Saturday 17 February, 2007

நாய் பட்ட பாடு


நாய் பட்ட பாடு

2006 மே 14 ஆனந்த விகடன்

இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? சொல்லுவது யாவர்க்கும் எளிய. அனுபவப்பட்ட எனக்குத்தானே தெரியும். வாழைப்பழத்தோலில் வழுக்கி மடேரென பின்னங்கால் தூக்கி பிருஷ்டம் வலிக்க விழுந்தால் அது உங்களுக்கு 'கொல்' சிரிப்பாய் இருக்கும். வலி எனக்கு. சிரிப்பு உங்களுக்கு. அதே மாதிரி இந்த வாய் மற்றும் வாய்வு உள்ள அப்பிராணியை ஒரு வாயில்லா மற்றும் வாலுள்ள நாலு கால் பிராணி ஒரு வார காலத்துக்கு பாடாய் படுத்தி சிரிப்பாய் சிரிக்க வைத்ததை கேட்டால் உங்கள் வயிறு புண்ணாகி போக நான் கியாரண்டி.

மிக பெரிய சிந்தனைகள் ஒரு சிறு நொடித்துளியில் உருவாகிவிடும் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அந்த மாதிரி நான் மிகவும் விரும்பும் பருப்பு உசிலியை வெண்டைக்காய் மோர் குழம்போடு ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் போது என் ஆசை மனைவி கமலாவின் சிந்தனையில் உதித்த ஐடியாதான்....

"ஏங்க, நம்ம வீட்டுல நாய் ஒண்ணு வளர்த்தா என்ன?"

ரசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அதில் பாயசத்தை ஊற்றின மாதிரி எனக்கு அதிர்ச்சி. உங்களை வளர்ப்பதோடு அல்லாமல் நாய் வேறு வளர்க்க வேண்டுமா என்று கேட்டு வைத்தால் மேல்கொண்டு மோர் குழம்பு கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. என் மெளனம் கமலாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். பாருங்கள். இந்த சமயங்களில்தான் ஏழரைநாட்டு சனி உச்சம் பெறுகிறது.

"எனக்கொண்ணும் ஆசையில்லை. சின்னதுதான் அடம் பிடிக்கிறது."

அம்மாவின் புடவைக்கு பின்னாலிருந்து பாரதிராஜா ஸ்டைலில் ஒரு கண், அரை மூக்கு, அரை வாய் புன்சிரிப்போடு என் சின்னப் பெண் ஒண்ரையடி ஸ்வேதா எட்டிப் பார்க்க என் போதாத வேளை நானும் சிறிதாய் சிரித்து வைக்க பிடித்தது சனி.

"ஹாய். அப்பா ஓக்கே சொல்லிட்டார்." எனது இரண்டு வாண்டுகளும் கோரஸாக கத்திக் கொண்டே ஓடிவிட நான் நிராயுதபாணியானேன். கமலாவின் முகத்தில் இரண்டு பீட்ஸா சாப்பிட்ட பெருமிதம்.

"அதெப்படீங்க. குழந்தைகள் கேட்டா உடனே சரின்னு சொல்லிடறீங்க. நான் ஏதாவது கேட்டால் நாலு நாளுக்கு பதிலே வராது." கமலா தன் கவலையை இலவச இணைப்பாக வைத்தாள். நான் எங்கே சரின்னு சொன்னேன் என்று இந்த கேடு கெட்ட நேரத்தில் போட்டு உடைத்தால் பெரிய பிரளயமே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எல்லாம் வல்ல அந்த சனியின் மீது பாரத்தை போட்டு விட்டு வரப்போகிற சிக்கல்களுக்கு என்னை நானே நொந்து கொண்டேன்.

அதன் பிறகு எல்லாம் கிடுகிடுவென நடந்தன. மறுநாள் மாலையில் நான் 150 வவுச்சர்கள், மேனேஜரின் 1000 வாலா வசவுகளோடு சிக்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கும் போது எனது இரண்டு பெண் பிள்ளைகளின் தலைகள் லெட்ஜருக்கு மேலே ஏத்தலும் குறைச்சலுமாக தெரிந்தன.

“அப்பா. ஷாலுவை பாக்க போவேண்டாமா? அம்மா கீழ வெயிடிங்.” இது பெரிய பெண் சஞ்சனா.

“ஷாலுவா?”

“ஐய்ய. இது கூட தெரியலையா, நம்ம வாங்கப்போற டாகியோட பேரு. டாகின்னா டாக். டாக்னா நாய். சீக்கிரம் வாப்பா.” இது என் அரை டிக்கெட் ஸ்வேதா.

மேனேஜரிடம் கைகால்களில் விழுந்து கெஞ்சி கூத்தாடி கையதுகொண்டு மெய்யது பொத்தி தலையை சொறிந்து அசடு வழிந்து எப்படியோ பர்மிஷன் வாங்கி கீழே வருவதற்குள் கமலாவின் கமலா ஆரஞ்சு சைஸ் முகம் பூசணிக்காயாக இருந்தது.

“இப்பவாவது வந்தீங்களே. அஞ்சரைக்கெல்லாம் கென்னல் ஷாப் குளோஸ் ஆயிடும்ன்னு காலைல படிச்சு படிச்சு சொன்னேனே.”

என்சைக்ளோபீடியா மாதிரி ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். வழ வழ பேப்பரில் கலர் கலராய் நாய் படங்கள். சம்திங் ராங். சனீஸ்வரா!

“அப்பா. ஷாலுவ எப்படி பாத் செய்யனும். என்ன ஃபுட் குடுக்கனும்னு யாரையும் கேட்கவே வேண்டாம். அம்மா ஒரு புக் வாங்கியிருக்கா. ஜஸ்ட் செவன் ஹன்ட்ரட் ரூபீஸ் ஒன்லி.”

“20% டிஸ்கவுன்ட்ன்னு சொல்லுடி”

“ஆமாப்பா. அப்பறம் அந்த செயின்...”

“சஞ்சு சும்மாயிரு. எல்லாத்தையும் இப்பயே சொல்லனுமா?”

காரின் பின்ஸீட்டில் ஏகமாய் கேரிபேக்கில் சிக்கலாய் என்னென்னவோ இருந்தன. கிரெடிட் கார்டில் ஆட் ஆன் கார்ட் வாங்கி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பத்தான் உறைத்தது.

கென்னல் ஷாப்பில் ஏகமாய் நாய் குட்டிகள். விதவிதமான குரைப்புகள். கண்ணுகுட்டி சைசில் அல்சேஷன்களை பார்த்ததும் அஞ்சு தலை ஆதிசேஷனை பார்த்த பயம். அதன் முதலாளிக்கு கூட பாதி முதுகு வரை முடியிருந்தது. அந்த கறுப்பு கண்ணாடியும் ஒற்றை காது தோடும் என்னை கொஞ்சம் கலவரப்படுத்தியது. அவர் ஹவ் டு யூ டூ என்றதற்கு நான் அசடு வழிந்து அக்கம் பக்கத்தில் நாய் ஏதாவது இருக்கிறதா என்ற தேடலிலேயே இருந்தேன். கமலா என்னவோ தன் ஒன்றுவிட்ட மாமாவிடம் பேசுவது மாதிரி ஆரம்பித்துவிட்டாள். ஊதுகுழலுக்கு கால்கள் முளைத்தமாதிரி ஒரு குட்டி ஒன்று என் கால்களை நக்க நான் சுவற்றில் பூச்சி மாதிரி ஒட்டிக் கொண்டேன். அதன் பக்கத்திலேயே நூல்கண்டுக்கு நடுவகிடு எடுத்து வாரிவிட்ட மாதிரி இன்னோரு குட்டி நாய். பூதாகரமாய் ராமாயணத்தில் திரிசடையை பற்றி படித்திருக்கிறேன். இந்த சின்ன முழு சடை நாயின் முன்பகுதி எது என்று நான் கேட்டுவிட ஏதோ கிண்டல் செய்வதாக செல்லமாக கோபித்து கொண்டுவிட்டார்கள்.

ஒருவழியாக ஷாலு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உடனடியாக அனைவருக்கும் ஸ்வீட்ஸ் வழங்கப்பட்டது. ஏதோ ஒரு அரையடி ஸ்கேல் சைசுக்கு நாய் வரப்போகிறது என்று பார்த்தால் அரைகிலோ சதையை ஒரே கவ்வில் எடுக்கக் கூடியதைத்தான் எனக்கு ஷாலு என்று அறிமுகப்படுத்தினார்கள். நான் பார்த்த கோணம் தவறா என்று தெரியவில்லை. அது என்னை அந்நியனாய் பாவித்து உர் என்றது.

மேடையில் தலைவருக்கு மரியாதை அளிப்பது போல ஷாலுவுக்கு புத்தம் புதிய சீப்பால் வாரப்பட்டது. அலங்கார கழுத்துப்பட்டையென்ன, வாசனாதி திரவியங்களென்ன, பாண்டு வாத்தியங்கள் மட்டும்தான் குறைச்சல்.

காலனியில் கமலாவை பிடிக்கமுடியவில்லை. ஸ்வீட்சும் கூல்டிரிங்க்சும் தண்ணிபட்ட பாடாயின.

“கங்கிராசுலேஷன்ஸ். நாய் வாங்கியிருக்கீங்களாமே. எவ்வளவு ஆச்சு?”

நான் முழியாய் முழித்தபோதெல்லாம் ஆபத்பாந்தவியாய் கமலாதான் வந்தாள்.

என்ன ஜாதி? என்று ஒருவர் கேட்டுவிட 'பாமரேனியன்' என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்து என் அறியாமையை வெளிப்படுத்திவிட மறுபடியும் கமலாதான் வரவேண்டியிருந்தது.

“பமரேனியனா? என்ன உளர்றீங்க? (வழக்கம் போல என்று சேர்த்துக் கொள்ளவில்லை). இது அல்சேஷன் டாபர்மேன் கிராஸாக்கும்.”

'மம்மி. கிராஸ்னா என்ன?' என்று ஸ்வேதா கேட்டு வைக்க டாப்பிக்கை மாற்ற பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது.

காலையில் தினமும் கண்விழித்தால் கைதொழும் தேவதையம்மா என்று உருகும் உண்ணியின் பாடல் எனக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த ஷாலுதான். எனக்கு காலையில் நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைதான் நல்ல தூக்கம் வரும். அந்த அர்த்த ராத்திரி நித்திரையிலிருந்து என்னை மூஞ்சியில் தண்ணீர் ஊத்தாத குறையாக எழுப்பி என் கையில் ஷாலுவை கொடுத்துவிடுவாள்.

எனக்கோ தூக்க கலக்கம். இதுவோ கீழே படி இறங்குகிற வரைக்கும் கொஞ்சலோ கொஞ்சல். தாடை தொடை என்று அனைத்து பாகங்களையும் நக்கி என்னை கிட்ட தட்ட ஆங்கில எஸ், இசெட் வடிவங்களாக்கி பாடாய் படுத்தும். ரோட்டில் போனதும் அதை கன்ட்ரோல் செய்யவே முடியாது. புதிதாக ஆட்டோ ஓட்டினால் எப்படி ஒரு பக்கமாக இழுத்துச் செல்லுமோ அது மாதிரி போய் கொண்டேயிருக்கும். சங்கிலி என் மணிக்கட்டில் இழுபட்டு இழுபட்டு காய்த்து போய்விட்டது. வலக்கையில் சங்கிலியின் டென்ஷன் என்றால் இடக்கையில் ஒரு குச்சி. வேறென்ன? மற்ற தெரு நாய்களை விரட்ட. எங்கோ ஒரு தெரு நாய் தான் பாட்டுக்கு போய் கொண்டிருக்க ஷாலு அனாவசியமாக அதை வம்பிழுக்கும். அப்புறம் என் பாடு திண்டாட்டம். குச்சுபுடி டான்ஸ் மாதிரி என் குச்சிபிடி டான்ஸ் நடக்கும். மாஜிக் நிபுணன் மாதிரி என் வலதுகை சங்கிலியும் இடதுகை குச்சியும் தெருநாய் ஷாலு பொசிசனுக்கு ஏற்ப மாறி மாறி.... ஏக அவஸ்தை போங்கள்.

இதைவிட கொடுமை இன்னொன்று நடந்தது. ஷாலு தெரியாத்தனமாக ஒரு மெகா வில்லனை சீண்டிவிட ரிவர்ஸ் கியர் விழுந்துவிட்டது. ஷாலுவின் வால் உள் பக்கமாக போய்விட என் குச்சிபிடி நடனம் களறி பயிட்டு லெவலுக்கு போய்விட்டது. எதிரியின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்கமுடியாமல் ஷாலு சங்கிலியை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட நான் அந்த சங்கிலியை பொறுக்க வட இந்தியர்கள் செய்யும் நமஸ்காரம் மாதிரியும் நூலறுந்த பட்டத்தை பொறுக்கும் சிறுவன் மாதிரியும் சந்தி சிரிக்க ஓடியிருக்கிறேன். வெறும் கையோடு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னதில் மூவரும் நானே போய்விட்ட மாதிரி ஒப்பாரி வைக்க ஆட்படையை திரட்டிக் கொண்டு அரை மணி தேடுதலில் ஷாலு மறுபடி கிடைத்து கமலாவின் வயிற்றில் பாலை வார்த்தது. என் காஸ்ட்லியான பேன்ட் நாசமாய் போனது. கீழே விழுந்து முட்டியை சிராய்த்து கொண்டதற்கு டாக்டர் மற்றும் மருந்து செலவு மட்டும் 150 ரூபாய் ஆனது.

ஷாலு என் நிம்மதி மற்றும் சரீரத்தை மட்டும் பதம் பார்க்கவில்லை. பர்சையும் சேர்த்துதான். வீட்டில் நாய் வளர்ப்பை பற்றி விதவிதமான புஸ்தகங்கள். சஞ்சுவும் ஸ்வேதுவும் சாப்பிட்டார்களோ என்னவோ ஷாலுவுக்கு ராஜ உபசாரம். ராத்திரியில் அதுவும் எங்களோடு ஏசி ரூமில்தான் இருக்கும். நல்லவேளை பெட் மேலே இல்லை. ஒரு முறை நடுராத்திரியில் முழிப்பு வந்து தொலைக்க நான் இருட்டில் ஷாலுவின் கண்களை பார்த்து கிட்டதட்ட பேய் என்றே தீர்மானித்துவிட்டேன். முட்டை என்று எழுதினாலே குமட்டிக் கொண்டு வரும் கமலா வாட்ச்மேனிடம் நூறு ரூபாய் கொடுத்து ஷாலுவுக்கு மட்டன் கொடுக்கச் சொன்னாள். வெட்டினரி டாக்டரோடு ஷாலு சம்பந்தமாக விசாரித்ததற்கே போன் பில் 1000 ரூபாய் ஆகியிருக்கும். பார்ப்பதற்கு சின்ன கன்னுகுட்டி மாதிரி இருந்தாலும் ஷாலு இன்னமும் குழந்தைதான். வீட்டு ஹால் என்ன பெட்ரூம் என்ன என்று விவஸ்தையே இல்லாமல் எல்லா இடங்களிலும் நம்பர் ஒன் மற்றும் இரண்டு போய்விடும். அந்த நேரங்களில் கமலா சந்தேகத்துக்கு இடமில்லாமல் பிசியாக இருப்பாள். சமையல்கட்டில் தோசைக்கு 'சொய்ங்' என்று சத்தம் வந்தாலே ஷாலுவுக்கு மூக்கில் வியர்த்துவிடும். அதற்கு ரெண்டு போடுகிற வரை அதன் விதவிதமான சத்தங்கள் நிற்காது.

இப்படியாக இந்த சனி திசையிலிருந்து எப்படி விடுபடப்போகிறேன் என்று தினமும் புலம்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மத்தியான வேளையில் எனக்கு போன் வந்தது. சஞ்சுதான் பேசியது.

“அப்பா. ஷாலு அம்மாவை கடிச்சுடுத்து. கீழாத்து மாமி அம்மாவை சரண்யா நர்சிங் ஹோமுக்கு அழைச்சிண்டு போயிருக்கா. நீ நேரா அங்க வந்துடு. வரும் போது அம்மா ஏடிஎம்ல ஃபவ் தெளசண்ட் எடுத்துண்டு வரச் சொன்னா. உடனே வா.”

அலறியடித்துக் கொண்டு போனால் நர்சிங் ஹோம் வாசலில் ஸ்வேது கமலாவின் செல்லும் கையுமாக நின்று கொண்டிருந்தது.

“அப்பா. ஷாலு பேட். அம்மாவை பைட் பண்ணிடுத்து.”

கமலாவை பார்க்க பாவமாக இருந்தது. குதிகாலுக்கு சற்று மேலே நன்கு வெடுக்கென கடித்திருக்கிறது. சாதாரணமாகவே கொஞ்சம் ஸ்தூல சரீரம். வீக்கத்தில் இன்னும்... வேண்டாம். கடியைவிட போடப்போகிற ஊசிகளை பற்றிய பயம் அவளுக்கு. சாதாரண ஊசிக்கே கத்தி அமர்க்களம் செய்யும் குழந்தை குணம். மெதுவாக மூடு பார்த்து ஆரம்பித்தேன்.

“நான் சொல்லலாம்னுதான் இருந்தேன். நாயெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு. நீங்கள்ளாம் கேட்டாதானே.”

“ஆமாங்க. நீங்க சொல்லறதுதான் சரி.” இந்த சமயத்தில்தான் என் ஆசை மனைவி தேனாய் பாயும் ஒரு விஷயத்தை திருவாய் மலர்ந்தருளினாள்.

“நான் கென்னல் ஷாப்ல பேசிட்டேங்க. அவங்க ஷாலுவ திருப்பி எடுத்துக்கறதா சொல்லிட்டாங்க. இப்பவே கொண்டு விட்டுட்டு வாங்க.” கமலாவுக்கு எதை செய்தாலும் இன்னிக்கே இப்பவே இந்த நிமிடமே என்பதுதான்.

வீட்டுக்கு போனால் எதுவுமே நடக்காத மாதிரி ஷாலு ஒரே ஆர்பாட்டம். “ஷாலு நீ திரும்பி போகிற வேளை வந்துடுத்து.” நான் சங்கிலியை கழற்றினேன்.

ஷாலுவுக்கு ஒன்றும் புரிந்ததாக தெரியவில்லை. வழக்கம் போல வாக்கிங் என்று நினைத்துவிட்டது. காரில் போகும் போது ஏகத்துக்கு அட்டகாசம் செய்தது. ஆனால் எல்லாமே கொஞ்சலும் குதூகுலமும்தான்.

கென்னல் ஷாப்பில் விட்டபோது எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகி போய்விட்டது. நான் ஷாலுவை விட்டு விலகி வந்து காரில் ஏறி ஸ்டியரிங்க் பிடித்து திரும்பி பார்த்த போது அதன் கண்களில் வெளிபட்ட சினேகம் என்னை தடுமாற வைத்தது.

மறுபடியும் தப்பு செய்கிறோமோ? ஷாலு. நீ என்னை படுத்தியெடுத்தாலும் ஐ லவ்யூடா.

கமலாவின் வாத்தைகளை என்னால் மீற முடியவில்லை. கண்கள் கசிய, காரை நகர்த்தி, வேகமெடுத்தேன்.

1 comment:

Unknown said...

சார்,

முதல் பாராவைப்படித்ததுமே முன்னர் விகடனில் வாசித்தது நன்றாக நினைவுக்கு வந்துவிட்டது.

மீண்டுமொருமுறை வாசித்தேன்.