்.
வீட்டுக்கு போனால் எதுவுமே நடக்காத மாதிரி ஷாலு ஒரே ஆர்பாட்டம். “ஷாலு நீ திரும்பி போகிற வேளை வந்துடுத்து.” நான் சங்கிலியை கழற்றினேன்.
ஷாலுவுக்கு ஒன்றும் புரிந்ததாக தெரியவில்லை. வழக்கம் போல வாக்கிங் என்று நினைத்துவிட்டது. காரில் போகும் போது ஏகத்துக்கு அட்டகாசம் செய்தது. ஆனால் எல்லாமே கொஞ்சலும் குதூகுலமும்தான்.
கென்னல் ஷாப்பில் விட்டபோது எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகி போய்விட்டது. நான் ஷாலுவை விட்டு விலகி வந்து காரில் ஏறி ஸ்டியரிங்க் பிடித்து திரும்பி பார்த்த போது அதன் கண்களில் வெளிபட்ட சினேகம் என்னை தடுமாற வைத்தது.
மறுபடியும் தப்பு செய்கிறோமோ? ஷாலு. நீ என்னை படுத்தியெடுத்தாலும் ஐ லவ்யூடா.
கமலாவின் வாத்தைகளை என்னால் மீற முடியவில்லை. கண்கள் கசிய, காரை நகர்த்தி, வேகமெடுத்தேன்.
Friday, 16 February 2007
பூதரேக்கலூ
பூதரேக்கலூ
2006 ஏப்ரல் 09 குங்குமம்
"ஸார். ஒரு சின்ன ரிக்வெஸ்ட். எனக்கு அரை கிலோ பூதரேக்கலூ வாங்கி வரமுடியுமா? ப்ளீஸ்..."
என் காபினுக்குள் வந்தவன் எங்கள் வங்கியின் சம்பள செக்ஷனில் இருப்பவன் என்பது மட்டும் தெரியும்.
எங்கள் வங்கியின் டிரைனிங் காலேஜ் ஹைதராபாதில் இருக்கிறது. யாராவது டிரைனிங் போய் கொண்டே இருப்பார்கள். அந்த சமயத்தில் அங்கிருந்து ஏதாவது வாங்கிக்கொண்டு வர சக நண்பர்கள் சொல்லுவது வழக்கம்.
பணமும் அந்த ஸ்வீட் கடை முகவரியும் கொடுத்தான்.
பூதரேக்கலூ என்பது ஹைதராபாத்தின் ஸ்பெஷல் ஸ்வீட். பார்ப்பதற்கு சுற்றி வைத்த பேப்பர் மாதிரி இருக்கும். அப்படியே சாப்பிட வேண்டும். அருமையாக இருக்கும்.
என்னோடு நன்கு பழக்கம் இல்லாத போதிலும் என்னுடைய உயர் பதவியையும் பொருட்படுத்தாது என்னை ஸ்வீட் வாங்கி வரச் சொன்ன அவன் தைரியத்தை என்னவென்று சொல்வது?
'சரி, ஒழியறான் போ. சம்பள செக்ஷனில் இருக்கிறான். நாளைக்கு ஏதாவது ஒரு வழியில் உபயோகமாக இருக்கும்' என்று யோசித்து விட்டு விட்டேன்.
ஆனால் அவனின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எரிச்சலை உண்டாக்கின. நான் கிளம்பும் அவசரத்தில் இருந்தபோது அசடு வழிய நின்று ஞாபகம் மூட்டினான்.
அதுக்கூட பரவாயில்லை. ஹைதாராபாத்தில் டிரைனிங் முக்கியமான கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் போது எனக்கு எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து வந்தது. ரிமைன்டர். எனது பொறுமை எல்லை தாண்டிவிட்டது.
சென்னை வந்ததும் மற்ற எல்லாருக்கும் அவரவர்கள் பொருட்களை ப்யூன் மூலம் கொடுத்தனுப்பினேன். வேண்டுமென்றே பூதரேக்கலூவை என் டிராயரில் வைத்து பூட்டிவிட்டு உயர் அதிகாரிகள் மீட்டிங்குக்கு போய்விட்டேன்.
ஐந்து மணிக்கு என் காபினுக்கு திரும்பி வந்த போது பழியாக காத்திருந்தான். பொரிந்து தள்ளிவிட்டேன்.
"ஸாரி சார். என் மீதுதான் தவறு. மன்னிக்கவும். ஆனால் ஒன்று. நீங்கள் நினைப்பது மாதிரி நானோ என் வீட்டு மக்களோ சாப்பிட்டு மகிழ இல்லை."
அவன் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு....
"ஸார். எனக்கு 90 வயது அப்பா இருக்கிறார். பெரிய குடும்பம். நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே செகந்திராபாதில்தான். அடுத்த வேளை சோற்றுக்குக்கூட என்ன வழி என்ற நிலமையில்தான் நாங்கள் வளர்ந்தோம். இப்போது வசதியாக இருக்கிறோம். என் அப்பாவுக்கு ஸ்வீட் சாதாரணமாகவே பிடிக்கும். அதுவும் பூதரேக்கலூ என்றால் கொள்ளை ப்ரியம். அவருக்கு அப்போது ஆசை மட்டும் இருந்தது. வசதி இல்லை. இப்போது கண் கூட தெரியவில்லை. ஆனாலும் அதை தடவி தடவி அவர் சாப்பிடுவதை பார்க்கும் போது...... "
"ஸாரிப்பா. நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லையா?"
"சொல்லியிருக்கலாம். அது என் தவறுதான். என் அப்பாவுக்கு நான் செய்கிறேன் பார் என்று பலரிடம் நான் பெருமை பட்டுக் கொள்ள விரும்பவில்லை. அவர் எங்களுக்கு செய்ததை ஒப்பிடும் போது நான் அவருக்கு செய்வது ஒன்றுமேயில்லை. ஸாரி சார்."
போய்விட்டான். ஆனால் அவன் நினைவுகள் இன்னும் பூதரேக்கலூவாகவே இருந்தது.
Thursday, 15 February 2007
ஒரு வழிப்பாதை
ஒரு வழிப் பாதை
2006 பிப்ரவரி 26 கல்கி
"ஃபேன் ஆஃப்."
ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன.
"லைட்ஸ் ஆன்."
பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன.
"ஸ்டார்ட்."
இயக்குனர் மிச்சமிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கினார். ப்ளெக்டர்களையும், கம்பி வலைகளையும் பிடித்திருந்தவர்களின் முகங்கள் சீரியஸ் ஆகின.
"ரோலிங்."
காமிராமென் மெல்லிய குரலில் இயக்குனர் காதில் விழும்படித் தெரிவிக்க, ஒருவன் கிளாப் கட்டையை காமிராவின் மூஞ்சிக்குக் காட்டிவிட்டு வேகமாக ஒதுங்கிக் கொண்டான்.
"ஆக்ஷன்".
ஏதோ ஸ்விட்சை தட்டிவிட்ட மாதிரி உடனடியாக அவள் அழ ஆரம்பித்தாள். அழுகை என்றால் சங்கிலித் தொடராய் அழுகை. அவள் எவ்வளவு நேரம் அழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இயக்குனர் சைகை செய்ய காத்திருந்தார்.
அந்த பெண் ஒரு ரவுண்டு அழுது முடித்து கர்ச்சீப்பை மூக்கின் மீது வைத்து 'டொர்' ரெனச் செய்யவும் இயக்குனரின் விரல் அசைந்தது.
வேலுச்சாமி தளர்வாக உள்ளே வந்து அந்த பெண்ணின் அருகில் நின்றார்.
"ஏம்மா அழுவுறீங்க. என்னைத் தெரியுதா?"
"கட். யோவ். பெரிசு. ப்ரியா டயலாக் முடிச்ச அப்பாலதாய்யா ஒங்க டயலாக். ஏன்யா உசிர வாங்குறீங்க?"
கருப்புத் துணிக்குள் தன் தலையை விட்டுக்கொண்டு மானிடரில் பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் துணியை விலக்கிக்கொண்டு கத்தினார்.
"ஸார். அவங்க டயலாக் சொல்ல விட்டுட்டாங்க. அதுனால நான் தொடங்கிட்டேன்."
"பேசாத. என்னவோச் சொல்ல வருது. நீ என்ன செய்யணுமோ அதைச் செய்தா போதும். புரிஞ்சுதுதா? காலைல பத்து மணிக்கு ஷாட்டு வச்சு இன்னும் ரெண்டு சீன் கூட முடியல்ல. எல்லாம் என் நேரம். பாலு, பெரிசுகிட்ட விவரமாச் சொல்லு. அடுத்த ஷாட்ல ஓகே ஆகல்ல, எனக்கு கெட்ட கோபம் வரும்."
'சாவு கிராக்கிங்க' என்று அவர் மெல்லிய குரலில் முடித்தாலும் வேலுச்சாமிக்கு தெளிவாகக் கேட்டது. ஒளிர்ந்த விளக்குகள் அணைந்து மின்விசிறிகள் தங்கள் பேரிரைச்சலைத் தொடர்ந்தன.
வேலுச்சாமிக்கு ஆத்திரமாக வந்தது. அவமானமாகவும் இருந்தது. அவரை இதுவரை யாரும் பெரிசு என்று தரக்குறைவாக அழைத்தது இல்லை. பார்ப்பதற்கு கொஞ்சம் ஏழ்மையின் பிரதிபலிப்பு இருப்பதால் ஆளாளுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிட்டது.
முதல் டேக்கில் கொஞ்சம் காமிராக் கோணத்திலிருந்து விலகி நின்றுவிட்டார். அதற்கு ஒரு கேலி இருந்தது. அப்புறம் தவறுதலாக கொஞ்சம் டயலாக் கூடிவிட, 'ஸ்க்ரிப்டில் உள்ளதை மட்டும் சொன்னால் போதும்' என்று அறிவுரை சூடாய் வந்தது. ஆனால் இரண்டாவது டேக்கில் அந்த பெண் சொதப்பியபோதும் அடுத்தடுத்த ஷாட்டுகளில் டயலாக்குகளை தன் இஷ்டத்துக்கு மாற்றியமைத்த போதும் யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?
வேலுச்சாமியும் ஒரு காலத்தில் பிரபலம்தான். ஆனால் அறுபதுகளில் உச்சத்தில் இருந்த யதார்த்தம் பொன்னுசாமி பாய்ஸ் கம்பனியை பற்றி இங்கு ஒருவருக்கும் தெரியவில்லை. "அப்படியா. இப்ப என்ன சீரியல் செய்யுறீங்க".
நாடகங்கள் ஓய்ந்து சென்னை சபாக்களில் சுருண்டபோது ஏதோ அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தார். பிறகு அதையும் குறைத்துக் கொண்டு தான் உண்டு நங்கநல்லூர் ஆஞ்சனேயர் உண்டு என்று இருந்துவிட்டார். இப்படியே பல வருடங்கள் போய்விட்டன.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்ற நிலை வந்த போதுதான் எதிர் பிளாட் சிவா ஐடியா கொடுத்தான். "தாத்தா. நீங்க ஏன் சீரியல்ல நடிக்க முயற்சி செய்யக்கூடாது? உங்களுக்குத்தான் டிராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதே". அவன் அப்படியும் இப்படியுமாக சில சீரியல்களில் தலை காட்டுவான். பல டிவி கம்பனிகளில் ஏறி இறங்கினார். அதன் பலன் இன்று.
எட்டு மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்று சொன்னதால் மூன்று பஸ் பிடித்து வேர்க்க விறுவிறுக்க அங்கே போனால் ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறியேயில்லை. ஒன்பது மணிக்குத்தான் ஒவ்வொருவராக வந்தார்கள்.
மணி பன்னிரெண்டான போதுதான் அவரை அழைத்து டயலாக் சொன்னார்கள். மேக்கப்புக்காக இருந்த ஒரே சேரில் தடியான ஒரு பெண் அமர்ந்திருந்ததால் அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார வைத்து இரண்டே நிமிடத்தில் மேக்கப் போடப்பட்டது. இந்த மூஞ்சிக்கு இது போதும் என்ற மாதிரி இருந்தது. இதிலென்ன தப்பு என்று மேலோட்டமாக தோன்றினாலும் எங்கோ இடிப்பதாகவே அடிமனதில் பட்டது.
"வேலுமணி சார். இங்க வாங்க. உங்க டயலாக்கை மறுபடி சொல்லுங்க." கிளிப் பேடு அஸிஸ்டென்ட் அழைத்தான்.
"தம்பி.. என் பேரு வேலுச்சாமி.. வேலுமணி இல்லே."
"ம். அதனால் என்ன. வேலுங்கறது சரிதானே."
"அதெப்படி தம்பி சரியாகும். உங்களை பாலுன்னு கூப்பிடறாங்க. அதை மாத்தி கோபாலுன்னு கூப்பிட முடியுமா?"
"ஏங்க நீங்க நடிக்க வந்தீங்களா, இல்லே வம்பு செய்ய வந்தீங்களா?"
எதேச்சையாக அருகில் சென்ற இன்னொரு அஸிஸ்டென்ட், "என்ன பெரிசு இன்டஸ்ட்ரிக்கு புதுசா, அதான். டைரக்டரான்ட பதிலுக்கு பதில் பேசற. சொல்லறத மட்டும் கேளுய்யா. அவரு எவ்வளோ பெரிய டைரக்டரு தெரியுமா?"
"சார். வேலுச்சாமி ஸார். உங்க விளக்க உரையெல்லாம் வேண்டாம். புரியுதா. எங்களுக்கு கேக்க பொறுமையில்ல. மூன்று மானிடர் ஷாட்ஸ் முடிந்து இது ஐந்தாவது டேக். யாருக்குதான் கோவம் வராது,"
நல்லவேளையாக அடுத்த ஷாட் ஓக்கே ஆனது. அது கூட கொஞ்சம் அரை திருப்தி, முக்கால் திருப்தியோடு சொன்னமாதிரி இருந்தது. அதன் பிறகு பிட்டு பிட்டாக சில சீன்கள் வந்தன.
போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
பணம் செட்டில் செய்யக்கூடிய நபரை தேடிக் கண்டுபிடிப்பதில் அரை மணியும் ஒரு கிலோ மீட்டர் நடையும் ஆனது.
"பேமென்டா. உங்க பேமென்டை உங்க ஏஜென்டுகிட்டத்தான் கேட்கனும். என்கிட்டே கேட்டா?"
"மிஸ்டர். நான் டயலாக் ஆர்டிஸ்ட். உங்க குமார் சார் சொல்லி வந்திருக்கேன்."
"அப்படியா. அதுக்கு எதுக்கு சார் சூடாகிறீங்க,"
"நீங்களா ஒரு கற்பனை செஞ்சுக்கிட்டு பேசினா நான் என்ன செய்ய முடியும்?"
"வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே. சரி.. சரி... டப்பிங் சமயத்துல வாங்கிக்க."
சிவா தெளிவாக சொல்லியிருந்தான். வேலுச்சாமி விடவில்லை. "இல்லை சார். எனக்கு செட்டில் செஞ்சுடுங்க. எனக்கு பல செலவுகள் இருக்கு."
வேலுச்சாமி அடித்து பிடித்து ஒரு மணி நேரம் காத்திருந்து பணம் வாங்கிவிட்டார். விட்டால் போதும் என்று வீட்டுக்கு வந்து விழுந்த போது மணி ஆறு ஆகிவிட்டது.
இரவு ஒன்பது மணிவாக்கில் சிவா வந்தான். "என்ன தாத்தா. எப்படி இருந்திச்சு முதல் நாள் அனுபவம்?"
"அத ஏன் கேக்கிற போ. பாடா படுத்திட்டாங்க. மரியாதைன்னா என்ன விலைன்னு கேக்கறாங்க."
"அப்படியா. பொதுவாவே என்ன வாழுதாம்? அது சரி... எந்த கம்பனிக்கு போனீங்க."
வேலுச்சாமி சொன்னார்.
"ஓ. அதுவா. பணம் கொடுத்தாங்களா? இழுத்தடிச்சிருப்பாங்களே,"
"கொஞ்சம் முரண்டு புடிச்சாங்க. நான் விடல. வாங்கிட்டேன்."
"நல்லது. அந்த கம்பனியோட சீரியல் எல்லாம் இப்ப டவுன். அதான்... அப்பறம் தாத்தா.... நீங்க நினைக்கற மாதிரி எல்லா கம்பனிகளும் இப்படி இல்லே".
"எனக்கென்னவோ சரியாப்படல சிவா. இனிமே வேண்டாம்னு மனசுக்கு படுது. நாலு காசு சம்பாரிச்சாலும் மரியாதை முக்கியமில்லையா, தலையில குட்டி போடற சாப்பாடு வேண்டாம்." வேலுச்சாமி வேதனையோடு சொன்னார்.
"அட போங்க நீங்க. போகப் போக பழகிடும். இண்டஸ்ட்ரில இதெல்லாம் சகஜம்."
"என் டிராமா அனுபவத்துல இதுமாதிரி அனுபவிச்சதில்லே." வேலுச்சாமியின் கண்களில் நீர் முட்டிவிட்டது.
"தாத்தா. அது அந்தக் காலம். இப்ப எல்லாமே மாறிப்போச்சு. எல்லா எடத்திலும் மரியாதை சரியா சமமா கிடைப்பதில்லே. வாழ்வா சாவான்னு இருக்கும்போது நீதியாவது நியாயமாவது, இப்ப மெகா சீரியல்னு ஞாயிற்று கிழமைகூட விடாம ஷூட்டிங் நடத்தறாங்க. காலைல ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும். அது தவிர எடிட்டிங், மிக்சிங், டப்பிங்னு ஏகப்பட்ட வேல. இத்தனைக்கும் மத்தியில அவங்களுக்கு கொடுக்கற சம்பளம் கம்மி. ஸ்டார்களுக்குத்தான் மரியாதை. பணம் வரலன்னா ஸ்பாட்டுக்கு வர மாட்டாங்க. டப்பிங்கை இழுத்தடிப்பாங்க. அதுனால ப்ரொடக்ஷன் ஆசாமிங்க நம்ம மாதிரி ஆசாமிகள் கிட்டத்தான் மிச்சம் புடிக்கறாங்க."
வேலுச்சாமிக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. வெகுநேரம் தூக்கமில்லை. 'ஏய் பெரிசு' என்று இப்பவும் யாரோ கூப்பிடுவது போல இருந்தது.
அடுத்த சில நாட்களில் மறந்தே போய்விட்டார். அதன் பிறகு யாரும் நடிக்க கூப்பிடவும் இல்லை.
ஒரு மாதம் கழித்து திடீரென்று அவர் நடித்த சீன் வந்ததும் சிவா ஓடிவந்து கூப்பிட்டான். எத்தனையோ நாடகங்களில் நடித்திருந்தாலும் மின்னும் திரையில் தன் பிம்பத்தை பார்த்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவருக்கு பதிலாக யாரோ டப்பிங் கொடுத்திருந்தார்கள்.
வேலுச்சாமி அந்த காலனியின் திடீர் பிரபலம் ஆகிவிட்டார். சீரியல் முடிந்ததுமே ஏகப்பட்ட போன் கால்கள். நேரில் சந்திக்க பல பேர் வந்து விட்டனர்.
விசாரிப்புகள் மறுநாளும் தொடர்ந்தன. பால் வாங்கும் போது பார்த்தவர்கள் விசாரித்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டில் சூழ்ந்து கொண்டார்கள். ஸ்கூல் போகும் குழந்தைகள் கூட 'ஹேய் டிவி சீரியல் தாத்தா' என்று சொல்லிவிட்டு போனார்கள். ஒரு சிலர் வேலுச்சாமியிடமே சான்ஸ் கேட்டார்கள்.
"ஸார் ரஜினி காந்த் படம் ஒண்ணு புதுசா வரப்போவுதாம். போய் போட்டோ கொடுங்க. அதுல உங்களுக்கு சான்ஸ் மட்டும் கிடைச்சுது, நீங்க எங்கயோ போயிடுவீங்க."
அன்று மதியமே இன்னோரு கம்பனியிலிருந்து அவருக்கு போன் வந்தது, சிவா வீட்டு நம்பரில்.
"ஒரு நாள் ஷூட்டிங். நானூறு ரூபாய். பயணப்படி கிடையாது. வரீங்களா?" வேலுச்சாமி யோசிக்கத் தொடங்கினார்.
"என்ன? சீக்கிரம் சொல்லுங்க."
"சரி. வர்ரேன்."
தான் ஏன் அப்படிச் சொன்னோம் என்பது அவர் புத்திக்கு எட்டவேயில்லை.
Wednesday, 14 February 2007
செல்லாக் காசு
செல்லாக் காசு
2001 ஜூன் 24 கல்கி
தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாலை வாக்கிங்கை முடித்தோமா வீட்டுக்குள் சென்று அடைந்தோமா என்ற டைப்தான். ஆனால் கூட்டத்திலிருந்து வந்த சத்தமும் மக்களின் பரபரப்பும் அவரை சலனமடைய செய்தன. ஏழரை மணிக்குத்தான் டி.வி. சீரியல். அது வரை என்ன செய்ய? கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்தால் என்ன?
கூட்டம் அடர்த்தியாக இருந்தது. இலேசில் உள்ளே நுழைய முடியவில்லை. கொஞ்சம் இங்கே அங்கே சுற்றி இண்டு இடுக்கை ஆராய்ந்து ஒரு வழியாக உள்ளே நுழைந்துவிட்டார்.
எட்டிப் பார்த்ததில்...
ஒரு சோனிக் கிழவன் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தான். மத்தியில் ஒரு அழுக்குத் துணி விரிந்து கிடக்க, அங்கும் இங்குமாக சில்லறைகள். ஒரு பெண் தண்ணீர்க் குடம் ஒன்றை வட்டத்துக்குள் வைத்தாள்.
இரண்டு முறை சாதாரணமாகச் சுற்றி வந்த கிழவன் திடீரென குனிந்து தண்ணீர் குடத்தை எடுத்து தலை மீது வைத்துக் கொண்டான். கைகளை விட்டுவிட்டான். கூட்டத்தினர் கைதட்டி ஆர்பரிக்க சில்லறைகள் விழுந்த வண்ணம் இருந்தன.
சிவராமன் போய் விடலாமா என்று யோசித்தார். வித்தையில் என்ன வேடிக்கை? மக்கள் என்னவோ ஆர்பரித்து மகிழ்ந்தாலும் அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிழவனுக்கு அறுபது வயசு இருக்கலாம். வித்தை காட்டுகிற வயசா இது? எழுபத்து மூன்று வயதில் இரண்டு முறை இரண்டாவது மாடி ஏறவே மூச்சு வாங்குகிறது. கிழவன் இந்த வயதில் தன்னை இப்படி வருத்திக் கொண்டு வீதி வீதியாகப் போய் வித்தை காட்டி பிழைக்க வேண்டிய அளவுக்கு என்ன கஷ்டமோ?
மனசு பொறுக்கவில்லை. வெளியே வந்து விட்டார். விடுவிடுவென நடையை போட்டார். ஏன் போய் பார்த்தோம் என்றாகிவிட்டது.
அது சரி, கிழவன் அவன் பிழைப்புக்காக தன்னை வருத்திக் கொள்கிறான். இதில் தான் வருத்தப்பட என்ன இருக்கிறது? கிழவனில் தன்னைப் பொறுத்திப் பார்த்ததில் வந்த விளைவோ?
சிவராமன் ரிடையர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. ரிடயர் ஆன போது பிராவிடண்ட் ஃபண்டு பணம்தான் கிடைத்தது. பென்ஷன் இல்லை. கிராஜுவிட்டி எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் கொடுத்தார்கள். நல்லவேளையாக ரிடையர் ஆவதற்கு முன்பே மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். அடித்து பிடித்து என்பதினாயிரத்தில் அறுநூறு சதுர அடியில் இரண்டாவது மாடியில் தண்ணீருக்கு ஆலாய் பறக்கும் மேற்கு மாம்பலத்தில் பிளாட்தான் வாங்க முடிந்தது. அதை ஆத்மா பெயரில் வாங்கியது எவ்வளவு பிசகு என்பதை பிறகுதான் உணரமுடிந்தது.
ஆத்மா ஒரே மகன். இன்னமும் நிலையான வேலையில்லை. நாற்பது வயதிலும் கம்பனிக்கு கம்பனி மாறிக் கொண்டிருக்கிறான்.
பையன் துரதிர்ஷ்டம் என்றால் வாய்த்த மருமகள் அதிர்ஷ்டம். சாந்தியின் சப்போர்ட் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இந்த கிழவன் மாதிரி வீதிக்கு வந்திருப்பாரோ என்னவோ?
பி. எஃப். பணத்தின் மிச்சத்திலிருந்து சில ஆயிரங்களுக்கு தன் மூன்று பெண்களுக்கும் கிரைண்டர், பீரோ மாதிரி சிலவற்றை வாங்கிக் கொடுத்தார். அது ஆத்மாவுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உரசல்கள் அதிகமாகி ஒரு வழியாக இருவருக்கும் பேச்சுவார்த்தை நின்றே போனது. அதன் பிறகு எல்லாமே சாந்தி மூலமாகத்தான்.
ரிடையர் ஆனதில் கசண்டு போல மிச்சமிருந்த இருபதினாயிரம் ரூபாய்க்கும் பிறகு கேடு வந்தது. சாந்தியின் இரண்டாவது பிரசவத்தில் ஏகப்பட்ட சிக்கல். என்ன ஏது என்றே புரியாமலே தொடர்ச்சியாய் சில ஆப்பரேஷன்கள். சாந்தியை வீட்டுக்கு அழைத்து வர தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்தால் ஒழிய வேறு வழியில்லை என்ற நிலைமை. கொடுத்துவிட்டார்.
ஆத்மா வீராப்பாக ஆறே மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவதாகச் சொன்னான். தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்.
ஆயிற்று. மூன்று வருடங்கள்.
சிவராமன் கையில் சுத்தமாக சல்லி காசில்லை. புகையிலைக்கும் புளிப்பு மிட்டய்க்கும் சாந்தி மூலமாக கேட்டு பெற வேண்டியிருக்கிறது. சாந்தி அவ்வப்போது கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாலும் ஆத்மா கணக்கு எழுதுகிறேன் பேர்வழி என்று நோகடிப்பான்.
ஒரு முறை பேரன் ராகவ் மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று தாத்தாவை நச்சரிக்க 'அப்பாவிடமிருந்து என் பணம் வரும். அதில் வாங்கித் தருகிறேன்' என்று சாந்தி மூலமாக சொன்னதற்கு, 'ராகவுக்கு எப்போது சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்று எனக்கு தெரியும். அப்பாவை வம்பு செய்யாமல் சும்மாயிருக்கச் சொல்' என்று அவன் கத்த என் பணம் உன் பணம் என்று வீடே ரகளையானது.
சிவராமன் செல்லாக்காசாய் போய்விட்டார்.
சரி. இங்கே இருந்தால்தான் மனஸ்தாபம் என்று சில நாட்களுக்கு தன் பெண்களை பார்க்க சென்றால், 'எனக்கு செலவு வைக்க வேண்டுமென்றே அப்பா அடிக்கடி அக்காக்களை பார்க்க போய்விடுகிறாரா?' என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்துவான். இத்தனைக்கும் மூன்று டஜன் வாழைப்பழங்களும் சில பிஸ்கட்டுகளும்தான்.
ஆத்மா ஒன்றை புரிந்துகொள்வில்லை. தான் பணத்தைத் திருப்பி கேட்பது ஏதோ தொடர்ச்சியாகச் செலவு செய்வதற்கு என நினைத்துக் கொண்டிருக்கிறான். தன்னிடம் பணம் இருப்பது ஒரு பாதுகாப்புக்கும் ஒரு மரியாதைக்கும் என்பதை எப்படி புரிய வைப்பது? சாந்தியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று. அவளுக்கு தன்னால்தான் அப்பாவுக்கு அவஸ்தை என்ற சுயப்பச்சாதாபம் வேறு.
போன வாரம் ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டான். அவனுக்கு ஆபீஸில் ஏகப்பட்ட டென்ஷனாம். தன்னைத்தான் சரியாக படிக்க வைக்க வில்லை. நல்ல வேளையில் சேர்த்து விடவில்லை. தன் அக்காக்களை கவனித்துக் கொண்ட மாதிரி தன்னைக் கவனிக்கவில்லை. இனி மேல்கொண்டாவது தனக்கு மன கஷ்டங்களை கொடுக்காமல் சும்மயிருக்கச் சொல் என்று வழக்கம் போல சாந்தி மூலமாகச் சொல்லிவிட்டான்.
பாவம். அந்த பெண். ஸ்விட்ச் போட்ட மாதிரி அழுகிறது. எங்கே இந்த பிரச்சனையால் மீண்டும் ஏதாவது அவள் உடம்புக்கு வந்துவிடக் கூடாதே என்று முற்று புள்ளி வைத்து விட்டார். செல்லாக் காசாய் சொச்ச காலத்தை தள்ள வேண்டும் என்பது தலையெழுத்து என்பதை மனசளவில் ஏற்றுக் கொண்டு விட்டார். எல்லாவற்றுக்கும் மரணம்தான் சரியான தீர்வு. ஆனால் அது வர மாட்டேன் என்கிறதே.
வாசலில் இருந்த வாட்ச்மேன் சாந்தி வெளியே போயிருப்பதாகச் சொன்னான். சாவி வாங்கிக் கொண்டு தானே கதவை திறந்து தனியாக வீட்டில் இருக்க அலுப்பாக இருந்தது. நேரம்தான் இருக்கிறதே. அந்த கிழவனை மீண்டும் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்தாலென்ன? சைக்கிள் கூத்தும் இந்நேரம் முடிந்திருக்கும்.
எதிர்பார்த்த மாதிரியே கிழவன் சில்லறை காசுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். சைக்கிள் ஓரமாக சாத்தப்பட்டு இருந்தது. அதுவும் அவனை மாதிரியே நோஞ்சானாய் இருந்தது.
அப்போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. எல்லோரும் சில்லறை போட்டார்களே, தான் ஒன்றுமே அவனுக்கு கொடுக்கவில்லையே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு ஒன்றும் கொடுக்காமல் போவது பிசகல்லவா?
சட்டைப் பையை துழாவினார். ஒரே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது. தனக்கு பாதுகாப்பும் மரியாதையும்தான் பிரச்சனை என்றால் இவனுக்கு சோறு கிடைப்பதே பெரிய பிரச்சனை.
எதோ ஒரு வேகத்தில் ஐம்பது ரூபாயை அவன் அழுக்கு துணியில் போட்டார். குனிந்து சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தவன் ஐம்பது ரூபாய்த் தாளை பார்த்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவன் பார்வையில் மிரட்சி இருந்தது.
"ஐயா ரொம்ப நன்றிங்க".
"ஏம்பா. இந்த வயசுல சைக்கிள் மிதிச்சு வித்தை காட்டறயே. கஷ்டமாயில்லை? உடம்பு தாங்குமா?"
"என்னங்க செய்யறது. மூனு பசங்க இருக்காங்க. இருந்தும் சரியில்லை. ஒரே ஒரு பொட்டை புள்ளே இருக்குது. அதுவும் சீக்காளியா போக சொல்ல அவ வூட்டுக்காரன் வுட்டுட்டு போயிட்டான். கொஞ்ச நாள் பிச்சை எடுத்துப் பார்த்தேன். ரொம்ப அவமானமா இருந்திச்சு. சரி, எனக்கு தெரிஞ்சது இது ஒண்ணுதான். ஏதோ தெம்பு இருக்கங்காட்டிப் பொழப்பு ஓடுது. அப்பால... அவன் பார்த்துப்பான்."
கிழவன் மேலே காட்டினான்.
"சரிப்பா. ஒடம்பு வலுவுக்கேத்த வேல செஞ்சு பொழச்சுக்கோ. வருமானம் கம்மியா இருந்தாக்கூட பரவாயில்ல. ஏடாகூடமா நாம ஏதாவது செஞ்சுட்டு மத்தவங்களுக்கு பாரமா போயிடக் கூடாதில்லையா? அந்த ஆதங்கத்துல சொல்லறேன்."
"ஒங்க நல்ல சொல்லுக்கு எனக்கு அது மாதிரி எதுவும் வராதுங்க. ரொம்ப நன்றிங்க."
சிவராமனுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. மனசு ஒப்பிக் கொடுக்கும் போதுதான் எவ்வளவு மகிழ்ச்சி. திரும்பி பாதி தூரம் வந்தவருக்கு சொரேலென்றது. சாயந்திரம்தான் சாந்தி அந்த ஐம்பது ரூபாயை கொடுத்தாள். ராகவுக்கு நாளை ஸ்கூல் திறக்கிறது. பிரட்டும் பட்டரும் வாங்கி விட்டு மிச்ச பணத்தை கைசெலவுக்கு வைத்துக் கொள்ள சொல்லியிருந்தாள்.
ஐயைய்யோ. இப்போது என்ன செய்ய? சாந்தியிடம் போய் விஷயத்தைச் சொல்லி மேலும் இருபது ரூபாய் கேட்பதா? கேட்டால் என்ன நினைப்பாள்?
ஆத்மாவை எப்படிச் சமாளிப்பது? நானே ஒரு செல்லாக் காசு. இதில் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாயிற்று.
செய்வதறியாமல் தவித்தார். கிழவனிடம் மீண்டும் போய் இருபது ரூபாயை மட்டும் கேட்டால் என்ன? ஆனால் அதை உடனே நிராகரித்தார். சே! தானம் கொடுத்தைத் திருப்பிக் கேட்பது கேவலம். வேண்டாம். சாந்தியிடமே.... சாந்தி வேறு வீட்டில் இல்லையே.
இரண்டு தப்படி முன்னே போவதும், திரும்பி வருவதுமாக திண்டாடினார். கடைசியில் கிழவனிடம் வெட்கத்தை விட்டுக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துவிட்டார்.
கிழவன் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தான். தயங்கி, தயங்கி, அவன் அருகில் போய் தலையை சொறிந்தவாறே நின்றார். எப்படி கேட்பது? பேச்சு வரவில்லை.
"என்னங்கய்யா"
"அது வந்துப்பா. எங்கிட்ட சில்லறை இல்லே. உன் கஷ்டத்தைப் பார்த்த போது சில்லறை மாத்தறது பெரிசாப் படலை. அதான் ஐம்பது ரூபாயையும் அப்படியே போட்டுட்டேன். அப்பறந்தான் என் மண்டைக்கு ஒறைச்சது. இருபது ரூபாய்க்கு இப்போ உடனடியா செலவு இருக்கு. அதனால நீ முப்பது ரூபா எடுத்தின்டு"
"என்னாங்க சாமி. என்ணெண்வோ பேசிக்கிட்டு, உங்களோட பெரிய மனசே போதுங்க. இந்தாங்க இருபது ரூபா."
கிழவன் கொடுத்த அந்த இருபது ரூபாயை லட்சரூபாய் மாதிரி பத்திரமாக பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு மிகுந்த தளர்வோடு திரும்பினார்.
சே! என்ன முட்டாள்தனம். செல்லாக் காசுக்கு தான தர்மம் ஒரு கேடா?
கொஞ்ச தூரம்கூட தாண்டியிருக்கமாட்டார். பின்னாலிருந்து அவர் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பியதில், கிழவன் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான்.
"ஐயா, மன்னிச்சுக்கணும். என் பேச்சுக்கு கோவிச்சுக்க கூடாது. எனக்குள்ள எவ்வளவு துக்கமிருக்குதுன்னு நீங்க எப்படி உணர்ந்தீங்களோ அந்த மாதிரி உங்களுக்குள்ளேயும் ஏதோ நோவு இருக்குதுன்னு எனக்கு தோணுதுங்கய்யா. என்னோட கஷ்டத்தை விட்டுத் தள்ளுங்க. அது என்னோட விதி. என் கூடவே பொறந்தது. அதை நான்தான் கவனிக்கோணும். உங்களை கஷ்டப்படுதறது ரொம்ப பாவங்க. அதனால தயவு செஞ்சி தப்பா எடுத்துக்காம இந்த முப்பது ரூபாயையும் வாங்கிக்குங்க. உங்களை காட்டியும் எனக்கு கொஞ்சம் வலு இருக்குது. உங்க நல்ல மனசுக்கு நீங்க சுகமா இருந்தா அது போதுங்க. இந்தாங்க."
சட்டைப்பையில் மூன்று பத்து ரூபாய் தாள்களை திணித்து விட்டு சைக்கிளை மிதித்து போய்விட்டான் கிழவன்.
Tuesday, 13 February 2007
எல்லாம் ஒரு பேச்சுக்கு
எல்லாம் ஒரு பேச்சுக்கு
1998 ஆகஸ்ட் 06 சாவி
அழகிப் போட்டி தொடங்கியது.
மெல்லிய இருட்டில் படு உயரத்திலிருந்து ஒளிக் கம்பாய் விழும் ஸ்பாட் லைட்டுகள் கூடவே வர ஒவ்வொரு அழகியும் அட்டகாசமாக வந்து அறிமுகமாகி வரிசையாய் புன்சிரிப்புடன் நின்றனர்.
அதில் நான்காவதாக வந்து மிகுந்த பரப்பரப்பை உண்டாக்கியவள் மிஸ் திவ்யா பார்த்தசாரதி. சென்னையைச் சேர்ந்தவள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் சென்னை அழகியாக தேர்வு பெற்றவள்.
அடுத்தடுத்த ரவுண்டுகளிலும் திவ்யா பாயிண்டுகளில் முன்னேறிக் கொண்டிருந்தாள்.
குறிப்பாக அந்த ஹெரிடேஜ் ரவுண்டில் வெவ்வேறு மாநில உடையலங்காரத்தில் மற்ற அழகிகள் வந்து அசத்தும் போது திவ்யா மட்டும் ஒரு வித்தியாசமான காஸ்ட்யூமில் தேசியக் கொடி மூவர்ணத்தில் எல்லா கலாசாரங்களையும் ஒருங்கிணைத்து வரவும் அரங்கமே அதிர்ந்தது.
பாயிண்டுகளில் திவ்யா எங்கோ போய்விட்டாள்.
கடைசி ரவுண்டு.
ஜூரிகள் கேள்விகளைக் கணைகளாகத் தொடுக்க உடனடியாக பதில் சொல்லும் ரவண்டு.
திவ்யாவின் முறை வந்தது.
"மிஸ் திவ்யா. நீங்கள் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். உங்களுக்கு இந்தியாவின் வறுமையை பற்றித் தெரியுமா? வறுமையை ஒழிக்க உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?"
ஒரு ரிடையர்டு ஐ.பி.எஸ். கேட்டது.
திவ்யா ஒரு நொடி ஆடிப்போய்விட்டாள்.
ஆனாலும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு "நான் பசித்த வயிறுகளை பாக்காதவள் இல்லை. உணராதவள் இல்லை. எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழிகளின் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு எனது பாக்கெட் மணியை மிச்சம் பிடித்து அவர்களின் ஸ்கூல் பீஸ் கட்ட உதவியிருக்கிறேன். இதை நான் பெருமைக்காக இங்கே சொல்ல வரவில்லை. இந்த பிளவுபட்ட சமுதாயத்திலே எனது பொறுப்பான பங்கை நிறைவேற்றியிருக்கிறேன் என்பதையே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வறுமையை ஒழிக்க ஒரே வழி, வசதி படைத்தவர்கள் தங்களுடைய அனாவசிய மற்றும் ஆடம்பரச் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு அதை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினாலே போதும் இந்தியாவில் ஏழ்மை என்பது இனிமேல் இராது. மிகச் சாதாரணமான இந்தக் கொள்கையைப் பிரபலப்படுத்த என் உயிர் மூச்சு உள்ள வரை பாடுபடுவேன்."
சந்தேகமே இல்லாமல் திவ்யா இந்திய அழகி ஆனாள்.
"திவ்யா. சிம்ப்ளி சூப்பர்ப். உனக்கு கேட்கப்பட்ட கேள்விதான் மிக கஷ்டமானது. அதற்கு என்னமாய் பதிலளித்தாய். வெல் டன் திவ்யா. ஓ! அந்த காஸ்ட்யூம். கிரேட். ஒன்டர்புல். எங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டாய். கங்கிராட்ஸ்".
திவ்யாவின் உயிர்த் தோழி ரம்யா வாழ்த்தினாள்.
"அதை ஏன் கேட்கிறாய், போ. என் காஸ்ட்யூம் டிசைனர் ரவி மேனன்தான் செய்தான். இந்த காஸ்ட்யூமுக்கு மட்டுமே பத்தாயிரம் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்த பிறகு பார்த்தால் சாஃப்ரன் கலருக்கு பதில் ரெட் வைத்திருந்தான் மடையன். நான் ரொம்ப டென்ஷனாகி விட்டேன். அதை அப்படியே கடாசிவிட்டு புதிதாக ஒன்று செய்யச் சொன்னேன். இரண்டே மணி நேரத்தில் தயாரானது. என்ன, பில் டபுளானது".
"ஏய் ஏதோ செலவு மிச்சம் செய்து வறுமை ஒழிப்பு அது இதுன்னு பேசின மாதிரி இருந்துச்சு".
"ஓ! அதுவா? ஏதோ ஒரு பேச்சுக்காக சொன்னால் அதைப் போய் சீரியஸாக எடுத்துக்கிட்டு. அதைவிடு. சென்னை வந்ததும் தாஜ்ல கிராண்ட் பார்ட்டி வைச்சிருக்கேன். அவசியம் வந்திடு. என்ன?"
Monday, 12 February 2007
சின்னு
சின்னு
1997 டிசம்பர் 12 குங்குமம்
"குட்டிம்மா... இங்க பாரு... அம்மா என்ன வாங்கிண்டு வந்திருக்கா பாரு."
டைனிங் டேபிளுக்கு அடியில் சப்பையாய்ப் போன பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் ஒரே வாரிசான சின்னு என்கிற குட்டிப் பெண், சரோவின் குரல் கேட்டு தத்தக்கா பித்தக்கா என்று ஓடிவந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டது.
சரோவுக்கு சாதாரணமாகவே ஆர்ப்பாட்டம் அதிகம். குழந்தைக்காக டிரெஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தால் கேட்கவா வேண்டும்!
அட்டைப் பெட்டியை பிரித்தாள். உள்ளே...
நீல நிறத்தில் ஜீன்ஸ் சட்டை! பாண்ட்!. இத்துனூண்டு குழந்தைக்கு இந்த சைஸில் எங்குதான் இவளுக்குக் கிடைக்கிறதோ?
"ஏங்க. சின்னுவுக்கு ஒரு டிரெஸ் போட்டு வைக்கக் கூடாது? ஜட்டியோட அலைசிண்டு இருக்கே".
சரோ என் எண்ணத்தைக் கலைத்தாள். சரோவுக்கு குழந்தைக்கு விதவிதமாக டிரஸ் போட்டு வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் நான் அதற்கு நேர் எதிர். எங்களை மாதிரியே எங்கள் சின்னுவும் ஸ்தூல சரீரம். மெல்லிசாக சட்டை மாதிரி போட்டால்கூட தொப்பலாய் வியர்த்துவிடும். எனவே ஃப்ரீயாக விட்டுவிடுவேன். ஆனால் சரோ பாம்பாய் சீறுவாள்.
பரபரவென நீல ஜீன்ஸ் போட்டுவிட்டாள். கஷ்டப்பட்டு இடுப்பு பித்தானை உள்ளே நுழைத்து ஜிப்பை ஏற்றினாள்.
குழந்தை பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தது.
"சரோ. இதுக்கு அடுத்த சைஸ் கிடைக்கலையா. ரொம்ப டைட்டா இருக்கே."
சரோ சுள்ளென நிமிர்ந்தாள். சரிந்த மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் கோபம் கொப்பளிக்க,
"ஜீன்ஸ் பாண்ட்னா டைட்டாதான் போட்டுக்கணும். எதிர்த்தாத்து ஆராவமுது ஐயங்கார் போட்டுக்கற மாதிரி இழுத்துக் கட்டிண்டா போட்டுக்கிறது. உங்களுக்கு ரசனையே கிடையாது. சொன்னாலும் புரியாது".
சரோவின் தீர்ப்புக்கு அப்பீலே இல்லை. குழந்தையை வாரியள்ளிக் கொண்டு கீழ்வீட்டு மாமியிடம் காட்டப் போய் விட்டாள். சின்னுவை நினைத்தால் பாவமாய் இருந்தது.
அரைமணியில் சரோ வந்தாள்.
"என்னங்க கிளம்பலையா? ஏழு மணிக்கெல்லாம் நாம அங்கிருக்கணுங்க."
ஆமாம்! மறந்தேவிட்டது. சரோவின் மாமா பெண் ராதாவுக்கு இன்று ரிசப்ஷன். நாளை கல்யாணம்.
ஓஹோ! இப்போது புரிந்துவிட்டது. ஜீன்ஸ் பாண்ட், சட்டை இதற்காகத்தானா ?
பத்து நிமிடத்தில் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தோம். "சரோ. ஆட்டோல போயிடலாமா? நம்ம மூனு பேருக்கும் இந்த மொபெட் வசதியா இருக்காது. சின்னு ரொம்ப சிரமப்படும்."
மெதுவாய் சொல்லி வைத்தேன். அவ்வளவுதான்!
"என்னது... ஆட்டோவா... போறதுக்கே நிச்சயம் முப்பது ரூபா கேப்பானுங்க. திரும்பி வர ஒம்பது மணியாயிடும். நிச்சயம் அம்பதுக்கு குறையமாட்டானுங்க. என்ன, பணம் வீட்ல விளையறதா? சும்மா வாங்க. சின்னுவ எப்படி செளகர்யமா வச்சுக்கணும்னு எனக்குத் தெரியும்".
மறு பேச்சில்லை. மொபெட்டில் உட்கார்ந்த மாத்திரத்திலேயே சின்னு அழத் தொடங்கிவிட்டது. உடனே எனக்கும் சேர்த்து அர்ச்சனை.
கல்யாண சத்திரத்திலும் சின்னுவின் அழுகை தொடர்ந்தது. டிரஸ் ரொம்ப டைட்டாக இருக்கிறது என்று என்னையறியாமல் ஒரு முறை சொல்லிவிட ஒரு முறைப்பில் அடக்கினாள். குழந்தையின் டிரஸ் ரொம்ப பிரமாதம் என்ற சர்டிபிகேட்டை அடிக்கடி வாங்கிக் கொண்டதில் பெருமையோ பெருமை.
நிலை கொள்ளாமல் அழுததில் குழந்தை தூங்கிவிட்டது. ரிசப்ஷன் முடிந்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வர ஒன்பதரை கிவிட்டது.
மறுபடியும் நெரிசலான மொபெட் பயணம். வழியில் முழித்துக்கொண்டு சிணுங்கியது சின்னு.
"சனியனே! அங்கதான் மானத்தை வாங்கினேன்னா வழியிலுமா மானத்தை வாங்கணும்."
சிக்னலில் நிற்கும்போது பஸ்ஸில் இருந்த யாரோ ஒருவர் குழந்தையின் தலை சரிந்திருப்பதைச் சுட்டிக் காட்டவும் சரோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
"சரிதான் போடா!" பஸ் நகர்ந்ததும் சரோ முனகினாள்.
வீட்டில் நுழைந்ததும் சரோவின் ஒவ்வொரு இயக்கத்திலும் கோபம் கொப்பளித்தது. பால் சாப்பிட மறுத்த சின்னுவுக்கு ஒரு மொத்தல். மறுநாள் கல்யாணத்துக்கு வர முடியாது என்பதால் அட்வான்ஸாக அவள் மாமா கொடுத்த முகூர்த்தப் பையை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டதற்காக எனக்கு ஒரு அர்ச்சனை.
ஒரு ரவிக்கையை எடுத்துத் தலையில் இறுக்கக் கட்டிக் கொண்டு தூங்கப் போய்விட்டாள்.
எனக்கு அரைமணி நேர ஆபீஸ் வேலை பாக்கியிருந்தது. எல்லாவற்றையும் முடித்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. படுக்கைக்கு வந்தபோது சின்னு கால் பரப்பி தூங்கிக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் பாண்ட்!
சின்னு ராத்தியில் ஒன்றுக்குப் போகும். ஐய்யையோ! காலையில் புதுத்துணி கெட்டுப் போனதற்குத் திட்டு விழும். நிதானமாகக் கழற்றினேன்.
விடுதலை கிடைத்ததும் சுகமாகப் புரண்டு படுத்துக் கொண்டது. முகத்தில் நிம்மதி துல்லியமாய்த் தெரிந்தது.
சரோ தூங்கிக் கொண்டிருந்தாள். நல்ல வேளை!
Sunday, 11 February 2007
விசுவாசத்தின் விலை
விசுவாசத்தின் விலை
1997 டிசம்பர் 05 குங்குமம்
பெருத்த அவமானமாய் போய்விட்டது செல்லதுரைக்கு. முதலாளியின் நம்பிக்கையை இழப்பதென்பது மானம் மரியாதையை இழப்பதற்கும் மேலானது அல்லவா?
பிரச்சனை இதுதான். செல்லதுரை தற்போதைய முதலாளியான அருண்குமாரின் அப்பா முதன் முதலாய் சின்னதாய் இந்த கம்பனியை தொடங்கிய அந்த நாட்களிலிருந்தே வேலையிலிருப்பவர். பெரிய முதலாளி பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கோர விபத்தில் இரண்டு கால்களையும் இழக்கவும் கம்பெனி செல்லதுரையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தது.
அப்போது அருண் சின்னப் பையன். தற்காலிக ஏற்பாடாய் வெற்று செக்கு புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லதுரையிடம் கொடுக்கும் வழக்கம் பிறகு நிரந்தரமாகிப் போனது. செல்லதுரையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அருணின் அப்பா.
அந்த நம்பிக்கைக்குக் கேடு வந்து விட்டது. அருண்குமார் வீட்டு வேலைக்காரனை அனுப்பி செக் புத்தகத்தை கேட்டிருந்தான்.
பிள்ளை வளர்ந்துவிட்டான். நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறான். நேரடியாகச் சொல்லாமல் இந்த குறுக்கு வழியில் வந்து அவமானப் படுத்தி வெளியேற்ற நினைக்கிறான். கொஞ்ச நாட்களாகவே அருண் கணக்கு புத்தகங்களை பார்ப்பதும் பாஸாகிய வவுச்சர்களை மேய்வதுமாக இருக்கிறான். அதன் உள் அர்த்தம் தற்போது தெள்ளத் தெளிவாகி விட்டது.
செல்லதுரைக்கு வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் இல்லை. அவர் ஒரே பையன் மும்பையில் வசதியாக இருக்கிறான். ஏதோ பெரிய முதலாளியின் விசுவாசத்திற்காக இத்தனை காலம் இருந்தார். இனிமேல் ஒரு நிமிஷம் இருப்பதுகூட மகா கேவலம்.
உடனடியாக டிராவல் ஏஜென்சிக்கு போன் போட்டு ஒரு வாரத்தில் மும்பைக்கு ரயில் டிக்கெட் வாங்கினார். ஒரு வெள்ளைத் தாளை உருவினார்.
"உயர்திரு அருண்குமார் அவர்களுக்கு,
வணக்கம். கம்பனி செக் புக் மட்டும் உங்களுடையது அல்ல. இந்த கம்பனியே உங்களுடையதுதான். இன்றிலிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன். பொறுப்பேற்றுக் கொள்க."
இப்படிக்கு.
உங்கள் அப்பாவின் பரமவிசுவாசியான
செல்லதுரை.
நாலாய் மடித்து ஒரு கவரில் போட்டு பியூன் மூலமாக கொடுத்தனுப்பி விட்டார்.
சுமார் நாலு மணிக்கெல்லாம் செல்லதுரைக்கு இன்னோரு ஆச்சர்யம் காத்திருந்தது. தான் கொடுத்தனுப்பிய செக் புக், ராஜினாமா கடிதம் ஆகியவற்றோடு ஒரு கடிதமும் உள்ளடங்கிய கவர் ஒன்று வந்தது.
செக் புக்கை பிரித்தார். தன் பெயரில் அறுபதினாயிரம் ரூபாய்க்கு செக் எழுதப்பட்டிருந்தது. செல்லதுரைக்கு ஒன்றும் புரியவில்லை. உடனடியாக அருண்குமாரின் கடிதத்தை பிரித்தார்.
"உயர்திரு செல்லதுரை அவர்களுக்கு.
வணக்கம். உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் வரம்பு மீறி விட்டேன். மன்னிக்கவும். கம்பனியின் லாபக் கணக்குகளையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தங்கள் சம்பளம் கடந்த பதினைந்து வருடங்களாக மாறாமலேயே இருப்பது நேற்றுதான் தெரிய வந்தது. இந்த கம்பனி மீது உள்ள உங்கள் விசுவாசத்திற்கு ஈடேயில்லை. எனக்குத் தோன்றிய ஒரு தொகையை செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரமாகச் செய்திருக்கிறேன். நீங்களாக தனக்குத்தானே போட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் ஒரு சுற்று வழியைக் கையாண்டு உங்களை புண்படுத்திவிட்டதற்கு மீண்டும் மன்னிக்கவும்.
இப்படிக்கு
உங்கள் மகனுக்கு சமமான
அருண்குமார்.
செல்லதுரைக்கு முதன் முறையாக அருண் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அப்பாவைப் போலவே பிள்ளை! ராஜினாமாக் கடிதத்தை மிகுந்த மனநிறைவுடன் சுக்கல் சுக்கலாக்கினார்.
Saturday, 10 February 2007
ராணி வர்றா!!!
ராணி வர்றா!!!
1997 நவம்பர் 14 குங்குமம்
"எலேய் சின்ராசு. ராணி இன்னுமா வர்லே?"
பரமசிவத்தின் வரவிலேயே பெரும் பதட்டம் இருந்தது.
"இன்னும் வர்லப்பா. நானும் நொடிக்கு ஒரு தடவை ரோட்டை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்." சின்னராசுவின் பேச்சிலேயே தவிப்பு.
"என்னடா இது. மணி பதினொண்ணு ஆச்சே. கிழக்கிலே போற பஸ்சு கூட போயிடுச்சு."
பரமசிவத்தின் முகத்தில் வியர்வை வெள்ளம். கை. கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.
"போன புதன்கிழமையில கூட இப்படித்தாம்பா ஆச்சு. வர்ற வழியிலே சாதிச் சண்டையாம். ஊரெல்லாம் சுத்தி ராணி பத்தரைக்குத்தான் வந்திச்சு. இப்பக்கூட வானம் மின்னிக்கிட்டு இருக்கு. ஒரு வேளை வழியிலே மழையாய் இருக்கலாம்."
சின்னராசு சொல்லியும் அதை காதில் வாங்கியதும் வாங்காததுமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டருந்தார். மனசு 'ராணி! ராணி!' என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
"சின்ராசு. ஒரு நடை பஸ்ஸ்டாண்டு வரை போயிட்டு வாயேன். ரொம்ப பயமா இருக்குடா. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா?"
பரமசிவத்தின் கண்களில் நீர் தளும்பியது.
"இப்பத்தான் கோவிந்தன் வந்தான். பஸ் ஸ்டாண்டிலே விசாரிச்சானாம். ராணி இன்னும் வர்லையாம். நீங்க கவலைப்படாதீங்க. நம்ப சிவகுருவும் சுப்புணியும்தான் கூடப் போயிருக்காங்க."
சின்னராசு சொல்லி முடிக்கவும் பரமசிவம் இன்னும் கலவரமானார்.
"லேய்... போட்டேன்னா ஒண்ணு. சிவகுரு சரியான தண்ணிப் பேர்வழியாச்சேடா... மாரியாத்தா நீதான் காப்பாத்தணும். என் ராணிய பத்திரமா கொண்டு சேர்க்கணும்."
"சின்ராசு. உள்ளாரப் போயி மாரியாத்தாள நேர்ந்துக்கிட்டு ஒரு மஞ்சத்துணில ஒரு ரூபா காச முடிஞ்சி வைச்சிட்டு ஓடியா. நாம பஸ்ஸ்டாண்டுக்கே போயிடலாம். ஏலேய்... எனக்கு இருப்பு கொள்ளலைடா... போ... போ... ஓடு."
பரமசிவத்தின் தவிப்பு உச்சத்துக்கு போனது.
எதேச்சையாய் ரோட்டை பார்த்தவருக்கு ஆச்சர்யம்!
தூரத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள்!!
மனசில் ஒரு துள்ளல்!! ராணியாக இருக்குமோ? "சின்ராசு. ஓடியாடா. ராணிவர்றாப்பல!"
சின்னராசு தடுக்கி விழாத குறையாக ஓடி வந்தான்.
"ராணிதாம்பா." சின்னராசு குதியாய் குதித்தான்.
"ராணியாடா... ஆத்தா... என் வயத்துல பால வார்த்தே."
பரமசிவம் பஸ்ஸை நோக்கி ஓடினார்.
பளபளவென ஒய்யாரமான அந்த சொகுசு ரூட் வண்டி அரை வட்டம் அடித்து குலுங்கி நின்றது.
'பரமசிவம் பஸ் சர்வீஸ்' என்று மேலே எழுதி முன் கண்ணாடியில்''ராணி' என்று அலங்காரமாக எழுதியிருந்த அந்த புத்தம் புதிய பஸ்ஸை வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருந்தார் பரமசிவம்.
Friday, 9 February 2007
விலகிப் போ காதலா
விலகிப் போ காதலா
1997 அக்டோபர் 17 குங்குமம்
சிவாவை கழற்றிவிடுவது என்று தீர்மானித்துவிட்டாள் மாயா. ஆனால் அதை எப்படி சொல்வது? நேற்று காலை வரை மனதுக்கு பிடித்தவன்தான். தற்போது எல்லாம் தலைகீழாகிவிட்டதே? என்ன செய்ய? சுயநலம்தான். நம் வளமான வாழ்வுதான் முக்கியம்.
இரவு முழுக்க யோசனை செய்ததில் ஒரு கேம் பிளான் தயாரானது. என்ன, ஒரு முறையாவது சிவாவிடம் நேரிடையாக ஐ லவ் யூ சொல்லியிருந்தால்தானே பிரச்சனை? இதுதான் சரி. விஷயத்தை ஒளிக்காமல் கண் முன்னால் சொல்லிவிட்டால் போயிற்று. மாயா இப்போது தயார் நிலையில்.
மாயாவை பொறுத்தவரை தனக்கு லைஃப் பாட்னராக வரப்போகிறவன் ஜம்மென்று வாட்டசாட்டமான அழகனாகவும் இருக்க வேண்டும். கை நிறைய சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும். தவிர, அப்பா மாதிரி நல்லவனாகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் கேட்டு பெறக்கூடிய அளவுக்கு மாயாவிடம் ஒரு அஸ்திரம் இருக்கிறது என்றால் அது அசத்தும் அழகு. அப்படியொரு அழகு.
சிவா எதிர் வீட்டில் இருக்கிறான். மாயா கணக்கில் வீக் என்பதால் தினமும் வந்து கணக்கு சொல்லிக் கொடுக்கிறான். பார்ப்பதற்கு அரவிந் சாமி மாதிரி இருப்பான். ரொம்ப நல்லவன்தான். ஆனால் எம்.எஸ்.ஸி. மாத்ஸ் படித்துவிட்டு சும்மாயிருக்கிறான். வேலையில்லாதவனைப் போய்....
இந்த சமயத்தில்தான் அப்பா திடீரென நேற்று மாலை ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அப்பாவின் தூரத்து உறவில் ஒரு பையன் டில்லியில் சிட்டி பாங்கில் உயர் அதிகாரியாக இருக்கிறானாம். அவன் மாயாவை ஏதோ ஒரு கல்யாண வீடியோ காசட்டில் பார்த்துவிட்டு விசாரித்தானாம். அதிலிருந்து கல்யாணம் என்றால் மாயாவோடுதான் என்று சொல்லிவிட்டானாம். அப்பாவின் வசதியின்மை தெரிந்து கொண்டு வரதட்சணை... நகை... மூச்... என்று சொல்லிவிட்டானாம். அப்பா மாயாவை கல்யாணம் பண்ணியே கொடுத்துவிட்ட மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்.
மாயாவுக்குத்தான் குழப்பம். சிவாவா இல்லை சிட்டி பாங்கா? புதிதாய் திடீரென முளைத்தவன் மிக வசதியாக இருக்கிறான். ஆனால் அவன் யார்? எப்படி? சாதுவா? கோபக்காரனா? கெட்ட சகவாசம் ஏதாவது உண்டா? இல்லையா? ஒன்றும் தெரியாது. என்ன செய்ய?
ஆனாலும் பலத்த யோசனையில் சிவாவை கழற்றிவிடுவது என்று தீர்மானித்து விட்டாள். சிவா இப்படியேதான் இருப்பான். காதலாவது கத்திரிக்காயாவது. மூட்டை கட்டி வை. கணக்குப் போடு.
மணி எட்டு ஆயிற்று. சிவா வந்துவிட்டதாக தங்கை ராஜி சொல்லிவிட்டு ஓடிப் போனாள். மாயா மனதுக்குள் ஒருமுறை ரிஹர்ஸல் செய்து கொண்டாள். கணக்கு புத்தகம் மற்றும் நோட்டுகளை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
சிவா வந்துவிட்டான். எப்படி ஆரம்பிப்பது? சிவாவே மெளனத்தை உடைத்தான். இவள் சொன்னாள்.
சிவா நிமிர்ந்து சற்று நோக்கினான். "அப்ப என் மீது உனக்கு காதல் இல்லை. அதான் அப்பா பேச்சுக்கு தலையாட்டியிருக்கிறாய். ஓகே. பாடத்தை ஆரம்பிக்கலாமா?"
மாயா வியந்து போனாள். ஹா! இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே. "சிவா. நீ உண்மையிலேயே ஜென்டில்மேன்." மாயா உளறிக் கொட்டினாள்.
"அது இருக்கட்டும் மாயா. நீ ஒன்று சொன்னாயே நான் வேலையில்லாதவன் என்று. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு உலகமே மாத்ஸ்தான். நீ கூட அடிக்கடி உப்புக்கு கூட உதவாத மாத்ஸ் என்று கிண்டலடிப்பாய். நான் சட்டை செய்ததில்லை. ஒரு இன்டர் நேஷனல் மாத்ஸ் ஜர்னலில் எனது ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. அதற்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன. நேற்றுதான் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு செமினாருக்கு அழைப்பு வந்துள்ளது. கூடவே அங்கு ஃபேகல்டி மெம்பராக சேர எனது விருப்பத்தைக் கேட்டிருக்கிறார்கள். சகல வசதிகளும் தரவிருக்கிறார்கள். திருமணம் ஆகியிருந்தால் மனைவிக்கும் கிரீன் கார்டு கிடைக்க வழி செய்து தருவதாக எழுதியிருக்கிறார்கள். அப்பா அதைப் படித்ததிலிருந்து பிடிவாதமாக உடனே கல்யாணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உன் விருப்பத்தைக் கேட்டுச் செய்யலாம் என்று வந்தால் உன் முடிவு வேறு விதமாக இருக்கிறது. நான் உன்னை மனதார விரும்பினேன். எப்போது அடிமனதில் காதல் இல்லையோ இனிமேலும் பேசுவதில் அர்த்தமில்லை. பெஸ்ட் ஆஃப் லக் மாயா. சரி. நிறைய போர்ஷன் பாக்கியிருக்கிறது. படிப்பை ஆரம்பிக்கலாமா?"
சிவா பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாயாவுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.
Subscribe to:
Posts (Atom)